அம்மா என்றால் அன்பு
அம்மா என்றால் அன்பு...!
அனைத்து உயிர்களின் உன்னத உணர்வு அன்பு
அன்பின் பிரதிபலிப்பு ஒலி
ஒலியின் உயர்விழி மொழி
மொழியின் முதல்துளி அம்மா...
ஆம்! அம்மா என்றால் அன்பு
அதுவே அனைத்துயிரின் உயிர்ப்பு...
பாடறிந்து ஒழுகுதலே பண்பு
பொறுமை, தயவு, கருணை, கனிவு அனைத்துப் பண்பும் பொதிந்ததே அன்பு..
அன்பின் உயிர் பிம்பமே அம்மா!
தன்னலமற்றக் கருணைக் கடல் இறைவன்,
தாய்மையை தன் பிரதிநிதியாய்
உலகிற்கு ஒப்புவித்ததாலே
தாயுமானவனவென பெயர் பெற்றான்!
ஈன்றுப் புறம்தருதல் தாயின் கடனே
சான்றோனாய் மாற்றல் தந்தையின் கடனே..
இக்காலச் சூழலில் இவ்விரு கடனையும் ஒருங்கே செவ்வனச் செய்பவள் அம்மா!
உயிர் கொடுத்து உதிரம் கொடுத்து நம்மை உலகிற்கு ஈன்றவள் அம்மா
உண்வோடு நல் உணர்வுகள் ஊட்டி வளர்ப்பவள் அம்மா
உண்ணுதல் உறங்குதல் சுயத் தூய்மை அனைத்தும் கற்பிக்கும் முதல் ஆசிரியை அம்மா
உடல்நலம் குன்றின் இமை மூடாது நம்மை காக்கும் கவசம் அம்மா
உடன் விளையாடும் சகோதரியாய் உள்ளம் பகிர்ந்திடும் சகதோழியாய் நம்மோடு ஒன்றிப் பயணிப்பவள் அம்மா
உள்ளார்ந்தத் திறனை பகுத்துணர்ந்து பட்டைத்தீட்டி
முதல் விமர்சகரும் ரசிகையும் ஆகுபவள் அம்மா
உயிர் உடல் உள்ளம் உறவு ஆன்மா அனைத்திற்கும்
முதல் உரிமைப் பெற்றவள் அம்மா!
அனைத்துப் பற்றையும் துறந்த ஞானிகள்கூட தாய்ப்பற்றறுக்க இயலாதவர்கள்.
ஐயிரண்டுத் திங்கள் அங்கமெல்லாம் நொந்து
தனைப் பெற்றத் தாய் மறைந்த செய்தி செவியுற்று
அன்னைக்கு இட்டத் தீ அடிவயிற்றில்... கலங்கிப் பாடினார் பட்டினத்தார்
போற்றுதலுக்குரிய பெருந்தொண்டு புரிந்த மண்ணில் உதித்த வெண்தேவதைக்கு
புனிதத் தாய் பட்டம் ஈன்றது இவ்வுலகம் !
நீடிய பொறுமை, தயவு, கருணைப் பெட்டகம் அன்பு
இருமாப்பு, பொய், அகந்தை அற்றது அன்பு
அனைத்தையும் கடந்து மன்னிக்கும் இறைமை அன்பு
நாம் செம்மையுற பாசாங்காய் கண்டிப்பது அன்பு
இன்னலுற்ற சூழலில் இடுக்கண் களைவது அன்பு
சகலத்தையும் விசுவாசித்து சகிப்பது அன்பு
சகலத்திலும் நம்பிக்கை ஊட்டுவது அன்பு
கருவறையில் உருவாகி கல்லறையில் அடங்கும்வரை
நம்மை காக்க வல்ல ஆயுதம் அன்பு
அந்த அன்பே மனித சமூகத்தின் ஜீவ ஊற்று...
அந்த ஜீவ ஊற்றானவள் அம்மா!
அம்மா என்றால் அன்பு....
அவளை நாளும் தொழுவதே உயர் பண்பு...!
கவிதாயினி அமுதா பொற்கொடி