சாலைக்கு ஒன்றிரண்டு திட்டு

சில்லு சில்லாய் சிதறிய சில்லறையின்
நடுவில் சிரித்துக் கொண்டிருந்தால் மீனாட்சி
தெரு கலைஞனின் வயிற்றுப்பிழைப்புக்காக.
கொட்டித் தீர்த்த குருதியின் மையத்தில்
வெறித்துக் கொண்டிருந்தது பிரேத சுற்றுக்கோடு
சாலை விபத்து குரூரத்தின் சாட்சியாக.
வாழ்க்கையின் இரு துருவங்களையும்
தெள்ளத்தெளிவாய் விளக்கும்
கரும்பலகை சாலையே
உன்னை கொஞ்சம் திட்டப்போகிறேன்.
கட்டுபாடற்ற காட்டாறு போல்
ஊரெங்கும் வளைந்து செல்லும் நீ,
ஏன் போகிறபோக்கில் விவசாய நிலங்களை
கரும்போர்வை போல் போர்த்தி செல்கிறாய்?
ஓர் வழிச் சாலை ஈர் வழிச் சாலையாகியது
ஈர்வழிச் சாலைகள் பிள்ளையீன்று
நாற்வழிச் சாலையாகி நிற்கின்றது
தெரிந்தே கேட்கிறேன், இப்பொழுது
காட்டு மரங்கள் எங்கே செல்லும்?
வழி தவறிய நாய்க்குட்டிகள் முதல்
வீடு தொலைத்த வாரணங்கள் வரை
எல்லா உயிரையும் காவு வாங்குகிறாயே
உனக்கு குற்றவுணர்வு குறுகுறுக்கவில்லையா?
‘கல்’ நெஞ்சக்காரா.
மன்னிக்கவும், ‘கல்’ நெஞ்சக்காரி
ஏனெனில் உன் வளைவு-நெளிவு,
பள்ள-மேடுகளில் வாழ்க்கையை
தொலைத்தவர் பலராயிற்றே.
ஒழிந்து போ!
என்னிடம் கேட்க கேள்விகள் இல்லை
திட்ட வார்த்தைகளும் இல்லை.
ஒருவேளை,
பட்டென்று என் திட்டு பட்டிருந்தால்,
பாவ விமோசனம் வேண்டுமென்றால் ஒன்று செய்
உன்னை முட்டி மோதி வெளிவரத்துடிக்கும்
விதைக்கு வழிவிடு,
பிற்காலத்தில் உன் பரம எதிரி
மழையிடமிருந்தாவது உன்னைக் காப்பாற்றும்.

எழுதியவர் : ஹேமலதா (31-Oct-17, 12:27 am)
பார்வை : 651

மேலே