அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
‘சுவாமி சரணம்..!’ 5 - ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
வழிபாடுகளும் பூஜைகளும் எப்போதுமே ஒரு சந்தோஷத்தை, அமைதியை, நிறைவைத் தருகின்றன. விரத அனுஷ்டானங்களைக் கொஞ்சம் ஊன்றி கவனித்தால், அது செய்யும் மாயங்களையும் மாற்றங்களையும் உணர முடியும். அப்படி உணருவதற்குத்தான் விரதங்களும் வைபவங்களும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றார்கள். திங்கட்கிழமை சிவன் கோயிலுக்கும் செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்கும் புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கும் வியாழக் கிழமைகளில் குரு பகவான் கோலோச்சும் ஆலயங்களும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அருளாட்சி செய்யும் தலங்களுக்கும் சனிக்கிழமைகளில் அனுமன் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு ஸ்தலங்களுக்கும் சூரிய பகவான் ஆதிக்கம் கொண்ட திருத்தலங்களுக்குமாகச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள்.
தமிழ்ப்புத்தாண்டோ ஆங்கிலப் புத்தாண்டோ... மிக நீண்ட வரிசையில், பல மணி நேரங்கள் நின்று, சுவாமி தரிசனம் செய்கிறார்கள். தம்பதியாகவும் குடும்பமாகவும் வந்து, வேண்டுகிறவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
சென்னை என்றால் பெரியபாளையத்துக்கும் சிறுவாபுரிக்கும் விரதமிருந்து செல்கிறாகள். மேல்மருவத்தூருக்கு எங்கிருந்தெல்லாமோ கூட்டம் முண்டியடித்து வருகிறது. தைப்பூசத் திருநாளையொட்டி, பழநிக்கு செட்டிநாட்டு மக்கள் துவங்கி வைத்த பாதயாத்திரை, தமிழகம், கேரளம் என மக்களால், மலையே நிரம்பி வழிகிறது.
இப்படி எண்ணற்ற கோயில்களும் தரிசனங்களும் கூட்டங்களும் பார்க்கவே, சந்தோஷமாக இருக்கின்றன. அப்படித்தான் சபரிமலையும் விரதமும் மாலையணிந்திருக்கிற கூட்டமும்!
எங்கு பார்த்தாலும் கருப்பு நிறத்திலும் காவி வண்ணத்திலுமாக வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கும் ஐயப்ப பக்தர்களைப் பார்க்க முடிகிறது. அலுவலகம் நிமித்தம் காரணமாக, பேண்ட் அணிந்து கொண்டு, செருப்புப் போடாமலும் கழுத்தில் கருப்பு, காவித்துண்டை போட்டுக்கொண்டுமாக இளைஞர்கள் பலர் விரதம் மேற்கொள்வதைப் பார்க்கவே, பக்தியானது பார்ப்போருக்கும் தொற்றிக்கொள்ளும் என்பது நிச்சயம்!
ஆனால் ரயில் பயணம் போலாகிவிட்டது பக்தி. கார்த்திகை துவங்கி, தை மாத ஆரம்பம் வரை இப்படிப் பரவியிருக்கிற பக்தியும் சிரத்தையும், விரதமும் வழிபாடும் பிறகு காணாமல் போய்விடுகிறது. மார்ச் 31ம் தேதி வந்தால், ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்வது போல், கார்த்திகை தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தை, ஐயப்ப சுவாமிக்கு என ஒதுக்கிவைக்கிறோம். கொடைக்கானல் சீசன், ஊட்டி சீசன், மாம்பழ சீசன், நவாப்பழ சீசன் போல் சாஸ்தாவின் பக்தியை ஐயப்ப சீசன் என்றாக்கி வைத்திருக்கிறோம்.
ஆனால், வருடம் 365 நாளும் ஐயப்ப பக்தராகவே வாழ்ந்தவர் புனலூர் தாத்தா. எந்த மாதத்தில், எந்த நாளில் பேசினாலும் ‘சுவாமி சரணம்’ எனும் சொல், வார்த்தைக்கு முன்னும்பின்னுமாக வந்துகொண்டே இருக்கும், அவரிடம் இருந்து. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் ‘ஐயப்பன் பாத்துக்குவான்’ என்று சபரிமலை நோக்கி கைகாட்டிய பக்தி அவருடையது. தன் வாழ்நாள் முழுதும் ஐயப்ப பக்தியிலும் ஐயப்பனை நாடி வரும் பக்தர்களின் நினைப்பிலும் அவர்களுக்குச் செய்யும் சேவைகளிலுமாகவே கழித்தவர் புனலூர் தாத்தா.
‘‘நாயன்மார்களின் பக்தியால் சிவனாரின் பெருமைகளை அறிந்து கொண்டோம். ஆழ்வார்களின் பாசுரங்களாலும் அவர்களின் வாழ்க்கையாலும் நாராயணனின் பேரருளைப் புரிந்து கொண்டோம். ஐயன் ஐயப்ப சுவாமியின் கருணையை, அருளை, சபரிமலையின் சாந்நித்தியத்தை புனலூர் தாத்தா போன்றவர்களால்தான் இந்த உலகம் உணர்ந்திருக்கிறது. இவர்களுக்கு சாஸ்தாவே பிரத்யட்சமாகக் காட்சி தந்து, பல லீலைகள் புரிந்திருக்கிறான்’’ என்கிறார் பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூ.
