இலக்கியங்களில் பெண்கள் நிலையும் பெண்ணியமும்

தொல்காப்பியத்தில்.....
அச்சமும் மடமும் நாணமும் பயிர்ப்பும்
அங்கனையர் யாவர்க்கும் அருங்கொடை குணமே
கற்புடன் துணைவன் மகவுகள் காத்தல்
பொற்புடை மங்கையர் தலையாயக் கடனே
தற்புகழ் பொழிதலும் சொல்லெதிர் மொழிதலும்
நற்குடி நங்கையர் நடத்தைக்கு இழுக்கே

கடல்வழிப் பயணம் பெண்டீர்க்கு மறுதலிப்பு
உடன்வழி துணையுடன் ஊர்செலல் தடைவிதிப்பு
உடல்வழித் தொழில் புரிந்தோர் பரத்தையரென்று
களவியல் பெண்மையை பழித்து சுழித்தது
பெண்ணியம் என்ற அக்கினி அண்டம்
பிறவாமலே கருவில் சிதைந்து கழிந்தது!

சங்க காலத்தில்....
குலவளம் காக்க மகவுகள் ஈன்றல்
துணைநலம் மகிழ்விக்க புற அணிபூணல்
மறுமணம் புரிந்த கணவனை ஏற்றல்
இன்னான் எனினும் இணைந்து சகித்தல்
அடக்கமும் சார்பும் பெண்மைக்கு அழகு
அடிசாய்ந்து மாய்ந்தது பெண்ணிய வழக்கு

ஆடவர்க்கு இணையாய் செல்வம் ஈட்டியும்
அஞ்சாது மறத்தியாய் தினைப்புனம் காத்தும்
ஔவையார் வெள்ளிவீதியார் நப்பசலையாரென
பெண்பாவலர் பலர் படைப்புலகில் மிளிர்ந்தும்
பெண்ணியக் குரல்வளை மெலிந்து நலிந்தது
ஆணாதிக்க ஆணவக்குரல் ஓங்கி ஒலித்தது

சங்கம் மருவிய காலத்தில்....
சமணமும் பௌத்தமும் தழைத்து ஓங்கியது
சகல சங்கடமும் பெண்மையென சாடியது
வசிய விருந்தாக வஞ்சியரை வரித்தது-அவளே
வாழ்வியல் ஒழுக்கத்தின் சார்பென உரைத்தது
மடலேறுதல் என்றும் ஆண்மைக்கு சிறப்பு
மணாளனை தேர்ந்தெடல் பெண்மைக்கு மறுப்பு

பெண்ணின் அழகு பசுந்துணர் நாணுதல்
பேசா மடத்தையாய் பொறுத்துணர்ந்து பேணுதல்
கற்பே குலப்பெண்மைக்கு உயிர்ப்பு-அதை
குலையாது காப்பது ஆடவர்க்கு பொறுப்பு
நாலடியிலும் ஈரடியிலும் பெண்ணியம் முளைத்தும்
நாற்புர அரணுக்குள் பெண்மை இளைத்தது!

காப்பியங்களில்....
கற்புடை இறைமையாகி கண்ணகி சிலம்பின் கருத்தானாள்
கணிகைமாதவி காப்பிய மணிமேகலையை உருவாக்கினாள்
புதுமைப் புயலாய் புரட்சிப் பொங்கனலாய்
பெண்ணியத்தை பொறித்தாள் பூமகள் மணிமேகலை
பாலியல் பயப்பிற்கே பெண்ணினப் படைப்பென
பலதார மணத்தை சிலாகித்தது சிந்தாமணி

தற்கொல்லியை முற்கொன்ற புரட்சிப் பத்தரையை
கலப்புமணம் சூட்டி பாத்திரமாக்கியது குண்டலகேசி
சீர்திருத்த மணத்திற்கு முதல்வாயில் வளையாபதி
சீலமற்ற சிற்றின்பர்களாய் ஆடவரை சித்தரித்தது
குலமகள் இழிமகளென பெண்மையை பிரித்தாலும்
பெண்ணியம் பேசியது ஐம்பெரும் காப்பியங்கள்!

