சிறைப்பறவை - ஒரு பக்க கதை- கவிஜி

சிறைப்பறவை - ஒரு பக்க கதை- கவிஜி

"இந்த காட்டுக்குள்ள எங்க போயிட்டு இருக்க........"

"இல்ல...வீக் எண்டு ஆச்சுன்னா எனக்கு இப்படி காட்டுக்குள்ள சுத்தறதுதான் பழக்கம். பழக்கம்ங்கறத விட பிடிச்ச விஷயம். வாரம் முழுக்க மனுஷங்க கூட போராடி போராடி நான் செத்தே போன மாதிரி ஒரு பீல். அதான்... இப்படி எந்த வாகன இரைச்சலும் இல்லாம தனிமையை தேடி காட்டுக்குள்ள வந்தர்றது.......ஆமா......! நீ யாரு....? இங்க என்ன பண்ற...?"

"நல்ல கேட்ட போ... இது என் காடு.... இந்த காட்டோட தத்து புள்ளைன்னு வெச்சுக்கோ.... ஆனா எனக்கு பிடிக்காது... ஒரு சிறைக்குள்ள இருக்கற மாதிரி இருக்கு..."

"என்னப்பா இப்டி சொல்ற... எவ்ளோ பசுமையான காட்சிகள். மனசு நிறைஞ்ச வாழ்க்கை. நல்ல..... காத்து. தெளிஞ்ச நீரோடை... ப்ப்பா........வாழ குடுத்து வைச்சிருக்கணும்...."

"இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்லுவாங்க தெரியுமா......? அது தான் நிஜம். எல்லாமே அந்த பக்கம் நல்லாதான் இருக்குனு சொல்ற மாதிரி தான் எதுவும். ஆனா எல்லாமே இந்த பக்கம்தான்"

"புரியலையே..."

"நிறைய விஷயம் புரியாது......அப்போதான் அது புரிஞ்சு வாழ்க்கை..."

"பாக்க அப்பாவியா இருக்க... இவ்ளோ அழுத்தமா பேசுற..."

"பார்வைகள்ல ஒண்ணுமே இல்ல...... பாவனைகள்லதான் உருவம் இருக்கு..."

"சரி......நோ பிலாசபி.... போர் அடிக்குது... எனக்கு காட்ட சுத்தி காட்டு ஆதி மனுஷி"- என்று சொல்லி கண்ணடித்தான்.

"நகரத்துக்காரன் வேலையை காட்ற பாத்தியா..." என்றவள் முகம் முழுக்க சிரித்தாள்.

ஒற்றை மூக்குத்தி....மஞ்சள் தாவணி என்று... பார்க்க சாமி சிலை மாதிரி இருந்தாள்.

"என்ன அழகா இருக்கேனே...? பிடிச்சிருக்கா...? என்றாள் ஒற்றை புருவம் தூக்கி.

"நல்லாதான் இருக்க... உன் முகத்தை பாக்க பாக்க மனசுக்குள்ள உன் காட்டு நீரோடை தவளை மாதிரி எட்டி எட்டி குதிக்குது....." என்றான்... கண்கள் அகல விரித்து.

"ஏ.......ய்........ இப்படியெல்லாம் யாருமே என்கிட்ட பேசினது கிடையாது. எனக்கு கேட்ட குரல் எல்லாம் அழுகையின் குரலும்... ஆங்காரத்தின் குரலும் தான்..."

"ஏ.............ன் அப்டி....."

"ஏன்னா......இந்த வாழ்க்கை அப்டி.." என்றவள் சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தாள். "எனக்கு பிடிக்கல.. என்ன கூட்டிட்டு போய்யறியா...? இங்க நான் சிறை பட்ட பட்டாம் பூச்சிப்பா"- அவள் கெஞ்சினாள்.

"என்ன இவ்ளோ ஈஸியா சொல்ற.. கூட்டிட்டு போய்ட்டா......உன்ன தேட மாட்டாங்களா... ஏதும் பிரச்சினை வந்துட்டா...?"- அவன் மரத்தில் சாய்ந்து கொண்டு நிழலில் இசைந்திட்டது போல இலைகளின் இடைவெளியில் திசை தாண்டி வந்த சூரியனை பிடித்திழுத்தான்.

"தேடத்தான் செய்வாங்க...... பிரச்சனை வரத்தான் செய்யும். அதையெல்லாம் பார்த்தா பிடிச்ச வாழ்க்கையை வாழ முடியுமா....?"

சிறு யானையின் பெரும் யோசனையைப் போல அவன் மௌனித்திருந்தான்.

"சரி.. நாளைக்கு காலைல இதே நேரம் இங்க நில்லு.. நான் ரெசார்ட்ட காலி பண்ணிட்டு வந்தறேன்... என் தண்டெர் பேர்ட்ல பறந்திடலாம். வா.. உலகத்தை சுற்றி காட்டுகிறேன் பெண்ணே" என்று நெற்றியோடு நெற்றி முட்டினான்.

நிலவை யோசித்தது இடையில் புகுந்த சூரியன்.

அடுத்த நாள்

அவன் காத்துக் கொண்டே இருந்தான். அவள் வரவில்லை. அவனின் கண்கள் காடெங்கும் வண்டாய் பறந்தது. வண்டின் அடித் தொண்டை கனமாக மனதுக்குள் இனம் புரியாத வலியோடு அவன் அதே நிழலோடு நின்று கொண்டிருந்தான். அவனைத் தாண்டி சிறு கூட்டம் ஆணும் பெண்ணுமாக..... குழந்தைகள் முதியோருமாக காட்டுக் கோயிலை நோக்கி போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருந்தார்கள். அவன் பார்த்து பார்த்து கண்கள் பூத்து மனது காய்த்து ஒற்றையடியில் காட்டை விட்டு வெளியேறத் தொடங்கினான்.

காட்டுக் கோயிலுக்குள் சாமி சிலையாக அமர்ந்திருந்த அவளின் கத்தலும் கதறலும்......யாரின் காதுக்கும் கேட்கவில்லை. முக்கியமாக அவன் காதுக்கு கேட்க வாய்ப்பே இல்லை.

"இரு வந்தர்றேன்... இவுங்கள தாண்டி வர முடியல.......காத்திரு....... வந்தர்றேன்....காத்திரு....... இந்த சிறைலருந்து என்ன காப்பாத்து....."

அந்த சாமியின் அழுகை எப்போதும் போல இனி இப்போதும் நிற்கப்போவதில்லை.


கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Oct-17, 7:13 pm)
பார்வை : 345

மேலே