‘’எங்களைப் போல ஐயப்பமார்களுக்கு புனலூர் தாத்தா ஞானகுரு. ஒரு பக்தர், ஒரு மனுஷா எப்படியிருக்கணும்னு வாழ்ந்து காட்டியவர் அவர். எங்க குருநாதர், அந்த ஐயனோட மலையில, ஐயப்ப பக்தர்கள் அத்தனை பேருக்கும் சளைக்காம சாதம் போட்டவர். ‘அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா’ன்னு சரண கோஷம் சொல்லாத மணிகண்ட பக்தர்கள், இருக்காங்களா என்ன? அந்த வார்த்தையை தன்னோட வாழ்க்கையாவே எடுத்துக்கிட்டார் புனலூர் தாத்தா’’ என்று பூரிப்புடன் சொல்கிறார்கள் ஐயப்ப சாமிகள்.
யோசித்துப் பார்த்தால், நம் எல்லா சடங்கு சாங்கியங்களிலும் பூஜை புனஸ்காரங்களிலும் நடுநாயகமாகத் திகழ்கிறது அன்னதானம். காசோ பணமோ கொடுத்தால், ‘இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்’ என்று நினைக்கிற உலகம் இது. நகையோ ஆபரணமோ வழங்கினால், ‘இப்போ இது கொடுத்தாங்க. அடுத்த முறை அது கொடுத்தா நல்லாருக்கும்’ என்று கனவு காணுகிற தேசம் இது. ஆடை வழங்கினால், ‘இந்தக் கலர் இருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ்ல இருந்திருக்கலாம்’ என்றெல்லாம் சொல்லுவோம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து எனும் முதுமொழி நினைவிருக்கிறதுதானே.
‘போதும்’ என்று எப்போது சொல்லுவோம். நிறைவு வந்துவிட்டால் சொல்லுவோம். நிறைவு காசுபணத்திலும், ஆடை ஆபரணத்திலும் வருவதே இல்லை. அன்னத்தில்தான் இருக்கிறது நிறைவு. அன்னம்தான் உயிர்ச்சத்துடன் தொடர்பு கொண்டது. உடல் தெம்புக்கு அஸ்திவாரமாக இருப்பது.
அதனால்தான் எல்லாப் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் அன்னதானம் கூடவே இருக்கிறது. குறிப்பாக, ஐயப்ப விரத அனுஷ்டானங்களில், அன்னதானத்துக்கு மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரண கோஷங்களில்... ‘அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா’ என்று எல்லா பக்தர்களும் சேர்ந்து கோஷமிட்டு வணங்குகிறார்கள்.
மலையையும் மலையையொட்டியும் எந்த ஊர்களோ கடைகளோ இல்லாத அந்தக் காலத்தில் இதையெல்லாம் உணர்ந்த புனலூர் தாத்தா, தன் சொந்தப் பணத்தில் இருந்து, வருவோருக்கெல்லாம் உணவு வழங்கிக் கொண்டே இருந்தார். அவர் வீட்டிலும் மலைப்பாதையிலும் எப்போதும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும். பம்பையில் இருந்து ‘டோலி’ மூலமாக, சமையலுக்கான பொருட்கள் வந்தவண்ணம் இருக்கும்.
‘அன்னமயம் ப்ராணமயம் ஜகத்’ என்றொரு சம்ஸ்கிருதச் சொல் உண்டு. அன்னம் எனும் உணவுதான் உயிரை, பிராணனை இயங்கச் செய்துகொண்டிருக்கிறது. உலகம் வேறு, மனிதர்கள் வேறு இல்லை. மனிதர்களின்றி உலகில்லை. இந்த உலகத்தை, அதாவது உலகத்தின் அத்தனை மனிதர்களையும் இயங்கச் செய்து கொண்டிருப்பதே அன்னம்தான்; உணவுதான்; சாப்பாடுதான்!
ஐயப்ப சாமிமார்களே! அந்த ஐயன் ஐயப்பனை தினமும் நினைத்து, நமஸ்கரித்து, சரண கோஷம் சொல்லி, வேலைக்குக் கிளம்புகிறீர்கள். தொழிலுக்குச் செல்கிறீர்கள். தினமும் உங்களால் முடிந்த அளவு... அவ்வளவு ஏன்... ஒரேயொருவருக்கு ஒரேயொரு பொட்டலம்... உணவுப் பொட்டலம்... அது தயிர்சாதமோ புளிசாதமோ, எலுமிச்சை சாதமோ இட்லியோ... ஒரேயொரு பொட்டலம் வழங்கி, மனதுக்குள் ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று சொல்லுங்கள்.
அங்கே... அந்தக் கணமே... ஏதேனும் ஓர் ரூபத்தில் உங்களுக்கு அருள் செய்வான் ஐயன் ஐயப்ப சுவாமி. ஏனெனில் அன்னதானப் பிரபு... அன்னதானத்தில் வாசம் செய்கிறான். அன்னதானம் செய்வோரை வளப்படுத்துகிறான். வாழச் செய்கிறான்!
அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
வி.ராம்ஜி