இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தால் அழிவின் விளிம்பில் 41 சதவீத காடுகள்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். இன்று, வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்கள்தொகை பெருக்கம் ஒரு காரணம் என்றாலும், காடுகள் அழிவுதான் முக்கியக் காரணம். அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் அடிப்படை யானது தண்ணீர். இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தண்ணீர் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 1951-ம் ஆண்டு இந்தியாவின் தனி நபர் நீர் பயன்பாடு 15,531 கன அடியாக இருந்தது.
இதுவே 2011-ம் ஆண்டில் 4,635 கன அடியாக அதலபாதாளத்துக்கு சரிந்து விட்டது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க காடுகள் சுருங்கி, தண்ணீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. தண்ணீரின் அத்தியாவசியம், காடுகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, தேசிய தண்ணீர் வாரமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தண்ணீர் வாரத்தின் நோக்கம்
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை விரிவாக்க அலுவலர் ஜெபாஸ்டியன் பிரிட்டோராஜிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் ஆதாரங்களில் இருக்கக் கூடிய பிரச்சினை, அவற்றுக்கான தீர்வு குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனை நடத்தி, கருத்துகளை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த தண்ணீர் வாரத்தின் நோக்கம்.
இந்தியாவில் எல்லா இயற்கை ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் கோடி கன அடி தண்ணீர் கிடைக்கிறது. இதில் 2.10 லட்சம் கோடி கன அடி தண்ணீர் ஆவியாகி விடுகிறது. 2.10 கோடி கன அடி தண்ணீர் நிலத்தின் வழியில் செல்லும்போது வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் 4.5 லட்சம் கோடி கன அடி தண்ணீர், வெள்ளம் காரணமாக கடலில் கலக்கிறது. மீதமுள்ள 3.3 லட்சம் கோடி கன அடி தண்ணீரை வைத்தே விவசாயம், குடிநீர் ஆதாரம், தொழிற்சாலைக்கு பயன்படுத்த வேண்டி உள்ளது.
மரங்கள் அடர்த்தி குறைவு
இந்த ஆண்டு தமிழகத்தில் 823 மி.மீ. மழை பெய்தும், நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. நான்கு ஆண்டுகாலமாக இருந்த வறட்சியால் தற்போது மழை பெய்தும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மக்கள் தொகை பெருக்கம், முறையற்ற தொழிற் சாலைகளால் ஓசோன் படலத்தில் துவாரம் விழுந்து பனிப்பாறைகள் உருகி, அவற்றின் உயரம் குறைவ தால் காற்றின் ஈரப்பதம் குறைந்து மழையளவும் குறைந்துவிட்டது.
இந்தியாவில், சிரபுஞ்சியில் ஆண்டில் 365 நாட்களும் மழை பெய்யும். அங்குகூட 17 சதவீதம் முதல் 20 சதவீதம் மழையளவு குறைந்து, கடந்த ஓராண்டில் 25 முதல் 30 நாட்கள் மழை பெய்யவில்லை. வறண்ட காற்றை இயக்கும் உந்து சக்தியாக இருக்கக்கூடிய மரங்களின் அடர்த்தி குறைந்துவிட்டது. மரங்கள் அடர்த்தி குறைவுக்கு காடுகள் அழிவே முக்கிய காரணம் என்றார்.
இன்னும் கொஞ்சம் தூரத்தில் தண்ணீர் பங்க்
கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘இந்தியாவில் 67.7 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர், வனத்தைச் சார்ந்தே உள்ளனர். அதனால் 41 சதவீதம் வனப்பகுதி, தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால் அழியும் அபாயத்தில் உள்ளது. விவசாயத்துக்குப் பயன்படுத்தும் தண்ணீரை முறையாக பயன்படுத்தாததால் 60 சதவீதம் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
நீர் மாசடைதலை தடுத்து, வனத்தில் கிடைக்கும் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும். தண்ணீரையும், அதற்கு மூலக் காரணமான வனத்தையும் பாதுகாத்தால் மட்டுமே வருங்கால சந்ததியினர் இந்த உலகில் பிரச்சினையின்றி வாழ முடியும். இல்லையென்றால், இப்போது சாலைக்கு சாலை, பெட்ரோல், டீசல் பங்க் இருப்பதுபோல, இத்தனை கி.மீ. தூரத்தில் தண்ணீர் பங்க் உள்ளன என அறிவிப்பு பலகை வைக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.