தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு

இனிய ஜெயம்,

பொதுவாக நமது நண்பர்கள், மற்றும் இளம் எழுத்தாளர்கள் எழுதும் பெரும்பாலானவற்றை வாசித்து விடுவேன். சுனில் கிருஷ்ணன் கணையாழி போட்டியில் பரிசு வென்ற பேசும் பூனை கதையை எழுதி முடித்ததுமே என்னிடம்தான் சொன்னார். அனைத்துக்கும் பொதுவான பாராட்டுக்கு மேல் நான் எதுவுமே சொன்னதில்லை. நண்பர்கள் ஏன் எங்களது கதைகள் குறித்து ஏதும் சொல்ல மறுக்கிறீர்கள் என நேரடியாக கேட்கும்போது பெரும்பாலும் சிரித்து மழுப்பி விடுவேன். காரணம் ? [ இதை எழுதி விட்டால் கடக்க முடியுமா பார்க்கிறேன் ] பொறாமை. ஆம் பொறாமை அன்றி வேறில்லை. நான் ஒரு சுயசரிதை தன்மையிலான நாவல் ஒன்று முயன்று வருகிறேன். முக்கியமான தருணங்கள் எழுத வருகையில் உணர்கிறேன். உள்ளே உள்ள சில இருள் இன்னும் இருளாகவே எஞ்சி இருக்கிறது. சாம்பலைத்தான் நுதல் சூட இயலும், தழல்வதை எப்படி ? ஏழு ஜென்மம் கொண்டு அவமானத்தீயில் வெந்தழியும் ஒரு சொல்லை எழுதி விட்டு அங்கேயே நிற்கிறேன் மூன்று மாதமாக.

நான் சாம்பலாகுமுன் உள்ளிருந்து உழற்றும் அழல் தணியுமா ? இந்த இடைவெளியில் நின்று, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்தையும் நோக்குகையில் “நாசமா போங்கலே” என சபிக்கத்தான் தோன்றுகிறதே அன்றி விமர்சிக்கத் தோன்றவில்லை. இந்த நிலைகளைக் கடந்து இப்பதிவு எழுத காரணம், தூயன் எழுதிய இரண்டு கதைகளே.


முகம்.

தோட்டியர் குடியை சேர்ந்த பாண்டியன் நோக்கில் விவரிக்கப்படும் கதை. கதை நடக்கும் அந்தக் களம் அங்கிருக்கும் எவருக்கும் எந்த ஒவ்வாமையும் அளிக்கவில்லை. தலைமுறைகளாக அதிலேயே உழல்பவர்கள். பாண்டியனுக்கு பால்யம் துவங்கி, இக்கணம் வரை அச்சூழல் ஒவ்வாமை அளிக்கும் ஒன்றே. எதிரில் குறவர் குடி . தோட்டியிலும் தாழ்ந்தவர்கள். குறவர் குடியை சேர்ந்த [பன்றி வளர்ப்பு தொழில்] பெருமாளுக்கும்,பாண்டியனின் அம்மாவுக்கும் தவறான தொடர்பு. சூழலின் இறுக்கம். பெருமாள் பாண்டியனின் அம்மாவை கொன்று விடுகிறான். பாண்டியன் பெருமாளை கொல்லும் வெறியுடன் தேடி அலைகிறான். இந்தக் கதை கட்டுமானம் மீது, புறசித்தரிப்பு, அகசித்தரிப்பு, உணர்வு நிலை, வழியே துல்லியமான, வாழ்க்கைக்கு இணையான

நிகர்வாழ்வு ஒன்றினை உருவாக்கிக் காட்டுகிறார் தூயன்.

இந்த வாழ்க்கைக்குள், காலிழந்த தகப்பனாக மாறி நண்டு போல ஊர்ந்தேன், பால்ய கால பாண்டியனாக மலம் செறிந்த பாதையில் நடந்து குடல் குமைந்தேன், பன்றி வேட்டையாட கழிவுகள் மண்டிய புதர்க்காட்டில் சுருக்கு கயிற்றுடன் ஓடினேன், அம்மாவின் தொடையில் குருதி தடம் கண்டு கொதித்தேன், கையில் ஆயுதத்துடன் பெருமாளை தேடி அலைந்தேன்.

