முளைப்பாரி பாட்டு நாட்டுப்புற பாடல் முயற்சி

தன்னானே தானேனன்னே
தன்னா நன்னானே - தானே
தன்னானே தானேனன்னே
தன்னா நன்னானே...

வாசலிலே வேப்பங்கொத்து
சொருகி வைக்கனுண்டி - வீடு
வாசலெல்லாம் சாணமிட்டு
வெளக்கி வைக்கனுண்டி...

மண்பானை கூட்டுக்குள்ளே
வண்டல்மண்ணை நிரப்பி – அதில்
மாட்டெருவும் ஆட்டெருவும்
கலந்து வைக்கனுண்டி…

வளைபோட்ட பொண்டுகளெல்லாம்
வாசல் நில்லுங்கடி - சின்ன
முளைப்பூவும் பூத்து நிக்க
குலவை சொல்லுங்கடி...

கறிசோறு திண்பதெல்லாம்
நிறுத்தி வச்சிடடி - உன்
காரியத்தை நெஞ்சுக்குள்ளே
இறுக்கி வச்சிடடி..

முளைப்பாரி ஒப்பதமாம்
முத்துமாரி உனக்கு – மாதம்
மும்மாரி பெஞ்சிடனும்
அருள்புரி எமக்கு…

ஆடியில கொடியேத்தி
ஆத்தா உனக்கு – முளைப்
பாரியத்தான் தூக்கிவந்தா
விளைச்சல் சிறப்பு…

ஒண்னாம்நாள் திருவிழாவில்
ஒளிஞ்சி நின்னாண்டி – அவன்
ஒழுங்கான என்கண்ணை
ஓரமிழுத்தாண்டி…

ரெண்டாம்நாள் திருவிழாவில்
ரோந்து வந்தாண்டி – ரெண்டு
கண்ணால எம்மனச
களவும் செஞ்சாண்டி…

மூணாம்நாள் திருவிழாவில்
முன்னே வந்தாண்டி – அவன்
முத்தான வார்த்தை சொல்லி
மனசில் நின்னாண்டி….

நாலாம்நாள் திருவிழாவில்
நாடி வந்தாண்டி - என்
நயன வார்த்தை வேணாம்
நல்ல பதிலை கேட்டாண்டி...

அஞ்சாம்நாள் திருவிழாவில்
அஞ்சி நின்னேன்டி – என்
துஞ்சாத விழி புகுந்து
நெஞ்சில் நுழைஞ்சாண்டி…


ஆறாம்நாள் திருவிழாவில்
அருகில் வந்தாண்டி – நல்ல
அரக்கு போட்ட சீலை தந்து
கிறங்க வச்சாண்டி…

ஏழாம்நாள் திருவிழாவில்
ஏங்கி தவிச்சேன்டி - என்
துரையவரை காணாம
தூக்கம் தொலைச்சேன்டி….

எட்டாம்நாள் திருவிழாவில்
இளைச்சி போனேண்டி – அவன்
இல்லாத திருவிழாவும்
வெறும் விழாவாச்சடி…..

ஒன்பதாம்நாள் திருவிழாவில்
ஓடிவந்தாண்டி – வைகை
ஓடுச்சம்மா பெருக்கெடுத்து என்
விழி மடை தாண்டி…..

பத்தாம்நாள் திருவிழாவில்
படித்துறை இறங்கி – மாரி
ஆத்தாளுக்கு நன்றி சொன்னோம்
முளைப்பாரி கரைச்சி…

கேட்டதெல்லாம் கொடுத்துப்புட்டா
முத்து மாரியம்மா – எனக்கு
ஏற்றவரை காட்டிபுட்டா
முத்து மாரியம்மா….

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Oct-17, 10:07 pm)
பார்வை : 1307

மேலே