கல்வியும் கனவும்
கற்கவேண்டும் கற்கவேண்டும் கல்விதன்னை கற்கவேண்டும்
பற்றோடு பாடமெல்லாம் பதறாமல் படிக்கவேண்டும்
உற்றவற்றை உளந்தனிலே ஒதுக்காமல் நிறுத்தவேண்டும்
குற்றமதைக் களைந்துவிட்டு கோபுரமாய் உயரவேண்டும்
நிறைகுடமாய் வாழவேண்டும் நிம்மதியும் நிலைக்கவேண்டும்
திரையிட்டு மறைக்காமல் தென்றலென தவழவேண்டும்
கரைபட்டு சிறைபட்டு காவலிலே வாழாமல்
குறைகளைந்து குற்றமதைக் குப்பையிலே தள்ளவேண்டும்.
கற்றவற்றை கவனமுடன் காலமெல்லாம் கொண்டுவிடின்
நற்றெனவாய் நல்லொழுக்கும் நழுவாமல் நடைபயிலும்
பெற்றோரும் பெரும்மகிழ்வால் பெருமிதமே பெறுவதனால்
தற்பெருமை தலைக்கனமும் தங்காமல் தேய்ந்துவிடும்.
கனவோடு கல்வியினைக் காலத்தோடு கற்றுவிட்டு
மனமெல்லாம் மகிழ்ந்தாட மதிப்பெண்ணும் பெற்றிருப்பார்
தினந்தினமும் ஒர்கொள்கை தயவின்றி திணிப்பதனால்
மனம்விரும்பும் மருத்துவமும் மாயமென மறைந்ததன்றோ ?
பங்காளிச் சண்டையினால் பதவியதும் பயங்கொண்டு
எங்கெங்கோ இடுக்குகளில் ஒளிந்திங்கு கிடப்பதனால்
மங்கிவிட்ட எதிர்காலம் மனப்பளுவாய் மாறிவிட
மங்கையவள் அனிதாவும் மரணவழிச் சென்றாளே ?
மாணவர்தம் வருங்காலம் மயக்கத்தில் வீழ்ந்திடாமல்
கோணாத வழிதன்னை கொள்கையெனக் கொள்ளாமல்
ஆணவத்தால் தடம்மாறி அழிவுவழி என்றென்றும்
நாணமின்றிச் செல்வதனால் நாடதுவும் தாழுதன்றோ ?
ஒன்றாக்கி நாடிதனை ஒர்வழியில் நடத்தாமல்
தன்னலத்தின் தேவையினால் தடுமாறி தினம்கிடந்து
துன்பத்தின் கிளைதன்னை தொடர்ந்திங்கே படரவிட்டு
வன்முறையை வளர்த்திங்கே வறுமையினை விதைப்பதுவோ ?
கண்திறக்கும் கல்வியினைக் கடைச்சரக்காய் ஆக்கிவிட்டு
பண்பாட்டை பாழ்படுத்தும் போதைதரும் மதுக்கடையை
திண்ணைதோறும் திறந்துவைத்து திண்டாட வைப்பதனால்
புண்பட்டு மானுடமும் புழுதியிலே வீழுதன்றோ ?
மதம்வளர்த்து மானுடத்தின் மாண்புதனை மறந்திடுவார்
அதர்மத்தால் அன்றாடம் அரசியலை நடத்திடுவார்
பதப்படுத்தும் கல்வியினைப் பாதாளம் தள்ளிடுவார்
விதவிமாய் கொள்ளையினை வீதியெல்லாம் அடித்திடுவார்.
என்றிங்கு இதுவெல்லாம் இல்லாது ஒழிந்திடுமோ ?
நன்மையெல்லாம் நடைபயின்று வீதிவலம் வந்திடுமோ ?
கண்டுவரும் கனவெல்லாம் கண்முன்னே மலர்ந்திடுமோ ?
குன்றாமல் கல்வியதும் குறைவின்றி கிடைத்திடுமோ ?