யாருக்கு தீபாவளி
யாருக்கு தீபாவளி?
தமிழ் கூறும் நல்லுலகில்
சாதிகள் இல்லை மதங்கள் இல்லை!
பேதங்கள் இல்லை பிரிவினைகள் இல்லை!
வேதங்கள் இல்லை தீ வேள்விகள் இல்லை!
அறம்சார் குழுமம் தமிழ் சமூகமடா!
மண்ணையும் மக்களையும் இரண்டற கலந்து
ஒன்றாய் நேசித்த வாய்மை குடியினர்.
அன்புடைமையே வாழ்வு என்று முழுதாய் உணர்ந்து
வையமெல்லாம் வாழ்வாங்கு வாழ வகை சொன்ன கூட்டமடா!
தம் அறிவை அறிவியலை வாழ்வியலாக மாற்றி
பன்னெடுங்காலம் வாழும் பனைகளில் குறித்து வைத்து
பாடம் எடுத்த இனமடா!
ஆடு மாடு காடு வீடு என
பம்பரமாய் சுற்றி சுற்றி
உழவை உழைப்பை கற்றுத்தந்த மாந்தர் நம்மவரடா!
தீயவை பயக்கும் யாவற்றையும் தோள் நின்று தகர்ப்போம் என
ஒருமைப்பாடு வாழ்வியல் எங்களுடையது!
எது தீயது என்பதில் பெரிய விளக்கங்கள் தேவையில்லை
புல்லை பூண்டுகளை
காற்றை மலைகளை
ஆறுகளை ஏரிகளை
மண்ணுக்கு உள் உறையும் அனைத்தையும்
ஊரும் நீரையும்
நச்சாக்க நினைக்கும் அனைத்தும் தீமையே.
கேள்வி எழுகிறது "மனிதன் பட்டியலில் இல்லையே" என.
அவை வாழாவிட்டால் மனிதன் பட்டியலிலே இல்லை தான்.
எவை விழாக்கள் ? எது கொண்டாட்டம்?
பட்டியலிட்ட யாவையும் போற்றுவதே.
எதிர் நிற்கும் யாவும் தமிழர் நம் கொண்டாட்டமல்ல.
பழக்கமாகிவிட்டது என்று சொல்லி பண்டிகைகளை விட முடியவில்லை உண்மைதான்.
காற்றை நச்சாக்கும் பட்டாசுகளையாவது விட்டொழிப்போம்!
தமிழ் மான ராவணனை, நரகாசுரனை அரக்கனாக்கும் மனநிலையை அறுத்தெடுப்போம்!
வீடெங்கும் தீபங்களின் ஆவளி நிறையட்டும்!
இந்த புவியில் எதிர்வரும் பிள்ளைகள் வாழ வாய்ப்பு அளிப்போம்!