காளையின் பெருமை

இந்த வாரம் திங்கள் முதல் சனிக்கிழமைவரை.. வல்லமை மின் இதழின்.. 129 வது, படக்கவிதைப் போட்டியில் நடுவர் திரு மேகலா ராமமூர்த்தி அவர்களால் பாராட்டுப் பெற்ற கவிதை.

=====================
காளையின் பெருமை..!
=====================

காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்!
பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்!
தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
……….தொய்ந்துயரச் சற்றேபக்க வாட்டில் சாயும்!
வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்!


முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்!
கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்!
கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்!
போட்டியென வந்துவிட்டால் போதும் அது
……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்!


வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு!
ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை!
பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்!
நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்!

===============================================

கவிதைப் போட்டியின் நடுவர் அவர்களின் பாராட்டுரை....

”உழவனின் உயர்நண்பனாய்த் திகழும் காளை, போட்டியென்று வந்துவிட்டால் சிங்கமாய் சீறிப் பாய்ந்து மானுடக் காளைகளை மிரளவைக்கும்; அரளவைக்கும். திமிர்கொண்ட காளையரைத் திமில்கொண்ட காளை தன் கொம்பிலே குத்தித் தூக்கும்; கடுமையாய்ப் பாய்ந்து தாக்கும்” என்று சல்லிக்கட்டுப் போரில் காளை நிகழ்த்தும் வீரசாகசங்களை நம் கண்முன் அழகாய் வி(வ)ரிக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்...09 -10 - 17

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (10-Oct-17, 10:30 am)
பார்வை : 461

மேலே