கனவு வியாபாரிகள்
கனவு வியாபாரிகள்
================================ருத்ரா
வாழ்ந்து காட்டு
வாழ்ந்து பார்
வாழ்வதற்கு தான்
பிறந்திருக்கிறாய்
வாழ்க்கை வாழ்வதற்கே
இப்படி..
சொற்பொழிவாளர்களின்
தொல்லை தாங்க முடிவதில்லை.
நமக்கு ஏற்படும்
ஒரு கொசுக்கடியைக்கூட
பிறரால்
உணர்ந்து கொள்ள முடியாது.
ஆறுதல்
ஊக்குவித்தல்
பாசிட்டிவ் திங்கிங்கை
விதைத்தல்
என்ற பெயரில்
நடக்கும் இந்த
கும்பாபிஷேகங்களால்
ஒரு பயனும் இல்லை.
எதிரே பஸ் வரும்போது
பஸ் மோதி கூழாகிப்போவாய்
என்று எச்சரிப்பது கூட
நெகட்டிவ் திங்கிங்
என்று நினைப்பவர்கள் கூட
அந்த கூட்டத்தில் இருக்கலாம்.
நீ தான் பிறந்திருக்கிறாய்
இது உன் வாழ்க்கை.
உன் மனசைத் திறந்து
நீ பார்த்தால் போதும்.
உனக்கு நீயே குரு.
உனக்கு நீயே சீடன்.
மற்றவர்களின் சன்னல்கள்
உனக்கு
சரியான தோற்றங்களை
காண்பிக்காது.
சிந்திப்பதில்
பாசிட்டிவ் நெகட்டிவ்
என்றெல்லாம்
பாத்தி கட்டுவதால் மட்டும்
உன் அறிவு நாற்று வளர்வதில்லை.
தீண்டாமை
மத வெறுப்பு
ஆணவக்கொலை
என்று
சமுதாய நொறுங்கல்களை
புறம் தள்ளிவிடும்
அபாயங்களும்
அந்த சொற்பொழிவுகளால்
நேர்ந்து விடலாம்.
எழுச்சியும்
விழுச்சியும்
ஏற்படுத்தும் பேச்சுக்கள்
கண்டிப்பாகத்தேவை.
அதை விட்டு
"ஒரு ரூபாய்க்காசு கூட இல்லாத
பிச்சைக்காரன்
பில்லியனர் ஆவது எப்படி?"
என்று
மூவர்ண அட்டைப்படத்துடன்
நூல்கள் அச்சிட்டு
நூல்விடும் வேலையெல்லாம்
அழகிய வண்ண கிளாஸ்களில்
போதைப்பானங்களை
ஊற்றித்தருவது போல் தான்.
கருத்துக்கள் வியாபாரம் ஆகும்போது
இந்த
கனவு வியாபாரிகளின் மீதும்
ஒரு கவனம் வேண்டும்.
==================================