காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் மானிடா !
கலங்கி நின்றால் காரியம் நடக்குமா ?
விலகிப் போனால் வீரமா யிருக்குமா ?
உதவும் எண்ணம் உன்னிடம் இருந்திடில்
பதமாய் வாழ்வு பாங்குடன் அமையும் !!
ஊருக்கு உழைப்பவன் உலகினில் நிலைப்பான்
பாருக்குள் புகழும் பரவிடும் நாளும் .
உழைப்பை என்றுமே உறவாய்க் கொண்டிடில்
பிழைப்பு தாமே பின்னே பற்றிடும் .
வந்திடும் நலன்கள் வாயிலில் தினமும்
தந்திடும் பலன்கள் தக்கதோர் வகையில்
சுற்றமும் சிறப்பும் சூழக் காண்பீர் .
சற்றுமே தளராச் சந்ததி பெருகும் .!!
நாட்டைக் காக்கும் நல்லதோர் முயற்சி
காட்டுக உன்றனின் உழைப்பு தன்னில் .
நம்பியே உலகில் நன்றாய் நீயும்
செம்மை யாகவே செறிவுடன் உழைப்பாய் !!
வான மெங்கும் வான்மழை பொழியும் .
மானம் காக்கும் மாண்புடைத் தொழிலாம் .
ஏரினைப் பிடித்தே ஏசாப் பாதை
பாரினில் பணியாம் பந்தமும் நமக்கே !!
உன்னத உழைப்பை ஊன்று தோழா .
நன்மை யாவுமே நலமாய்ச் சேரும் .
ஆயுள் முற்றிலும் அயர்வு வேண்டா .
வாயில் சோற்றை உண்பாய் ஊரினில் !!
நெற்றியின் வியர்வை நீளும் நாளே
வெற்றியின் வழியிலே வெளிப்படும் முழுதென .
உழைக்கும் வர்க்கம் உள்ளது வரையிலும்
மழைத்துளி பொழிந்து மண்ணில் நிற்கும் . !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்