மூடநம்பிக்கை ஒழிப்பும் மக்கள் நலனும்

அன்றைய தினம் எதிரே வந்த எல்லா வாகனங்களிலும் வாழைமரங்கள் விறைப்பாக நின்றன. பிறந்த நாளன்று தங்கள் அன்புக்குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து அழகுபார்ப்பதைப் போல, தங்கள் வாகனங்களையும் கழுவிச் சுத்தம் செய்து பொட்டிட்டு-பூவிட்டு அழகுபார்க்கத் தவறவில்லை. அப்போதுதான் தெரிந்து கொண்டேன் இன்று ஆயுதபூஜை என்று. வாகனங்களைத் தங்கள் ஆயுதங்களாக எண்ணி, மறவாமல் பூஜை செய்து கொண்டாடிய மனிதர்கள், அதனைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞரை மறந்து விட்டார்கள். கண்டுபிடித்த மேதையைக் கைகழுவி விட்டுவிட்டு, அவன் கண்டுபிடித்த சாதனங்களைக் கழுவிப் பூஜை செய்வதால் என்ன பயன்? ஆன்மிகத்தை தூக்கிப் பிடித்து அறிவியல் கண்ணோட்டத்தை மறந்ததன் விளைவு, இன்று அறிவியல் சாதனங்களின் அற்புத மழையில் நனைந்து கொண்டே, மூடநம்பிக்கை எனும் முட்புதரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று நாம் செய்தி ஏடுகளைப் புரட்டினால், ‘குடுகுடுப்பைக்காரன் குறி சொல்லியதன் பேரில் குழந்தையை நரபலி கொடுத்த சென்னை வியாசர்பாடியைச் சோர்ந்த மகேஸ்வரி கைது.” (தினமலர்-13.04.2013) ’பில்லி, சூன்யம் நீக்கித் தருவதாகக் கூறி ரூ.25இலட்சம் பணம், 65 பவுன் நகைககை மோசடி செய்த சாமியார் கைது” (தினத்தந்தி-28.08.2013) என்பன போன்ற செய்திகள் நம் இதயத்தை முள்ளாய்க் குத்துகின்றன.

இவ்வாறான மூடநம்பிக்கைகளில் மூழ்கி, மக்கள் துன்பத் தோனியில் மிதப்பதைக் கண்டு, அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த முனைந்த புரட்சியாளர்கள் பலர் மனிதநேயத்தோடு குரல் கொடுத்துப் போராடியிருக்கிறார்கள். இங்கர்சால், கோரா, ஜோதிராவ் பூலே, டாக்டர்அம்பேத்கர், தந்தை பெரியார், ஆபிரகாம் கோவூர்.... என புரட்சியாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அந்த வரிசையில் இந்தியச் சமூகக் கட்டமைப்பில் நிலவுகின்ற சாதியத்தைத் தகர்த்திடவும், மூடத்தனங்களிலிருந்து மக்களை மீட்டிடவுமான கொள்கை ஏந்தலோடு, ‘அந்தஷ்ரதா நிர் மூலம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் பல்வோறு போராட்டங்களை முன்னெடுத்தவர் மகாராஷ்டிராவைச் சோர்ந்த நரேந்திர தபோல்கர்.

நாம் பார்கிறோம், பெரும்பாலான மருத்துவர்கள் தாங்கள் வைத்திருக்கும் தனியார் மருந்துவமனைகளில் மருத்துவக் கருவிகளுக்கு இணையாகக் கடவுளர்களின் படங்களும். காட்சி தருகின்றன. இது மிகவும் அபத்தமானது: அறிவியலுக்கு எதிரானது என்பதை, நோய்களுக்கு எதிரான அறிவியல் படித்த மருத்துவர்கள் கூட உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். நரேந்திர தபோல்கரும் அடிப்படையில் ஒரு மருத்துவர்தான். ஆனால் சராசரியைப் போன்றவர் அல்லர்.

