இரவு இன்னிசை கச்சேரிகள்
தூரத்தில் தூளியில் ஆடிடும்
குழவியின் சிணுங்கல்கள்
தூக்கம் துறந்து தாலாட்டும்
தாய்மையின் சந்தங்கள்
இரவின் மௌனம் குலைக்கும்
இதமான கீதங்கள் !
அயராது செவிப்பறை சீண்டும்
அந்துப்பூச்சிகளின் அலறல்கள்
இடம் பெயர்ந்து வழிதங்கிய
புள்ளினத்தின் முணங்கல்கள்
நடுநிசி நாடக அரங்கேற்றத்தின்
இடைவிடாத ஒத்திகைகள்!
ஆட்டிப்படைக்கும் காற்றின் விசைக்கு
தலையாட்டும் கிளைகளின் அசைவு
நதிதேடி ஜதியுடன் ஓடும்
ஓடையின் சலசலப்பு
ஊரடங்குத் திருவிழா களிப்பில்
இயற்கையின் எக்களிப்பு!
இணைய துணைத்தேடி அலையும்
வீதிநாய்களின் ஓலங்கள்
மந்தமாய் நகரும் இரயில்பெட்டிகள்
இழுவை ஓசைகள்
நாள் முடிந்த துயரத்தில்
காலமகள் ஒப்பாரிகள்!
காற்றுத் துகள்களை அதிரவைக்கும்
அலைப்புரவியின் ராகங்கள்
இரவுமகள் அதரம் பாடும்
உயிர்க்கோள கீர்த்தனைகள்
உறக்கமற்ற இரவில் ரசிக்கும்
இன்னிசைக் கச்சேரிகள்!
கவிதாயினி அமுதா பொற்கொடி