ரோஜா துளசி காதல்

தானாய் வளர்ந்த
துளசி அருகில்
அவள்
ஆசையாய் வளர்க்கும்
ரோஜாச் செடி
தினம்
நீர் உரமிட்டு
களைபறிப்பதுதான்
அவள் முதல்பணி
ஒர்
அதிகலை பொழுதில்
துளசியின் ஒரு கிளை
ரோஜாவை வருடிக்கொண்டிருக்க..
அதை கோபமாய் கிள்ளி எறிந்து
யாரும் தீண்டாதாவாறு வேலி அமைத்துவிட்டாள்..
மொட்டு அரும்பியது முதல்
எண்ணிக்கொண்டேயிருக்கிறாள்,
அது
பூவாய் மாறும் நாட்களை..
நாட்கள் குறையகுறைய
அவள் மகிழ்ச்சியோ
அதிகமாகிக்கொண்டிருந்தது..
பின்
ஓர் பௌணர்மி இரவில்
மலரான மொட்டு
உலகை கண்ட மகிழ்ச்சியில் புன்னகைத்துக்கொண்டிருக்க,
அதை ரசித்தவாறே
நிலவொளியில்
தன்னை அறிமுகம்
செய்துகொண்டிருந்தது,
துளசிச் செடி
சில மணித்துளிகளிக்ளுக்கு பின்..
சூரியன் வரவில்
சில வண்டுகள்
ஆடிப்பாடி ரீங்காரமிட்டு
சுற்றிக்கொண்டிருந்தன,
ரோஜாவைச் சுற்றி.
அவ்வண்டுகளின் சத்தம்
அவள் காதுகளில் எட்ட,
தூக்கம் கலைந்து
மலர்ந்த ரோஜாவை
ஓடிச்சென்று பார்க்கிறாள்..
பின்
ஆனந்தமாய்
ரோஜாவை பறிக்கும் முயற்சியில்..
அவள் பிஞ்சு விரல்களை
முட்கள்
உதிரத்தால் நனைத்திட,
அழுதுகொண்டே
ரோஜாவை
அருகில் போட்டு
ஓடிச்சென்றுவிட்டாள்
ரோஜாவின் வேதனை கண்டு
துளசி கண்ணீருடன்
வாடிநின்றது
பின் தன்னைத்தானே வேரறுத்து
ரோஜாவை கட்டித் தழுவிக்கொண்டது..
துளசியின் இறுதிநிமிட தழுவல்களை ரோஜா அறியுமோ அறியாதோ ஆனால், அந்த ஒற்றை முருங்கைமரத் தேனீக்கு நன்றாக புரிந்தது இவர்களின் காதல் என்னவென்று..
இவர்களின் காதல் இணையாமல் போவதற்கான காரணம் புரியாமலே,
இறையிடம்...
"யாரும் அறியா காதல் இது
அறியும்முன்னே அணைந்ததென்ன..
இறுதிநொடியின் புலம்பலில்
இமைநீர் நனையாமல்
இருமனம் சிரிக்கட்டும்
காதலின் உவமைகள் இவர்கள்
மரணம்தந்து காதல்கொல்லாதே
உன்னை ஒன்றாய் அடைவதுதானே
இருவர் விருப்பம்,
அடையவிடுமுன் ஏனிந்த
மரண ஆட்டம்..
இறையே.,
இறுதிநிமிடங்களிலாவது
அவர்கள் விருப்பங்களுக்கு
செவிகொடு"
- என இறையிடம் வேண்டிக்கொண்டது முருங்கைமரத் தேனீ
இறுதியாய்,
கைகளில் மருந்திட்டு வந்தவள்
ஒரு கையில் ரோஜாவையும்
மறுகையில் துளசியையும் எடுக்கிறாள்..
பின் அவர்களை ஒன்றாய் கட்டி
மாலையாக்கி அணிவிக்கிறாள்,
அவள் கட்டி வைத்திருந்த
கோவில் சாமிக்கு..
ஆம்,
இறையை அடைவதுதான் இருவர் விருப்பமும்.
மரணத்தில் விருப்பம் நிறைவேறியது.
முருங்கைமரத் தேனீயின் வேண்டுதல்களும் பலித்துவிட்டது.