நான் பணம் தேடும் பறவை

நட்போடு ஆட்டம்
நடக்கவும் கூட்டம்- யாவும்
இழந்தஎன் வாட்டம்
இரவெங்கும் வாட்டும்..!

வயக்காட்டு வாசம்-அம்மா
வாயூட்டும் நேசம்
தொலைதூர தேசம்-நான்
தொலைத்ததை பேசும்..!

தினமொரு யுகமோ?-தேயும்
நிலவெந்தன் முகமோ.?
வழியொன்று வருமோ?-ஊரின்
வசந்தத்தை தருமோ?

தவித்திடும் தனிமை-அதில்
தேயுதேன் இளமை...!
உயிர்க்கிள்ளும் வறுமை-வருமோ
அள்ளித்தரும் வளமை?

வெறுத்துஎன்தன் கண்ணீரை
திருப்பிக்கொள்ளும் தலையணை
விதிசெய்த விளையாட்டோ-என்
கண்ணீருக்கோ நூறுகல்லணை...!

வலிகள்என் வரவே
வாழின்பம் அறவே
மனமேங்குது உறவை...நான்
பணம்தேடும் பறவை...!

எழுதியவர் : காசி.தங்கராசு (31-Oct-17, 4:01 am)
பார்வை : 122

மேலே