மண்ணையும், மக்களையும் பெரிதும் நேசித்த மருத்துவர் நரேந்திர தபோல்கர், மக்களைப் பீடித்த உடல் நோயைக் குணப்படுத்துவதோடு, அவர்களின் மனதில் நிறைந்திருக்கும் மூடநம்பிக்கை என்னும் மனநோயையும் குணப்படுத்தும் சமூக மருத்துவராய்ப் பரிணமித்தார். பின்னர் சமூக மருத்துவத்தையே தனது முழுநேரப் பணியாக்கிக் கொண்டார். இந்து மதத்தில் நிலவும் மூடச்சடங்குகளையும், முட்டாள்தனமான நம்பிக்கைகளையும் கனத்த குரலால் மக்களிடையே விளக்கி, மக்களைப் பகுத்தறிவுக் கரைசேர்க்கும் கலங்கரை விளக்காக விளங்கினார்.

மேலும் மக்களை நாசாகரப்படுத்தும் மூடநம்பிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதோடு, மூடநம்பிக்கைக்கு எதிர்ப்புச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தார்.

சனி சங்கனாப்பூர் கோவிலில் பெண்கள் நுழைய இருந்த தடையை தன் போராட்டத்தால் தகர்த்தெறிந்தார்.

இத்தகைய ஒப்பற்ற புரட்சியாளனை கடந்த 20.08.2013 அன்று, புனே நகரில் சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது இந்து மதவெறி பிடித்த கும்பல்.

நரேந்திர தபோல்கரின் வீரச்சாவுக்குப் பிறகு, 13 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த அவரின் கோரிக்கையான மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்டிரா அரசு. காலம் கடந்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் என்றாலும் கூட, அது தபோல்கர் போன்ற போராளிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே.

‘பொறுக்கிகள் போராளிகளைக் கொல்வதுண்டு. ஆனால் அவர்களின் இலட்சியங்களை ஒருநாளும் வெல்வதில்லை.” என்று சொல்வார்கள். இச்சொல்லாடலுக்கு ஏற்ப இந்து மதவெறியர்கள் போராளி தபோல்கரைக கொன்றுவிட்டதன் மூலம் அவர் நெஞ்சில் சுமந்த இலட்சியங்களைப் புதைத்து விட முடியாது. மாறாக பல்வேறு பரிமாணங்களாக அது நீட்சி அடையவே செய்யும்.

மூடநம்பிக்கையும் அதன் மூலவேரும்:

மூடநம்பிக்கை தோற்றுவாயின் ஆணிவேரைப் பற்றிப்படிக்க நாம் பல நுறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. தொடக்க காலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதக்கூட்டம் கட்டற்றோடிய காட்டாற்று வெள்ளத்தையும், கடலாய் எழுந்து வந்த கருமேகத்தையும், சுழன்று தாக்கிய சூறாவளியையும், கொட்டித்தீர்த்த மழையையும், வாட்டி வதைத்த வெயிலையும், பீறிட்டுக் கிளம்பிய மின்னல் கீற்றையும் கண்டு அஞ்சி நடுங்கியது. இத்தகைய இயற்கை நிகழ்வுகள் நம்மை மிஞ்சிய ஏதோ சக்தியின்-தேவதையின்- தெய்வத்தின் ஏவுதலால் தான் நடக்கிறது என்றும், பற்பல விலங்குகளையும், மனிதர்களையும் பலியிட்டு இரத்தம் சிந்தச்செய்து வழிபடுவதன் மூலம் இத்தகைய இயற்கைச் சீற்றங்களிலிருந்து தான் விடுபட முடியும் என்றும் நம்பினான். இத்தகைய இட்டுக்கட்டல்களே பின்னாளில் மூடநம்பிக்கை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்தன எனலாம்.

