இது என் தேவதைக்காக

சஹானா..
இந்த ராகம் உதித்தது
என் சோகம் மறைந்தது
என் வீடு அரண்மனையல்ல
நான் அரசனுமல்ல
ஆனாலும் - இவள்
எனக்கு இளவரசிதான்
திருவாரூர் தேர்
வடம் பிடிக்கும் அழகா அழகு?
இல்லவே இல்லை
என் அருமை மகள்
அடம் பிடிக்கும் அழகே அழகு.
என் வார்த்தைகளைப்
புரிந்துகொள்ள
அவள் வயது தடையாக இருக்கலாம்
இருந்தாலும் எழுதுகிறேன்
ஒரு நம்பிக்கையில்
கடவுளுக்குக்கூட புரியாதிருக்கலாம்
அர்ச்சனைகள் - ஆனால்
என்றேனும் ஒருநாள்
என் தேவதை உணர்ந்திடுவாள்
என் தேன்மொழிச் சொற்களை
அன்பையும்ம் மகிழ்ச்சியையும்
தரும் பெண்ணெல்லாம்
நமக்குத் தாய்தான்
அந்த வகையில்
அவள் எனக்கு
அன்பையும், மகிழ்வையும் பெரியதாய்
அள்ளிக்கொடுத்த பெரிய தாய்
நான் வாசல் கடக்கும்போதெல்லாம்
என்னுடன் வருவதற்காக அழுகிறாள்
அங்குதான் விட்டுவிட்டு வருகிறேன்
ஆனாலும் - அவள்
என்னோடுதான் வருகிறாள்
என்னோடுதான் இருக்கிறாள்
சிரிக்கும் அதரங்களால்
காட்சி தரும் தேவதை
சிலிர்க்கும் சேட்டைகளால்
அவள் தருவதோ தேன்வதை
சிலர் அழகைப் பார்த்தால்
அழுகைதான் வரும் - ஆனால்
இவள் அழுகைக்கூட
அழகையே தரும்
உயரும் எண்ணமும்
உழைக்கும் திறமையும்
எப்போதும் உண்டெனக்கு
இருந்தாலும்
வாழ வழி தெரியாமல்
செல்லத் திசை தெரியாமல்
கவலைகடலில்
தவித்த எனக்கு - அவளின்
களங்கமில்லாப் புன்னகைதான்
கலங்கரை விளக்கமாக இருந்தது
தும்பைப் பூப்போல் தூய்மையாய்த்
தரித்தவள்
தூங்காத இரவுகளையே
தருகிறாள்
சிலநேரம்
அவள் செய்யும் அல்லரிக்கு
அடிக்கத்தான் தோன்றுகிறது
எனக்கு வலிக்குமேயென
என்னுள் அடங்கிப்போகிறேன்
அவளுக்கு உணவை ஊட்டும்முன்
நம் உதிரம் வெளியேறிவிடுகிறது
பசிக்கும்போதும்
வாய் தர மறுக்கிறாள்
எதையாவது
ரசிக்கும்போதுதான்
வாயையே திறக்கிறான்
கலங்கிடும் இதயத்தையும்
தேற்றிடுவாள் தன பூமுகத்தால் -மனதில்
பூகம்பமே வந்தாலும்
பூந்தென்றலாக்கிடுவாள்
இந்தப் பூமுகத்தாள்
அவள் - தன்
மலர் போன்ற பாதங்களால்
மனம் போல சிரித்துக்கொண்டே
சைக்கிள் மிதித்து நகர்கையில்
ஆனந்தச்சக்கரத்தில்
அற்புதமாய்ச் சுழல்கிறது
என் குழந்தை மனம்
அலைமகள்,
மலைமகள்,
கலைமகள் - மூன்றும்
கலந்த கலவைதான்
நானென்று
சிரித்துக்கொண்டே சொன்னாள் - இந்த
சிலைமகள்
அவள் என்னை அன்பால்
அடிமையாக்கிய அம்பாள்
அவள் பிறப்பு இல்லையென்றால் -
என்றோ என் நிலை
ஆகியிருக்கும் அம்பேல்.
பூ விரியும் அழகு தெரிகிறது
அவள் புன்னகை புரிகையிலே
பிறைநிலா நகர்கிறது - என்
பிள்ளைநிலா நடக்கையிலே
அம்பிகை நேரில் வந்தால் - என்னை
அப்பா என்றழைக்கயிலே
நம்பிக்கைதான் வாழ்க்கையென்றாள்
அவள் அழுதுகொண்டே பிறக்கையிலே
சென்றதொரு பிறவியிலே
செய்திட்டேன் சில நன்மைகள் - அந்தப்
புண்ணியத்தின் பலனாக
புவிவந்தாள் என் புன்னகையாள்
என்மகளின் நலம் பொருட்டு
எப்போதும் வேண்டுகிறேன்
எம்பெருமான் கரங்களையே - என்
திருமகளின் திருவாழ்வு
திவ்யமாய்த் அமைந்திட
திருமலை பகவான்
திருவருள் புரிவான்