விவேக் ஷான்பாக்கின் நிர்வாணம் கதை
விவேக் ஷான்பாக்கின் கதை எப்போதும் மேலதிகமான ஒன்றை உணர்த்திக் கொண்டிருக்கும். எதிர்பாராத வாழ்க்கை சூழல், உறவு சிக்கல்களின் அந்தரங்க முடிச்சு, திருப்பங்களின் அதிர்வு என்று பலகோணங்களை அவர் கதைகள் கொண்டிருக்கும். கன்னட எழுத்தாளர்களான எஸ்.எல். பைரப்பா, யூ.ஆர். அனந்தமூர்த்திக்கு பின் விவேக் ஷான்பாக்கை வைக்கலாம் என நினைக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்து இனி வர இருக்கும் அவரது நாவல்கள் அதை உறுதி செய்யலாம். வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் சிறந்த கதைகளாக வேங்கைசவாரி, கோழியை கேட்டா மசாலா அறைப்பது, அடுத்தவர் குடும்பம் போன்ற கதைகளை சொல்லலாம். இந்த மூன்று கதைகள் இல்லாமல் ஜாமீன் சாஹிப், காரணபூதம், நம் வழியில் நாம், சரவணா சர்வீஸ், சில்லறை, சுதீரின் அம்மா போன்ற கதைகள் கிடைக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சில ஆர்வலர்களின் முயற்சியால் அவரது இந்த 9 கதைகள் தமிழில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கே.நல்லதம்பி மொழிபெயர்த்த நிர்வாணம் (காலச்சுவடு, செப் 17) என்கிற கதையும் சேர்கிறது. மற்ற கதைகள் எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் வந்திருக்கின்றன. இந்தக் கதை நேரடியாக கன்னடத்திலிருந்து மொழியெயர்க்கப் பட்டிருக்கிறது.
விவேக் ஷான்பாக்கின் கதை நேரடியாக ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து ஒரு இடத்தில் முடியும் கதையாக இருக்காது. தொடங்கும் இடமும் முடியும் இடமும் ஒன்றாக இருக்கும். ஆனால் நடுப்பகுதி வெவ்வேறு இடங்களில் தாவி, காலங்களை கடந்து, பல மைல்களை கடந்து சென்று திரும்பி வந்திருக்கும். அதில் பல கிளைக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும். கூடவே மனங்களின் தாவல்களையும், சம்பவங்களின் குறுக்கு விவரணைகளையும் தாண்டி வந்திருக்கும்.
ஒரு சின்ன சிக்கலை தீர்க்கின்ற கதை, சின்ன சிக்கலை உருவாக்கி கொடுக்கின்ற கதை, இருவேறு உலகங்கள் சந்திக்கும் கதை, கதாபாத்திரத்தின் வலிமையை சோதிக்கும் கதை என்று பலவாறு இருந்தாலும் எல்லாவற்றிலும் வாசகனின் நேரடியான பங்களிப்பு இல்லாமல் கதையை நாம் முடித்துக் கொள்ள முடியாது. வாசகனின் சிந்தனையை உடைக்க வைத்து அவனை ஒவ்வொரு முறையும் அலைகழிப்பில் கொண்டு சென்று புதிய சிந்தனையால் மகிழவைப்பது தான் அவரது பாணி என்று சொல்லலாம்.
இந்த கதையின் கதைசொல்லி வெளிநாட்டில் ஒரு இந்தியரை சந்திக்கிறார் அவர் தன் வகுப்பு தோழன் என்பதால் இருவரும் மதுவருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார். கதைசொல்லிக்கு பேச்சு நீண்டுகொண்டிருக்கும்போது கதைசொல்லி நினைத்திருக்கும் நபர் அவரல்ல என்பதும் அவர் நினைத்திருக்கும் நபர் கதைசொல்லியும் அல்ல என்று தெரியவருகிறது. வெளியேறும்போது நான் நீ நினைத்திருக்கும் நபரல்ல என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறார். தென் ஹூஆர்யூ என்கிற நண்பரின் கேள்வியோடு கதை முடிவுறுகிறது.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தோம். எந்நேரமும் ஒன்றாக சுற்றவும், கூடி பேசுவதுமாக இருந்தோம். பத்தாம் வகுப்பில் வேறுவேறு ஊர்களுக்கு சென்றுவிட பின் தொடர்பு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் மீண்டும் முகநூல் வழியாக இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் என்னை அடையாளம் கண்டு தொடர்பு கொண்டது அவர்தான். பிறகு தொலைபேசியில் பேசினோம்.