எதிரிகளுடனான போரில் வெற்றிக்குப் பெரும்பங்காற்றி, இறுதியில் வீரச்சாவடைந்த போர்வீரனுக்கோ அல்லது மக்கள் கூட்டத்தின் மாவீரத் தலைவனுக்கோ அவனின் நினைவைப் போற்றும் வகையில் ‘நடுகல்’ எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்தது. அது சங்க காலம் முதலே நடைமுறையாய் இருந்த பழக்கமாகும். இன்றும் கூட வழிபடப்படும் அய்யனார், வேடியப்பன், நொண்டி, கருப்பன், மதுரைவீரன் போன்ற ‘மக்கள் தெய்வங்கள்’ நடுகற்களின் வழிமுறையே ஆகும். தொடக்காலத்தில் இவை எந்த மதத்தையும் சாராத மக்கள் வழிபாடுகளாக இருநதன.

நடுகற்கள் என்றைக்குக் கடவுளர் சின்னங்களாக மாற்றப்பட்டதோ, அன்றே அது அனைத்து வகை மூடச்சடங்குக்குள்ளும் சிக்கிக் கொண்டது. மேலும் அந்தந்தப் பகுதிச் சூழலுக்கு ஏற்ப மத நிறுவனங்கள் பல மையம் கொண்டு, மக்களை மதமயமாக்கும் மூளைச் சலவையில் இறங்கின.

அச்சத்தின் அடிப்படையில் - உணர்வின் அடிப்படையில் பிறந்த வழிபாடுகள், பார்ப்பனிய ஆக்கிரமிப்புக்கு பின் பார்ப்பனிமயமாகி, இந்து மத மூடச்சடங்குகளுக்கு வலுச்சேர்க்கும் வழிபாடுகளாக மாறிப்போயின. மக்களை மதங்களாக - சாதிகளாகப் பல கூறுகளாக்கி நிலைப்படுத்தி வைக்க சடங்கு- சம்பிரதாயங்கள் அவசியம் என்ற வகையில் மக்களிடையே மூடத்தனத்தை விதைத்ததில் பார்ப்பனியத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததை ஆய்வறிவுடையார் அறிய முடியும்.

இன்று தொடரும் மூடநம்பிக்கைக்கான அடிப்படைக் கருதுகோள்களாக இருப்பது, கடவுள் நம்பிக்கையே இதை மத நிறுவனங்களே உரம்போட்டு வளர்கின்றன.

வாழ்க்கைப் பயணத்தில் மூடநம்பிக்கைகள்:

மனிதனின் ஒவ்வொரு அசைவையும் மதங்களே தீர்மானிக்கின்றன. ஒரு குழந்தை பிறந்தது முதல், அதற்குப் பின்னர் நடக்கும் ஒவ்வொரு இயற்கை மாற்றத்தின் போதும் கடைபிடிக்கும் மூடச்சடங்குகள் கேலிக்கூத்தானவை.

ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் திருமண விழாவின் போது நடக்கும் பெரும்பான்மையான நிகழ்வுகள் மூடச்சடங்குகளே. படித்த கூட்டத்தினர் நடத்தும் திருமணத்தில் இது அதிக அளவில் இடம்பெறுகின்றன.

அவர்களின் திருமணத்தில் புகைகிளம்பும் ஒம குண்டலத்திற்கும், பார்ப்பனர்களின் அறிவுக்குப் புறம்பான- புரியாத புலம்பல்களுக்கும் பஞ்சமிருக்காது. நம்முடைய தேவைக்கும், அவசரத்திற்கும், சுருங்க உரைத்தலுக்கும் என மனித சமூகம் ஏற்படுத்திக் கொண்ட எண்களில் நல்லது-கெட்டது பாவிக்கும் மூடத்தனத்தை, ’நாகரீகம்” என்ற பெயரில், படித்த கூட்டத்தினரே பார்த்துத் தொலைக்கிறார்கள்.

