வாசித்தேன்

உன் விழியசைவு
ஒரு எழுத்தைப்போல
எனக்குத் தெரிய
எதேச்சையாக தான்
எட்டிப் பார்த்தேன்
நான்

பின் அது
ஒரு வார்த்தை
என நினைத்து
வாசிக்கத் தொடங்கினேன்

இல்லை என்று
சிமிட்டிய உன் விழிகள்
ஒருவேளை
ஒரு வரிபோல
என நினைத்து
தொடர்ந்தேன்

இல்லை என்று
சிரித்த உன் விழிகள்
ஒருவேளை ஒருபக்கமோ
முனகலோடு தொடர்ந்தேன்
முழுதாய் படித்திட்டேன்
முழுதாய் தொலைந்தேன்
முடிந்ததென நினைத்தேன்

இல்லை என்று
சிரித்த உன் விழிகள்
என்ன என்று
தெரியாமல் தொலைந்த
என் இதயம் ...
தயக்கத்தோடு கொஞ்சம்
பக்கத்தைப் புரட்ட
முடியாமல் நீண்ட
உன் பக்கங்கள்
என் கனவுகளின்
புத்தகமானது ...


முழு மூச்சாகப்
படித்து முடித்து
முற்றும் பார்த்து
மூச்சு விட்ட
என்னைப் பார்த்து
சிரிக்கும் உன் விழிகள் ..
புத்தகத்தின் பாரத்தை
எனக்குள் ஏற்றி
புதிய புத்தகம்
ஒன்றின் முதல்
பக்கத்தோடு மயக்கும்
விழியோடு நிற்கிறாய்
தேவதை பெண்னே
என் எதிரில்

போதும் விளையாட்டு
உன் விழிக்குள்
என்னை விடு ..
தினம் தினம்
உன் விழிக்குள்
சிறைப்பட்டு ஒரு
கைதியாவதைவிட
உன் விழிக்குள்
என்னை விடு ...
உன் நூலகத்துக்கு
நான் சொந்தக்காரனாகி
சாவகாசமாய் படித்துக்
கொள்கிறேன் !

உன் விழிக்குள்
என்னை விட்டுவிடு
உன்னை வாசிப்பதே
என் சுவாசமாகி
வெகுநாள் ஆகிவிட்டது
வெளியே மூச்சு
திணறுகிறது எனக்கு !

****************
உன் கருப்பு வெள்ளை
புத்தகத்துக்குள் தொலைந்து
போன வண்ணங்களாய்
என் இதயம்
பாடசாலையில் விளையாட்டை
தொலைத்த சிறுவனாய்
உன் விழிகளுக்குள்
என் வாழ்க்கையை
தொலைத்த சிறுவனானேன்

எழுதியவர் : யாழினி வளன் (11-Oct-17, 3:06 pm)
Tanglish : vasiththen
பார்வை : 5800

மேலே