தனிமைகளில்

அன்பே
காற்றில்லா ஒரு கண்டத்தில்
நீயும் நானும்
காதலர்களாக குடியேரலாம்
அங்கு உன் சுவாசக் காற்றே
என் மூச்சாக மாறட்டும்...!
பாதையில்லாத ஒரு பாலைவனத்தில்
நீயும் நானும்
பயணம் தொடரலாம்!
பாதசுவடுகள் மண்ணில் பட்டால்
நாம் அதனை
மறைத்து விடலாம்...!
வண்ணமில்லா ஒரு
வானவில்லில் நாம்
வாசல்களாக சேரலாம்!
மோகமாக அதனை பிறர் கண்டால்
மாயமாக மறைந்துவிடலாம்...!!
ஓசையில்லா ஒரு
புல்லாங்குழலில்
புள்ளிகளாக புகுந்து கொள்ளலாம்!
பிறர் சுவாசம் தீண்டும் வரை
பிரியாமல் நாம்
வாழ்ந்திருக்கலாம்...!
மேகமில்லா ஒரு
வானில் நாம்
கானலாக மறைந்துவிடலாம்!
காணவேண்டும் என்று
பிறர் கவலைபட்டால்
அதில்
கண்ணீராக கசியலாம்...!
காம்பில்லா ஒரு மலரில்
நாம் தேனாக
தினம் தினம் குடியேரலாம்!
தேவை என்று நம்மை
தேனிகள் தேடிவந்தால்
அதற்கு தென்படாமல்
ஓடிபோய் ஒளிந்து கொள்ளலாம்...!
பக்கம் இல்லா ஒரு
புத்தகத்தில் நாம்
பாடமாக பதிந்துவிடலாம்!
படிக்க வேண்டும் என்று
பிறர் எடுத்தால்
எண்ணங்களினால்
எழுத்தாக மாறிவிடலாம்...!
நிழல் இல்லா ஒரு மரத்தின்
அடியில் நீயும் நானும்
உறவாடலாம்!
நித்தம் நம்மை யாரேனும்
காண வந்தால் நாம்
நினைவாக நினைவாடலாம்
தனிமைகளில்...!