கதை அளிக்கும் அற்புத அனுபவங்களில் ஒன்று, மரணிக்கும் தருவாயில் பாண்டியனின் நனவிலியில் இருந்து எழுந்து வரும் பன்றியின் முகம். பாண்டியனால் கொல்லப்பட்ட பன்றி. பெருமாளால் குலதெய்வ கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட பன்றி. இறுதி வார்த்தை தொட்டு இக் கதைக்குள் வரும் பன்றிகள், மனிதர்களுக்கு இணையான உயிர்களாக ரசவாத மாற்றம் பெறுகின்றன. மானுட வாழ்வை என்றென்றும் அலைக்கழிக்கும் காமம், க்ரோதம், மோகம், மூன்றும் எந்த அணிகலனும் அற்று நிர்வாணம் பூணும் இக் கதை உலகில் கோவிலுக்கு நேர்ந்து விடப்படும் அப் பன்றி இக்கதையை முற்றிலும் அந்த தளத்திலிருந்தும் உயர்த்தி, மிக்க தனித்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றுகிறது.

இரு-முனை.

செத்துப்போன விபினின் கணினியில் ஷாடோஸ் எனும் தலைப்பில் குறிப்புகளாக கிடைக்கும் அவனது மனப்பிறழ்வு சார்ந்த அனுபவ புனைவு வகைமையில் விரியும் கதை. ஓவியங்கள் எனும் தனித்துவமான களனை அடிப்படையாக கொண்ட கதை.

இக்கதையின் முதல் அழகு அதன் கற்பனையும் வடிவமும் அனாயாசமாக முயங்கி இழைந்திருக்கும் தன்மை. வேறு எந்த வடிவிலும் இந்த உலகை விவரித்து விட முடியாது என்று நம்பும் வண்ணம் சித்தரிக்கப்பட்ட உலகு. அதற்கேற்ற மொழி.

இரண்டாவது அழகு, இக் கதை தேர்ந்து கொண்ட வடிவம் காரணமாக இயல்பாக உருவாகிவரும் சப்டெக்ஸ்ட். இரண்டு பக்கமும் வீடுகள், அதன் இடையே இயல்பாக உருவாகிவரும் தெரு போல. உதாரணமாக இக்கதையில் வரும் மர்லின். அவளும் விபின் போல பாதிக்கப்பட்டவளா, அல்லது விபினின் புனைவில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டவளா?

மூன்றாவது அழகு இக்கதை, இது பேசும் சிக்கலை அதன் ஆழத்தை, வரலாற்று பின்புலத்தில் வைத்து விரிப்பது.

அஜிதனுடன் அஜந்தா குகை ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அங்கே ஒருவரும் இல்லை. நானும் அஜிதனும் அந்த ஓவிய வனத்தில் மின்மினி போல, [அதன் ஒளி எல்லைக்குள் துலக்குவதை மட்டுமே நோக்கியபடி] திளைத்துக் கொண்டிருந்தோம். அந்த ஓவிய பாணிக்கு முன்தொடர்ச்சி என ஏதும் இல்லை. பௌத்த ஆத்மீக சாதகர்கள், குறிப்பிட்ட யோக நிலைகளின் இருளை கடந்து வெளியேற, இத்தகு ஓவியங்களை வரைந்தெடுத்திருக்கிறார்கள் என்கிறது, இந்த ஓவியம் சார்ந்த பின்புலம். ஓவியங்களில் ஒன்று காலா புத்தர். விழிகள் வரையப்பட்ட நிழல், நிழலுக்குள் நிழல் என அவரது மர்மப் புன்னகை.

தூயனின் இக்கதை, அந்த அஜந்தா ஓவியங்களின் படைப்பாளிகள் கொண்ட இருளில், இடரில் சென்று தைக்கிறது. அந்த பலரில் ( க்ளிம்ப்ட் உட்பட) ஒருவனே பிபின்.

இரா முருகன் கதை உலகுக்கு அருகே வரும் கதை. அசோகமித்திரனின் குகை ஓவியங்கள் என்ற மகத்தான சிறுகதைக்கு இணையான கதை.

கடலூர் சீனு

***

எழுதியவர் : (12-Dec-17, 1:14 am)
பார்வை : 59

மேலே