கு அழகிரிசாமி

கு. அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970) குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.

இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர். தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்

அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

’உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.

இதழாசிரியராக

அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

"ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.

"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.

அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.

"ராஜா வந்திருக்கிறார்' என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.

"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி.

மலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.

1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இறுதியாக "சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.

எழுதியவர் : (30-Nov-17, 11:56 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 165

மேலே