யாருக்கு வாக்கு

விருந்தாய்க் கிடைத்த உணவை
....விற்றுக் கிடைத்த பணத்தில்
பருந்தாய்க் கொத்தும் வயிற்றுப்
....பசியை வாங்கும் மூடரே ,
மருந்தாய்க் கிடைத்த பொருளை
.... மாற்றி நோயை வாங்கும்
பொருந்தாச் செயலில் மகிழும்
....புத்தி கெட்டவர் நீங்களே.

மூக்கை விற்ற பணத்தில்
....முல்லையை வாங்கி முகர்ந்து
பார்க்கத் துடிக்கும் பதர்களே,
....பாரத அரசியல் சாசனம்
வாக்கு போடும் உரிமையை
....வழங்கிய செயலின் உயரிய
நோக்கம் உமது செயலால்
....நாசம் அடைவது நன்றோ ?

ஆட்டம் போடும் எந்த
.... அரசியல் வாதி தனையும்
வீட்டில் முடங்கிடச் செய்யும்
....வீரியக் கருவியாம் வாக்குச்
சீட்டின் பெருமை மறந்து
....தந்த பணத்தை நினைத்து
ஓட்டு போடும் புத்தியை
....ஒழித்துக் கட்டுவீர் உடனே .

எழுதியவர் : koilamakan (8-Nov-17, 10:28 pm)
Tanglish : yaruku vaakku
பார்வை : 119

மேலே