இந்திய மத்திய அரசு துறையில் இருக்கும் அவருக்கு, நாங்கள் இருவரும் பேசுவது, அவரது பராகிரமங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வதற்குதானா என்கிற எண்ணத்தைதான் ஏற்படுத்தியது. என் செயல்பாடுகள், எண்ணங்கள் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இருந்ததாக நினைவில்லை. ஒரு உயரதிகாரி தன் கீழ் இருக்கும் பணியாளனிடம் பேசுவதுபோன்ற பேச்சு. மாணவப் பருவத்தில் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், ஆசைகள் குறித்தோ அல்லது நான் பேசுவேன் என்கிற எண்ணமோ அவருக்கு இருந்ததாக நினைவில்லை.
மனிதர்களிடம் இருக்கும் ஒரே எண்ணம் 'தான்' மட்டும்தான். இந்த கதையும் அதுதான். கதைசொல்லியின் நண்பர் வெறும் சுயகர்வம், சுயபெருமைகளை மட்டுமே பகிர்ந்துக் கொள்கிறார். அதைக் கேட்டு ஒரு கட்டத்தில் கதைசொல்லியும் சுயபெருமையை பேச ஆரம்பிக்கிறார். ஆனால் தான் நினைக்கும் நபர் அவர் இல்லை என்பதை நண்பர் போனில் தன் பெயரை மனைவியிடம் குறிப்பிடும்போது, எதிரே என் நண்பர் என்று பெயரை குறிப்பிடும்போதுதான் புரிந்துக் கொள்கிறார்.
பெளத்த சமயத்தில் நிர்வாணம் என்பது அனைத்தையும் துறத்தல் என்று பொருளில் வருகிறது. ஆசை, கவுரவம், கர்வம், அகங்காரம் என்று அனைத்தையும் துறக்க நிர்வாணம் அதாவது வீடுபேறு/முக்தி அடைவதை குறிக்கிறது. நிர்வாணம் என்கிற தலைப்பு எவ்வளவு நெருக்கமானகிறது இந்தகதையோடு.
அகங்காரத்திலிருந்து தன்னை துறத்தல் எவ்வளவு முக்கியமானது. கதை இப்படி ஆரம்பிக்கிறது:
எங்காவது அவன் கிடைத்திருக்கலாம்: தில்லியிலோ மும்பையிலோ ஹைதரா பாதிலோ இல்லை இந்த பெரிய கம்பெனிகள் ட்ரைனிங் நடத்தும் ரெசார்ட்கள் இருக்கின்றனவே, அங்கெங்கோ கிடைத்திருக்கலாம்; அல்லது ஏதாவது மேனேஜ்மெண்ட் செமினாரில். ஆனால் அங்கே எல்லாம் இல்லாமல் ஜகார்த்தாவின் ஒரு ஹோட்டல் லாபியில் கிடைத்தானே என்று நினைக்கின்றபோது, வேறு எங்கு கிடைத்திருந்தாலும் நாங்கள் பேசியிருக்க மாட்டோம், ஒருவரை யொருவர் பார்க்காமல் போயிருப்போம் என்றும் தோன்றியது.
கதை முழுவதும் ஆங்காங்கே கன்னி வெடிகள் வைத்ததுபோன்ற சொற்பிரயோகங்கள்/வார்த்தைகள் கதையின் ஏதோ ஒன்றை தொட்டுச் செல்கிறது. சலிப்பூட்டுவதால் கதைச்சொல்லி இமெயில் அனுப்புவதும், போனில் பேச நினைக்க மனைவி கடுப்படிப்பதும், அவரது சகா சி.கே.சிங்கின் இந்திய குணாதிசயங்களை பேசுவதும் என்று நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். கதையின் ஏதோ ஒரு இடத்தில் பொருந்து போவதை கண்டுகொள்ளும்போது வாசகனை மெல்லிய ஆச்சரியத்தை ஆழ்த்திவிடும்.
வர்ணனைகள், நுண்ணிய மனித வெளிப்பாடுகள்/சஞ்சலங்கள் என்று எதையும் கதைகளில் விவேக் ஷான்பாக் சொன்னதாக நினைவில்லை (பத்து கதைகளிலிருந்து). அனைத்தும் நேரடியான வார்த்தைகளால் மெல்லிய நகைச்சுவை உணர்வுகூட இல்லாமல் சாதாரணமாக அதே வேளையில் வேண்டியவைகளை மட்டுமே சொல்கிறார். ஆனால் அதில் ஒரு அழுத்தமான கூறல்முறை ஒன்று வெளிப்பட்டுவிடுகிறது. கதையை சற்றே முன்னும் பின்னுமாக மாற்றி சொல்லிவிடுகிறார். அதுவே அவரது வெற்றி கூட.
கே.நல்லதம்பி இக்கதையை கன்னடத்திலிருந்து நேரடியாக மொழிப்பெயர்த்திருக்கிறார் (காலச்சுவடு செப்.2017). இனி வரும் காலங்களில் விவேகின் நாவல்களையும் மொழிப் பெயர்ப்பார் என தோன்றுகிறது.
(தஞ்சைக் கூடலின் 7வது கூட்டத்தில் 30/9/17 அன்று பேசிய உரையின் கட்டுரை வடிவம்.)