மரணம்

மரணம்
----------------
முழு நீள யாத்திரையில்
முழுதான நித்திரை

உயிர்ப்பெண்
உடம்புக் கணவனுடன்
செய்துகொள்ளும்
ஒப்பந்த ரத்து

எல்லா உயிர்களுக்கும்
காலம் கொடுக்கிற
கட்டாய தண்டனை

ஒரு
நீண்ட மயக்கம்
அல்லது
நிம்மதி உறக்கம்

முன்னுரை பிறப்பென்பதால்
முடிவுரை இறப்பு

கண்களை மூடிவைப்பார்
கண்டது போதுமென்று

கால்களைக் கட்டி வைப்பார்
கடந்தது போதுமென்று

உறவுகள் வருவார்
உரியவர் அழுவார்

உடம்பின் பயணம்
உடனே துவங்கும்

உறவுகள் அனைத்தும்
ஊர்வலம் போகும்

பிறவியில் செய்தது
பேச்சுக்கள் ஆகும்

ஆடும்வரைதான்
அவனவன் பெயர்கள்

அடங்கிப்போனால்
பிணம்தான் பேராம்

விதைத்தவன் எவனோ
புதைப்பவன் எவனோ

வீழ்ந்தவன் வாழ்வை
வினைதான் பேசும்

ஊழலாய் லஞ்சமாய்
உடனிருந்தே வஞ்சமாய்
பேராசை சேர்த்த
பெரும் பணம்தான்...

தோரணமாய் இரு புறமும் தொங்கும்

ஆனால்,
பணிந்தவனும்
பகிர்ந்தவனும்
பலர் வாழ சில செய்யின்

செம்மாந்தர் புகழ் புவியில் தங்கும்

- கரு அன்புச்செழியன்

எழுதியவர் : கரு. அன்புச்செழியன் (10-Nov-17, 11:07 pm)
Tanglish : maranam
பார்வை : 192

மேலே