சோறு

அடுத்தவர்க்கு மட்டும்
சொந்தமல்ல நம்
அடுத்த வேளைக்கும்
சொந்தம் தான்...
அட்டிலில் உருவாகி
நம் தட்டினில் மீதமாகி
குப்பைத் தொட்டியில்
வீணாகும் சோறுகள்..!

வெள்ளை வெளேரென
கொள்ளை அழகுடன்
சமைத்(ந்)தாலும்...
யாரும் அள்ளிச் சுவையாமல்
புறந்தள்ளப்பட்டு
மெல்ல உருகுலையும்
சோற்றுப் பருக்கெல்லாம்
ஒவ்வொரு முதிர்கன்னிதான்...!

தாயுடல் அறுத்தெடுத்து
தரைமேலதை அடித்துதைத்து
சேயினை தனித்தெடுத்து
சுடுநீரில் வறுத்தெடுத்து....
அப்பப்பா......!
இந்த சோறுகளின்
வாழ்வில்தான் எத்தனை
சோகங்கள்...!

அத்தனை சோகங்களையும்
வெள்ளை ஒப்பனைப்
பூச்சில் மறைத்துக்கொண்டு
அழகான பாத்திரமேறி
நகைத்து நடிக்கிறது
நம் தட்டு மேடையில்
இந்த சோற்று பருக்குகள்..!

எல்லாரையும் எரிச்சலூட்டி
போருக்கழைக்கிறது இந்த
பாழாய்போன பசி...!
எதிர்த்துப் போராட..
சிலரிடம் அளவுக்கதிகமாய்..
சிலரிடம் அளவாய் இருக்கும்
இந்த சோற்று ஆயுதம்
சிலரை மட்டும் நிராயுதபாணியாய்
நிற்க வைத்துக்
கொன்றுவிடுகிறது...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (20-Oct-17, 3:30 pm)
Tanglish : soru
பார்வை : 102

மேலே