ஆனந்த யாழை --- முஹம்மத் ஸர்பான்

ஒரு குழந்தை பேசுகிறேன்

என் கண்களை தோண்டிவிட்டு வானத்தை பார்க்கச் சொன்னார்கள்; என் கால்களை உடைத்து விட்டு மான்களோடும் முயல்களோடும் துள்ளி விளையாட அனுமதி தந்தார்கள்; பிறவி ஊமையான அவளிடம் பூக்களைப் பற்றி கேட்டார்கள்; பறவைகளைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்து வாழ ஆசை தான்; ஆனால், நாங்கள் கைதியான சிறைச்சாலையில் விடுதலை மட்டும் கானல் நீரானது; பென்சில் பிடிக்க இஷ்டப்பட்ட விரல்களால் கஷ்டப்பட்டு புகையிலைகள் மடிக்கின்றோம்; காயப்பட்ட மூங்கில்கள் ஒரு நாள் புல்லாங்குழலாகிறது; ஆனால், நாங்கள் சுதந்திரமான பூங்காற்றைக் கூட அடிமைத்தனமாய் நுகர்கிறோம்; கல்லும் மண்ணும் இல்லாமல் ஒரு வேளை உணவுண்ண நெடுநாள் ஆசை; திண்ணையில் படுத்துறங்கும் அனாதை அன்னையின் மடியில் துயில்வதை போல கனவுகள் நிராசையாகிறது.

எச்சுப் பாத்திரங்கள் கழுவும் போது எழுத நினைத்த கவிதைகள் எல்லாம் கண்ணீர் சிந்தி அழுகிறது; சுமந்தவள் பாரம் என்று தூக்கி வீசிப்போன அந்த தெருமுனை குப்பைத்தொட்டியை அன்புள்ள நாய் இன்றும் காவல் செய்கிறது; சாக்கடையில் விழுந்த பழங்களை கங்கையில் கழுவி உண்பதன் மூலம் எங்கள் இரைப்பையும் நிறைகிறது; பட்டாம் பூச்சிகளை பார்க்கும் போதெல்லாம் பட்டுப்போன வாழ்க்கை தான் நினைவுக்கு வருகிறது; என்னைப் போன்ற மனிதன் என்னைப் பார்த்து தீட்டென்று திட்டும் போதெல்லாம் இறந்து போக எங்கிருந்தோ அழைப்பு வருகிறது; சிகப்பு பொட்டு வைத்த அன்னை கரு சுமந்து நடந்து செல்வதைக் கண்டால் என் நிலை யாருக்கும் வரக்கூடாதென்று இறைவனிடம் கையேந்தி பிராத்தனை செய்கிறேன். நுரை முட்டைகள் போல என் நினைவுகளும் உறுதியான வடிவமின்றி உடைந்து போகிறது; யாரும் பேசாத என் காதுகளோடு காற்று மட்டும் புரியாத பாஷையில் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டயிருக்கிறது, அது மரணத்தின் தொடக்கமாகவும் இருக்கலாம்.

குகைகளின் அடர் இருள் போல கண்களில் கண்ணீர் மட்டும் குடித்தனம் அமைக்கிறது; அமுதத்தை சம்பாரித்து கட்டிய தேன் கூட்டில் நெருப்பை அள்ளி வீசியதைப் போல சிரிக்க நினைத்தும் கண்ணீர் சிந்துகின்ற நிர்ப்பந்தம்; மலருக்கும் முள்ளுக்கும் நடுவே முளைத்த இலைகளை போல நித்தம் சத்தமின்றி உதிர்ந்து கொண்ட இருக்கிறது எங்கள் வாழ்க்கை; பட்டாசு வெடித்து கைகள் காயம் வாங்கியது கிடையாது; ஆனால், பட்டாசு தயாரிக்கும் பணியில் கைரேகை அழிந்து விட்டது. சாலையில் கூட எவனோ ஒருவனின் இரைப்பை நிரம்ப பிச்சைக்கார வேடம் போட்டு நடிக்கின்றோம்; ஆலம் விழுதுகள் போல நெஞ்சுக்குள் ஆசைகள் பல கோடி; அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி ஆகாயத்தையும் தொட்டு விடலாம்; ஆனால், நாங்கள் ஆகாயத்தை தொட்டுப் பார்க்க ஆசைப்படவில்லை, சுமந்த அன்னையின் மடியில் தூங்கி அவள் கால்களுக்கு செருப்பாக சேவை செய்து பிறவிக்கடனை தீர்க்கத்தான் யாசிக்கிறோம்.

ஐந்து வயதுச் சிறுமியின் கிழிந்த ஆடையின் வழியே தெரியும் அங்கத்தை பார்த்து ஆணுறைச் சந்தை வியாபாரம் உச்சம் தொடுகிறது; பெயர் தெரியாத பலரின் கருவை சுமக்கும் பரிதாபமும் முகவரியில்லாத குழந்தைகளின் வசமாகிறது. தாயின் பெண்ணை மறந்த சமுதாயம் எங்கள் கூட்டத்தின் சிட்டுக்களை தத்தெடுத்து விபச்சாரத்திற்காய் தீனி போட்டு வளர்க்கிறது; ஊஞ்சலாட நினைத்தும் தூக்குக் கயிறாக மாறிப்போகிறோம்; ஆயிரம் கோடி விண்மீன்களின் சுதந்திரத்தை ஒரு நிலவு தட்டிப்பறிப்பதை போல அனாதை என்ற சொல்லில் எங்கள் உலகம் சுருங்கிப் போகிறது; மதங்களுக்காய் சண்டையிடும் உள்ளங்கள் மனிதத்தை பற்றி சிந்திக்க தவறிவிட்டது; காற்றை லாபகமாய் பயன்படுத்தி பறக்கும் காற்றாடி ஒரு நொடியில் நூலறுந்து குப்பையாவதை போல கருவறையில் கண்ட கனவுகள் தெருவறையில் நிராசையாகி விட்டது. இறைவனை ஒரு முறை இவ்வுலகில் சந்தித்தால் ஒரு மணி நேரம் மனம் விட்டு சிரிக்க வரம் கேட்பேன்; மறுவுலகில் சந்தித்தால் சுவர்க்கத்தில் ஒரு குடிசையை யாசிப்பேன். அலைகள் போல வாழ நினைத்தும் கரையாக ஒதுங்கி நின்றேன்; முள்ளைக் கூட முள் தான் தண்டனை செய்யும்; என் உயிரை மட்டும் உடலாலும் உள்ளத்தாலும் தண்டனைசெய்தது முறை தவறிய ஆண்மை. யாருக்கும் தெரியாத ஓரிடத்தில் ஒரு மயானம் இருக்கிறது; அங்கு வந்து பாருங்கள், இறந்து போன எங்கள் கூட்டத்தின் ஆடை மின்மினிப் பூச்சிகள்; ஒரு முறை தான் வாழ்க்கை என்பார்கள் அது மட்டும், அப்படியே எங்கள் வாழ்க்கையில் மாறாமல் இருக்கட்டும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Dec-17, 3:41 pm)
பார்வை : 255

மேலே