பக்தி இலக்கியங்களில்.....,,
நாமம் அறிந்திரா நாயகன் உயிர்துறக்க
நல்இளவல் காத்திட துறவானாள் திலகவதி
இறையருளால் துணையுண்ண மாங்கனிப்பெற்ற புனிதவதி
இல்லான் கழலுற இறைபணிக்காய் பேயுரு கொண்டாள்
பரத்தையர் நாடிய துணைவனை விலக்கி
தனித்து துணிந்து வாழ்ந்தாள் நீலகண்டன் மனைவி

பாசுரம் படைத்த ஆயர்குல ஆண்டாள்-அதில்
காமமும் உட்புகுத்தி கழிபடரோன் காதலானாள்
அக ஒழுக்கத்தால் இறைத்தொண்டு ஆற்றினும்
புற ஒழுக்கத்திற்கு போர்க்கொடி பிடித்தது பெண்ணியம்
ஆணுக்கு நிகராய் திறன் பெற்றும் பெண்மை
ஆழ்வார்கள் மொழியில் அடிதாழ்ந்தே நின்றது!

சிற்றிலக்கியங்களில்.....,...
பிள்ளைத்தமிழ் பருவங்களில் இருபாலரில் பேதமை
பிரிதாய் சாற்றியது ஆணுக்கே அரசுரிமை
உலா கலம்பகம் பரணி யாவையும்
பாட்டுடைத் தலைவனை பரமனாய் புகழ்ந்தது
ஆணின் பிரச்சார பத்திரமான சிற்றிலக்கியம்
பெண்மையை இன்பத்தின் வடிவாக மொழிந்தது

ஐந்தகவை குழவியும் பேரின்பக் கிளத்தியும்-ஆண்
மையலில் வீழ்ந்ததாய் பெண்மையை இழித்தது
ஆணையிடும் தலைவனுக்கு அடிபணியும் பெண்மை-அவன்
ஆயுள் முடிந்தால் உடனிறத்தல் பெருமையானது
சிகரமாய் ஆடவரை உயர்த்திய சிற்றிலக்கியம்
துகளாக்கி மண்ணோடு சாய்த்தது பெண்ணியத்தை!

மறுமலர்ச்சி இலக்கியத்தில்........
உடமையும் கடமையும் உரிமையாய் உணர்ந்தும்
மடைத்தொழில் மகளீர்க்கு திணித்து சாசனமானது
கோரிக்கையற்ற வேர்பலாக்கள் புனர்வாழ்வு
பாரதிதாசன் முற்போக்கு கவிவீச்சால் உயிர்துளித்தது
பூட்டிய அறைக்குள் பெண்ணை முடக்கிய வீணரை
சாடிய பாரதியால் பெண்ணியம் விழித்தது

பெண்ணுரிமையை பொசுக்கிய ஆணாதிக்கத் தணல்
சிற்சில சலுகைச் சாரலில் சற்றே தணிந்தது
வைரமுத்து மேத்தாவின் வீரிய வரிகளால்
பெண்ணியம் எழுந்து வானளாவிட விரைந்தது
பேரிடர்களை எதிர்கொண்டு வீறுடன் போரிட
போராளியாய் நிமிர்ந்து நடைபோடத் துணிந்தது

ஊடகங்களில்.....
ஊடகங்கள் சுயமான சிந்தனையை சிதைத்து
பொழுதுபோக்காகி பொருளீட்டும் சந்தையானது
பண்பாடும் கலாச்சாரமும் ரசமிழந்தக் கண்ணாடியாகி
வேண்டாதக் கழிபொருளாய் பரண் தட்டிக்குள் மறைந்தது
ஆபாச அசைவுகள் கலைப்பார்வை என்றாகி
அரைநிர்வாணம் தொலைக்காட்சியில் அங்கீகரிக்கப்பட்டது

பெரிதாய் மங்கையர் நலம்பேணும் இதழ்கள்
பெண்ணிய வடிவுக்கு தூபம் காட்டியது
எழுதுகோல் வாளேந்திய பெண்கவிகள் போர்முரசு
எழுச்சியை பறைசாற்றி எண்திசையும் ஒலித்தது
அனைத்துத் துறைகளிலும் ஆளுமைப் பெற்ற பெண்மை
ஆணாதிக்க விசமங்களுக்கு அந்திமச் சங்கு ஊதியது


கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (13-Dec-17, 11:07 am)
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே