நாங்களும் அந்த பூங்கா நாற்காலியும்

"நாங்களும் அந்த பூங்கா நற்காலியும்" என்ற தலைப்பில் எழுதியது...

மழை பெய்து ஒய்ந்த அந்த மாலை நேரச்சாலை....
பூக்கள் இரைந்து கிடக்கின்ற அந்த பூங்கா வழிச்சாலையில் நாங்கள் நடக்க மட்டுமே அங்கு இடமிருந்தது....

பல காதலர்களை கண்ட அந்த பூங்கா நாற்காலி நாங்கள் வருவதை அறிந்து மழைக்கு முன்பே நனைந்திருந்தது...


நான் ஏதோ பேச முற்பட்டபோது அவள் ஏனோ என்னை தடுத்தாள்.. இதழ் மறந்த அந்த வார்த்தையை அவள் இமைகளுக்குள் இறக்கி வைத்துவிட்டு இதயத்தின் காதுகளை தீட்டிக்கொண்டேன்...

இருவரும் நிலைமறந்து கேட்டோம்..
எங்களுக்கு நிழல் பரப்பியுள்ள அந்த மரக்கிளைகளில்
இரகசியங்களை இருப்புக் கொள்ளா குயில்களும்,கிளிகளும் தங்கள் துணைத் தேடும் படலத்தில் ஏக்கக்கவிதைகளை ஒப்பனை இல்லாமல் அரங்கேற்றிக் கொண்டிருந்தன....

ஆனால் இங்கோ நிலைவேறு..
இருவருக்கும் துணையிருக்கிறது..
படுத்துக் கொள்ள மடி இருக்கிறது...
ஆனால் ஏதோ ஒரு இரகசியத்தை இருப்பு வைத்துக்கொண்டோம்..
ஒப்பனையும் ஓரளவுக்கு தேவைப்பட்டது....

அந்த பூங்கா நாற்காலியில் எங்களைத் தவிர்த்து ஒரு வண்டு இரண்டாவது உயிராய் வந்து அமர்ந்தது...
ஆம்
இரண்டாவது உயிர்தான் அது..
" இருவர் இருந்தாலும் தனிமை என்பது காதலில் மட்டும்தான் "
அதை கண்டும் காணாமல் எங்களின் உரையாடலைத் தொடர்ந்தோம்....

எதையோ பேசத்தொடங்கி எங்கோ கொண்டுபோய் முடித்த அந்த தணிக்கை செய்யா உரையாடல்களை அந்த வண்டு கேட்டிருக்குமோ..? என்ற அச்சம் அவளுக்குத்தான் முதலில் எழுந்தது...
என்னைக் கேட்டாள்..

நான் சொன்னேன்..அடியே மண்டு அந்த வண்டு உணர்ச்சியில்லாத வண்டு என்று...

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் என்று அவள் கேட்டாள்...

அதற்கு நான் " உணர்ச்சியுள்ள வண்டாக இருந்திருந்தால் நாம் பேசத்தொடங்கிய இரண்டாவது நிமிடமே அது தன் துணை தேடி ஓடியிருக்க வேண்டும் என்றேன்...

நான் சொன்னதை புன்னகைத்தபடியே புரிந்து கொண்டாள்...
தனக்குள்ளேயே உணர்ந்து கொண்டாள்...
வாய்ப்பேச்சுகளை நிறுத்திக் கொண்டாள்..
இமைகளை மட்டும் திறந்து கொண்டாள்..
பூங்கா நாற்காலியும் புகழ்ந்து கொண்டது...
ஆனால் எங்களின் தணிக்கை செய்யா உரையாடல்களை எப்படி நீட்டி குறுக்கிப் பார்த்தாலும் அந்த உரையாடல்களின் கருப்பொருள் " என் மரணம் அவளின் பூவோடும் பொட்டோடும் தொடர்புடையதாக இருக்க வேண்டும்" என்பது மட்டுமே....

மா.கா. சதீஷ்...

எழுதியவர் : மா.கா.சதீஷ் (14-Dec-17, 10:05 pm)
பார்வை : 120

மேலே