முதுகெலும்பை முறியோம்
வந்தாரை வாழவைத்தது;
பசியறிந்து பரிமாறியது;
வீரத்தின் விளைநிலமானது;
நீதியால் நெகிழவைத்தது;
மாரியும் பொய்க்கவில்லை;
மன்னனும் பொய்க்கவில்லை;
பசியும் அறியவில்லை;
பசியால் மடியவுமில்லை;
கந்துவட்டி கடனில்லை;
நொந்துபோகும் நிலையில்லை;
எத்தனை பெருமை!
எத்தனை செழுமை!
இப்போதோ,
ஆட்சியும் ஆடியது;
மாட்சியும் மங்கியது;
சோற்றில் கை வைக்க,
சேற்றில் புதைந்த கைகள்,
மக்களை காப்பாற்ற,
மாக்களையும் காப்பாற்ற,
வாழ்க்கையோடு போராடியது!
பயிரும் கருகியது;
பயிர்வித்தவனும் கருகினான்;
ருசியை மறந்தான்;
பசிக்கு மடிந்தான்;
ஆட்சியாளனும் கண்டுகொள்ளவில்லை;
ஆண்டவனும் கண்டுகொள்ளவில்லை;
நிமிர வைக்கும் நாட்டின் முதுகெலும்பு,
கூன் விழுந்து முறிந்து போனதோ?
உழவை மறந்தோம்!
உழவனையும் மறந்தோம்!
உணவை மறப்போம்!-இறுதியில்
உயிரையும் துறப்போம்!