ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
ஆண்டவன் நமக்களித்த
அழகான ஒருநாள்!

ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!

அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!

குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!

உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உஷ்ணம் தீர உடம்பில்
உம்மா தேய்த்த எண்ணெய்!

எண்ணெய்ப் பிசுக்கெல்லாம்
எங்கெங்கும் மிதக்க
வெட்டிக்குளமெல்லம்
தொட்டு விளையாட்டு..
உள்நீச்ச லோடு
கண்டு விளையாட்டு!

புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...

உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!

கண்களில் சுர்மா
கையில் சீக்கோ ஃபைவ்
கால்களில் கித்தாச் செருப்பு
கைக்குட்டைக்குள்ளும்
யாட்லி பவுடர்...

சங்கு மார்க்கு லுங்கி
டெட்ரெக்சில் கம்சு சட்டை
சில்லென்ற ஹவ்தில்
ஒலூச் செய்ய நனையும்

தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!

ஊருக்கே உரித்தான ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!

பெருநாள் காசு பைக்குள்ளே
திருநாள் தொழுகை நிறைவேற்றி
தோள்தழுவி வாழ்த்தி
சந்தோஷ தருணங்களை பகிர்வோம்!

உப்புக்கண்டம் சப்புக்கொட்டி
வர்ணங்களிலும் வடிவங்களிலும்
வார்த்துவைத்த கடப்பாசி
வாய்க்குள் கரையும் வட்லப்பம்
இடியப்பம் சவ்வரிசி
ரொட்டி எறச்சானம்...

அதிரைபட்டினத்தின் அந்தகால பெருநாள்!

இன்றோ...
நெட்காலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்
மூடிய இமைகளுக்குள்
முடிவற்ற நினைவுகளிலும்
செல்ஃபோனில் சேகரித்த
செல்லுலாய்டு முகங்களிலும்
சட்டென முடிந்துபோகிறது

பெருநாள் சந்தோஷங்கள்!!!

எழுதியவர் : (5-Oct-17, 3:54 pm)
பார்வை : 1319

மேலே