அறிவியல் உச்சத்தில் தயாரிக்கப்பட்ட விண்வெளியில் பாயக்காத்திருக்கும் இராக்கெட்களைக்கூட அர்ச்சனை செய்து ஆராதித்து அனுப்பும் அறிவியல் கற்றுத்தேர்ந்த ‘விஞ்ஞானப் பூசாரிகளும்’இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலும் இறப்பு வீடுகளில் தற்கால நடைமுறைக்குச் சற்றும் அவசியமில்லாத பல்வேறு சடங்குகள் மக்களால் இன்றும் கூட கடைபிடிக்கப்படுகின்றன. நம் முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்தில் செய்த சடங்குகளை இன்றும் அப்படியே பின்பற்றுவது மக்களின் அறிவுத்திறனை கேள்விக்குள்ளாக்குகிறது.

‘ நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு சடங்குகளிலும் ஏதாவது அர்த்தமிருக்கும்’ என சிலாகித்தக் கொள்ளும் படித்த கூட்டம், இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள மறுக்கிறது. அறிவியல் கருவிகளின் வெளிப்பாடுகளை நுகர்வதைத் தவிர!!!!!!

மேலும் மூடத்தனத்தை ஊக்குவிப்பதில் தொலைக்காட்சிகளின் பங்கு பெரிது. இராசிக்கல், இராசிக்கயிறு, என்பனவாக மக்களின் மூளையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகள் அவர்களின் கண்முன்னால் நிறுத்தப்படுகின்றன. அச்சு ஊடகங்களிலும் இதே நிலை தான். நான்கறிவு, ஐந்தறிவுடைய விலங்குகளின் படத்தையும், சப்தத்தையும் கூட விடுவதில்லை இவர்கள். பல்லி, நாய், நரி என எந்த விலங்கு கத்தினாலும் அதன் பலனைக் கணித்துச்(?) சொல்லக் காத்திருக்கிறாரகள் சிவல்புரி சிங்காரங்கள்.

சாமியார்களும்- சாமானியர்களும்:

மக்களிடையே புரையோடிப் போய்க்கிடக்கும் மூடநம்பிக்கைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் சாமியார்கள், மக்களிடம் எதைச் சொன்னாலும் வண்டி ஒட்ட முடியும் என்ற எண்ணத்திலேயே பற்பல ‘விசித்திரங்களைச் செய்து’ மக்களின் பார்வையைத் தங்கள் மீது திருப்புகிறார்கள்.

மேலும் விவரம் தெரியாதவர்களின் புரளிச் செய்திகளே சாமியார்களின் ‘மகத்துவத்தை’ வெளி உலகுக்குக் கொண்டு செல்லும் ஊடகங்களாகின்றன. அதுவே அவர்களின் செயலுக்கு வலுச்சேர்க்கவும் செய்கின்றன. இத்தகைய சாமியார்களே தங்கள் உச்சகட்ட ‘மகத்துவத்தை’ காண்பிக்க முற்பட்டு, நரபலி என்ற பெயரில், அப்பாவிமக்கள் ஈன்றெடுத்த பச்சிளம் குழந்தைகளைக் கொன்று புதைக்கும் பேரவலமும் நடக்தேறி வருகிறது.

சாமியார்களின் பித்தலாட்டங்களில் மயங்கி உடலுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் ஏரளாம். மக்களிடம் குடிகொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கையே சாமியார்களிடம் ஏமாறுவதற்கான முகாமையான காரணமாக அமைகிறது. மக்களைக் காலங்காலமாக ஏமாற்றிய சாமியார்கள் சிலர், இன்று சிறைக்கொட்டடியில் நாதியற்றுக் கிடக்கிறார்கள். இருப்பினும் புதிது புதிதாகப் படையெடுக்கும் சாமியார்கள் சந்துக்குச் சந்து ஆசிரமம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சி தலைவர்களின் நல்லாசியோடு...

எவ்வளவுதான் ஏமாற்றப்பட்டாலும், மக்கள் சாமியார்களைத் துடைப்பம் கொண்டு ஆராதிக்கத் தயாராக இல்லை. மாறாக அவர்களிடம் மண்டியிட்டு மானமிழக்கவே மருவி நிற்கிறார்கள்.

