பார்வையின் மறுவிதம்

அன்றொருநாள் அவள் என்னை எதேச்சையாகத்தான் பார்த்திருக்க வேண்டும் பல நாட்கள் அவளை காணும் போதெல்லாம் என்னை பார்த்து ஒரு உதட்டோடு ஒட்டிய புன்னகை சிந்துவாள் அது என்னை குழப்பியதற்காகவே உதிர்ந்த புன்னகை. அவ்வளவுதான் மீண்டும் அவள் முதிர்ந்த பழ மரக் கொப்புப்போல தலை தாழ்த்தி உன்னிப்பாக எதையோ தேடிக்கொண்டிருப்பாள் நானும் என்னவாயிற்று என்று தரையை நோக்கினால் ஒன்றுமே இருக்காது. அங்கு என்ன இருக்கிறது என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த விடயம்

எப்போதும் கண்டால் ஒரு புன்னகை அவளை நான் முன் பின் கண்டதில்லை நான் எத்தனையோ பெண்களை கண்டவுடன் கதைக்க வேண்டும் பழக வேண்டும் என்று எனக்குள்ளே பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் எதையும் முயற்சித்தது இல்லை

என்னை பார்த்து சிரிக்கும் முதல் ஜீவன் இவளாகத்தான் இருக்க வேண்டும் இந்த புன்னகை மாற்றங்கள் கடைசி ஒரு மாதம் தாண்டி போய்விட்டது. நேரில் சென்று கதைப்பதற்கு கொஞ்சம் நடுக்கம்

சில நேரங்களில் நான் கனவில் பணக்காரனாகி விடுவேன் விடிகின்ற பொழுது சேவல் கூவுவதை விட நாய்களின் ஊளைச்சத்தங்கள் மீண்டும் என்னை பழைய வாழ்க்கைக்கு திருப்பி விடும் அதுபோலத்தான் இவளின் புன்னகை நிழல்களோடு வாழ வேண்டி இருந்தது

"என்னங்க.... ஒரு நிமிஷம் "

அவள் நிற்கவில்லை
எப்படியோ அவளை இடைமறித்து....

அதே புன்னகையுடன்
"ம்..... சொல்லுங்க "என்று கைவிரல் மொழிகளால் கேட்டாள்.

"உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா.... "

அதற்குள் அவள் தன் " ATM "அட்டையை எடுத்து காட்டிவிட்டு" அண்ணா "என்று எழுதியிருந்தாள். அந்த அட்டையை நான் தான் எடுத்து கொடுத்தது ஞாபகம் வந்தது

அதன் பிறகு அவள் என்கையை பிடித்து அவள் பெயரை எழுதி விட்டு தன்னால் வாய் பேச முடியாது என்பதையும் அவள் மொழியில் உணர்த்தி விட்டாள்

அத்தருணம் வெட்கத்தால் கூனிக்குறுகி சிலையாகிவிடத்தான் முடிந்தது

எழுதியவர் : ஆ. ரஜீத் (3-Dec-17, 9:19 pm)
பார்வை : 226

மேலே