தாய் வலி

"தாய் வலி"
-கரு. அன்புச்செழியன்
--------------------
நகரத்தின்
அதிமுக்கிய வீதிகளின்
நாற்றமெடுக்கும்
சாக்கடையோர அழுக்குச்சுவர்களில்,
“குழந்தை காணவில்லை”
என ஒட்டப்பட்ட
வறண்ட சுவரொட்டிகள்
ஒவ்வொன்றும்
அவதானத்தின் அவசியத்தை
ஏளனமாய் விதைக்கிறது நெஞ்சில்
அருகில் இருக்கும்
மரணித்தவனுக்கான
"கண்ணீர் அஞ்சலி" யை விட
வலி தருகிறது
அதில்
காணக்கிடைக்கிற
குழந்தையின் முகம்
பறிகொடுத்த வலி
இடம்மாறி அழுத்தும்
அனுபவமில்லாமலேயே
பிள்ளை பெற்றவருக்கெல்லாம்
என்ன செய்வாள் இந்நேரம்..
தகரமோ, ஓலையோ வேய்ந்த
கொசுக்கள் மொய்க்கும்
கொட்டாரங்களின் திண்ணைகளில்
குழந்தை குடியிருக்குமோ!
அரையுறக்க மயக்கத்தில்
அம்மா அம்மா என்பாளோ!
புரண்டு படுக்கும்போதே
புலம்புவாளோ!
பசி தாங்காப்பிஞ்சு
பயந்து கிடக்குமோ!
நினைவை
இழந்து நிற்குமோ!
இல்லை
இரந்து நிற்குமோ!
வழியிழந்த தாயாய்
வாய் பேசாப்பேதையாய்
என்ன செய்வது
இயலாமையின் புலம்பல்களை
அனுதாபங்களை பிச்சையிடும்
அரசும் காவலும்
சுயமாய் ஒருநாள்
சோதிக்கட்டும் தன்னை
உணரும் அன்று
நோய் வலியல்ல
இது
தாய் வலி என்று.
-கரு. அன்புச்செழியன்