கல்வி நீரோட்டம் பாயாத - பொருளியல் சிக்கலில் தவிக்கும் மக்களைக் குறிவைத்தே பேய், பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் போன்ற ஏமாற்று வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது சாமியார்க் கும்பல். மேலும் சாமியார்களே சாமானிய மக்களின் வாழ்க்கை நகர்வுகளை இயக்கும் எந்திரங்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

அறிவியலாளர்களும்- மதக் கொடூரர்களும்:

விஞ்ஞானம் வளர்ந்த இன்றைய நாட்களிலேயே மக்களை மடமையாக்கும் மதச்சடங்கிற்கு எதிராகப் போராடும் தபோல்கர் போன்ற புரட்சியாளர்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றால், விஞ்ஞானம் துளிர்விடாத அன்றைய நாட்களை நினைத்தால் நெஞ்சம் குமுறுகிறது.

மதத்தின் கூரிய நகங்கள் அறிவியலாளர்களின் சதைகளை குத்திக்கிழித்திருக்கின்றன. அறிவியல் கருத்தினை விதைத்த விஞ்ஞானிகள் பல்வேறு துன்பதுயரங்களுக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியில் கொன்று புதைத்த கொடூரமும் நடந்தது. மதவாதத்திற்கு எதிர்வாதம் புரிந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் கூட தாக்கி நிர்மூலமாக்கப்பட்டன.

மதம் சொல்வதை மட்டுமே மானிடநெறியாக, மக்களிடத்தில் தினிக்கப்பட்டன. மதச் சர்வாதிகாரம் கொட்டமடித்துக் கூத்தாடியது. இதில் எந்த மதமும் விதிவிலக்கில்லை.

மத நிறுவனம் போதித்த மூடக்கருத்துக்களையெல்லாம் அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வுகளால் போட்டுடைத்து அம்பலப்படுத்தியது மதவெறியர்களுக்கு பெரும் சீற்றத்தை உண்டாக்கிற்று. அந்தக் காலத்தில் ஆராய்ச்சியாளராக- அறிவியலாளராக விளங்கிய சிந்தனையாளர்கள் எந்நேரமும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலைய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். மதவாதிகளால் அவர்களின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரலாம் என்ற அவலநிலையிருந்தது. இவ்வாறாக மத பாசிசத்தால் ‘புனிதப் படுகொலை” செய்யப்பட்ட-கொடிய சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட அறிவியல் அறிஞர்கள் ஏராளம். மதவெறிமுடர்கள் தங்களுக்கு எதிரான புத்தகங்களைக்கூட பூட்டிட்டார்கள்.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொல்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையை கண்டுபிடித்து முதன்முதலில் உலகுக்குச் சொன்ன கோபர்நிக்கசை கொடுமைப்படுத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்தனர்.

கோபர்நிக்கசின் ஆய்வைப் பின்பற்றி, பைபிள் கோட்பாட்டுக்கு எதிராக, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றுகின்றன என்றும் பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் கருத்தைப் பதிவு செய்த புருனேவை 9 ஆண்டுகள் இருட்டுச்சிறையிலடைத்து உயிருடன் எரித்துக் கொன்றது மதவெறிக் கும்பல்.

அதே கருத்தை தக்க ஆய்வுகளுடன் வெளியிட்ட கலீலியோ வாழ்நாள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். சுமார் 360 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1992-அக்டோபரில் ரோமன் கத்தோலிக்க மதபீடம் கலீலியோ போன்ற அறிஞர்கள் சொன்ன கருத்துதான் சரி என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது.

பூமி உருண்டையானது என்று உரைத்த ரோஜா பேக்கன் நாடுகடத்தப்பட்டு 25 ஆண்டுகள் கடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உடல் கூறின் வரலாறு பற்றி எழுதிய வெசாலியஸ் என்ற அறிஞர் கிறித்தவ மத கட்டுக்கதைக்கு எதிரான செய்தியை எழுதியதால் பாதிரியார்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

அரிஸ்ட்டார்க்கஸ், பித்தகோரஸ் முதலாக மதத்தின் கோரப் பசிக்கு ஆளான அறிஞர்கள் பலர் உளர்.

