நடு நிசியில் ஒரு தாய்மை
நேரம் நடுநிசி... இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.
ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ரோட்டின் குறுக்கே நின்று இரு கைகளை அசைத்து நிறுத்தும்படி சைகை காட்டுகிறார்.
அந்த டிரைவர் வேகத்தை குறைத்து காரை நிறுத்துகிறார்...
“தம்பி ஆஸ்பத்திரிக்கு அவசரமா போகணும்”
“நான் வரமுடியாதும்மா. இன்றைய ஓட்டம் முடிஞ்சுது.. நான் இனி சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்”..
“இல்ல தம்பி..என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, வெளியூர் போன அவவூட்டுகாரர் புறபட்டு வந்திட்டிருக்கார். தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா உன்னை கடவுளா கும்பிடறேன்”.. கைகூப்பி நிற்கிறாள் அப்பெண்மணி கண்களில் பதற்றத்துடன்...
“நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன் ஆனால் வாடகை 1000 ரூபா ஆகும்.. ஆஸ்பிடல் போனப்புறம் தகராறு செய்ய கூடாது."
500 ருபாய்தான் வாடகை என்றாலும் அவன் கேட்ட வாடகைக்கு பேரம் பேசாமல் அப்பெண்மணி சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க.. பிரசவவலி பெண்ணுடன் கார் மருத்துவமனைக்கு விரைகிறது..
அடுத்த சோதனை இதோ..
கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.
"அய்யோ.. கடவுளே.. தாங்கமுடியல்லே..என்னை காப்பாற்று.."
அந்த கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது.
ஒன்றல்ல இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறக்கிறது.
அந்த பெண்ணின் அழுகையோ உச்சத்தில்.. டிரைவர் என்ன நினைத்தானோ.. காரை இன்னும் சற்று வேகமாக ஓட்டி ஹாரனை அடித்தவாறே மருத்துவமனையில் முன் வாசலில் வேகமாக நிறுத்தினான்.
நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அந்த பிரசவத் தாயின் அலறல்...
மருத்துவமனை ஊழியர்கள் வேகவேகமாக ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி அவசர பிரிவுக்கு பிரசவவலியால் துடிக்கும் அப்பெண்ணை கொண்டு ஒடுகிறார்கள்.
நன்றி பெருக்குடன் டிரைவரை பார்த்து மௌன மொழியில் கும்பிட்டு மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி இருகைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டுகிறாள்.
அந்த கார் டிரைவரும் அமைதியாக அங்கே நின்று கொண்டிருகிறான்.
சற்று நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து "சுகப்பிரசவம் நடந்துள்ளதம்மா. ஆண் குழந்தை." புத்துயிர் பிறந்த செய்தி சொல்லிவிட்டு போகிறார்..
இந்த தாய் கார் டிரைவரிடம் “தம்பி! ரொம்ப நன்றிப்பா.. கடவுளா வந்து இரண்டு உசுர காப்பாத்திட்டா.. இந்தா நீ கேட்ட பணம்” என 1000 ரூபாய் பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
“வேணாம்மா.. அதிக பணம் கேட்டேன் மறுக்கல்லே..ஆனால் எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் உங்க மூலமா இன்னைக்கு எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைச்சுக்குங்க.” என்று சொன்னபடி காரை நோக்கி நடக்க ஆரம்பித்தவன்...
சட்டை பாக்கட்டிலிருந்து போனை எடுத்து ஒரு நம்பரை தேடி கண்டுபிடித்து டயல் பண்ணினான்..
“ஹலோ முதியோர் இல்லமா?”
“ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?”
“மன்னிக்கவும். போன மாதம் அனாதைன்னு சொல்லி ஒருத்தர உங்க இல்லத்துல சேர்த்தேன்.."
"சரி.. அதுக்கு இப்போ என்னவேணுங்க.?"
"அவுங்க அனாதை இல்லைங்க என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே நான் வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக..”
மறுமுனையின் பதிலுக்காக காத்திருக்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்...