சாதீயம் அறுக்குமா கிறித்தவம்

சாதீயம் அறுக்குமா கிறித்தவம்?

ஈராயிரம் ஆண்டுகள் கடந்த வந்த திருச்சபையின் பாதை.

இரத்தப் பயணம் இயேசுவின் சிலுவை தொடங்கி.

முதற்சீடர்கள் சென்றவிடமெல்லாம் சிலுவையை காட்டினார்கள். அத்தோடு பரிசாக காயங்களையும் பெற்றுக்கொண்டே.

ஓர் நீதி வழி அங்கிகரிக்கப்பட்ட மதமாக 313ல்.

அது தொடங்கி ஏராளமான உள்வாங்கல்கள் சென்றவிடமெல்லாம்.

இவையெல்லாம் கிறித்தவத்தை தழைக்கச் செய்யவில்லையா? 120 கோடி கிறித்தவர்கள் இப்படித்தானே உருவானார்கள் உலகமெங்கும்!

ஆம்,ஏற்கிறோம்
உள்வாங்கல்களில் மனித மாண்பை குலைக்கும் இனவெறியும் சாதீயமும் ஒன்று கலந்தேயென.

ஒரு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்தார் இனவெறிக்கு எதிராக குரல் எழுப்ப.

சாதீயத்தை அறுத்தெறிய நாம் தயாரா?
திருமுழுக்கு பதிவேடு முதல் இடுகாடு புதைப்பது வரை.
அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்து கடவுளையும் மனித ஏற்றத்தாழ்வு கொடுமைகளுக்கு பணிய வைக்கும் நம்மிலே கிறித்தவம் இறந்து பன்னெடுங்காலம் ஆனது என்பதை ஏற்றுக்கொள்ளும் திராணி உள்ளதா?

நாம் கொண்டாடும் திருச்சபை ஓர் இயேசு மறுப்பு திருச்சபை. பார்பனத்தையும் ஆரியத்தையும் உள்வாங்கி சடங்குகளை தினந்தோறும் தவறாமல் நிறைவேற்ற உரோமையின் தலைமைக்குட்(டு)பட்ட திருச்சபை. (சடங்குகளை மட்டுமல்ல சாதீயத்தையும் இணைத்தே!)

புரட்சிப் போராட்டங்களை என்றோ எங்கோ நிகழ்த்திவிட்டு அதையே மேற்கோளாக்கி வறட்சிப் பிரசங்கம் முழக்கும் திருச்சபை.

மக்கள் மனம் மாற இன்னும் பொறுத்திருக்க வேண்டும் என்று நமத்துப்போன பட்டாசுகளைப் போல் வெட்டி வீராப்பு பேசும் திருச்சபை.

நண்பர்களே எழுவோம்! 2000 ஆண்டு பொறுமை போதும்.

சாதீயத் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் என்று புதிய பரலோக மந்திரம் எழுதுவோம். (கண்டிப்பாக இயேசு கோபித்துக் கொள்ள மாட்டார்)

சாதீயம் மறுப்பும் ஒழிப்பும் திருச்சபைக்குள் நடக்கவேண்டிய முதல் மறைபரப்பு. சாதீயம் மறுக்காதவர்கள் தானாகவே திருச்சபை வெளியில்(Auto-excommunicated) இருக்கிறார்கள் என திருச்சபை அறிவிக்கும் காலம் எப்போது?

இறையியல் கூடாரத்தில் விடியல் விளக்கேற்றி விட்டு ஊருக்கே வெளிச்சம் காட்டிவிட்டோம் என நினைத்தது போதும்.

என்னோடு நகமும் சதையுமாக கறுப்புத்திலகமாய் ஜொலிக்கும் புதிய இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்க்கிறேன்.
அய்யய்யோ! இன்னும் 2000 ஆண்டுகள் ஓடிவிடும்.

இதோ வருகிறேன்.
கறுப்பு இயேசுவே!
உடைத்து உருவாக்கும் ஏற்றத்தாழ்வு பாராட்டலிலிருந்து சமத்துவத்தை.
சுக்குநூறாக்கும் சாதீய மேட்டிமை மனப்பாங்கை.
அறுத்தெறியும் அநீதமாய் ஏற்றுக்கொண்ட
மனிதமாண்புக்கெதிரான அனைத்து காரணிகளையும்.
இவை நிகழும் மேடையே புதிய நற்கருணை ஏற்பாடு.

அதுவரை இயேசு மறுப்பு, செத்துப்போன திருச்சபையின் தலைவர்களாக, சடங்கர்களாக, வலம் வருவோம் எவ்வித சலனமுமில்லாமல்.
-ஜான் பிரான்சிஸ்.

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (31-Oct-17, 6:19 am)
பார்வை : 113

மேலே