மதங்களின் ஆக்டோபஸ் கரங்களையும் மீறி, இன்று அறிவியல் வளர்ச்சி இந்தளவு பரவலாக்கப்பட்டிருப்பதற்கு, உயிரைப் பயைம் வைத்து உண்மைக்காய் உறுதியாய் நின்ற அறிவியல் அறிஞர்கள் மனத்துணிவும்-ஆய்வுப் புலமையும் தான் காரணம்.

நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அறிவியல் சாதனங்களிலும் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் இரத்தம் தேய்த்த வரலாறு புதைந்துகிடக்கிறுது.

மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டமும்-பரப்புரையும்:

மகாரஷ்டிராவைத் தொடந்து கர்நாடகம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் மக்கள் நலன் கருதி மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை இயற்றியுள்ளன. தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. பெரியாரியவாதிகள் இதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்ட வடிவங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

பெரியாரின் பாசறையில் புரண்டு வளர்ந்தவர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி தான் ஆட்சிக் கட்டிலில் இருந்து போது நரபலி போன்ற மூடநம்பிக்கைக் கொடுமைகள் எதுவும் நடக்காதது போலவும், இப்போது தான் புதிதாக நடப்பது போலவும் ‘நாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்கிற பாணியில் தனது வருத்தத்தைப் பதிவு செய்ததோடு, இதனைத் தடுக்க தமிழத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என ‘களவாணித் தனமாகக்’ குரல் கொடுக்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் திராவிடக் கட்சிகள் அனைத்துமே பெரியாரின் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஏனெனில் அக்கட்சிகளின் இலக்கு மக்கள் நலனல்ல, நாற்காலிகளை பிடிப்பதே.

தமிழக திராவிடக் கட்சிகள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் ஜோதிடர்களின் அறிவுறுத்தலின் படியே நகர்த்தி வருகிறார்கள் என்பது ஊரறிந்த சங்கதி. அரசியல் கட்சிகள் எதையாவது செய்து தொலையட்டும். ஆனால் மக்கள் நலனைக்கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே இயற்ற வேண்டியது மத்திய -மாநில அரசுகளின் அவசியத் தேவையாகும். மேலும் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51(எச்) ஐ முறையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் நிலவும் மூடநம்பிக்கைளுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பேய், பிசாசு, பில்லி, சூன்யம், தேவலோகம், நரகலோகம், ஜோதிடம், சாதகம், ஏவல், நரபலி, மந்திரம், குறி, கோடாங்கி, செத்தவருடன் பேசுவது, சாட்டையடி, கூடுபாய்தல், பாதயாத்திரை, சாமியட்டம், அலகுகுத்துதல், தீ மிதித்தல்.... இப்படியாக இன்னும் பல்வேறு மூடநம்பிக்கைகள் இன்றும் தொடர்வது மக்களின் அறிவியல் மனப்பான்மையைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், அவர்களிடத்தே அறியாமை எந்தளவுக்குக் கெட்டிதட்டிப் போயுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது. மேலும் நாம் பின்பற்றும் ஒவ்வொரு மூடச்சடங்குகளும் கேடான சாதியத்தைப் பாதுகாக்கும் கேந்திரங்களாக விளங்கிக் கெண்டிருக்கின்றன என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களிடையே மண்டிக்கிடக்கும் அறியாமை இருள்கிழிக்க, அவர்களை மூடத்தனத்தில் இருந்தும், மத மடமையில் இருந்தும், சாதியச் சகதியில் இருந்து பிடுங்கி வெளிக்கொணர்ந்து, பகுத்தறிவு வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டியது முற்போக்கு சக்திகள், ஜனநாயகவாதிகள், சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுப்போர், மக்கள் நலனில் அக்கறையுள்ளோர் ஆகியோர் முன்னுள்ள அவசரக் கடமையாகும்.

எழுதியவர் : தங்க.செங்கதிர் (24-Oct-17, 12:08 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 570

சிறந்த கட்டுரைகள்

மேலே