மொழிகளற்ற பக்கங்கள்

.....மொழிகளற்ற பக்கங்கள்.......
பல நாட்களாய் வெற்றிடங்களாய்
கிடந்த என் பக்கங்களை புரட்டிட ஆரம்பித்தேன்,
மொழிகளற்ற காகிதங்கள் எல்லாம்
விழித்துளிகளால் நிரம்பிக் கிடந்தன...
அதில் ஓர் துளியினை எடுத்து
உற்று நோக்கினேன்
சொல்ல முடியாத பல கதைகள் அங்கே
மௌனமாய் விழிகளின் வியர்வைத்
துளிகளை சிந்திக் கொண்டிருந்தன...
வருடத்தில் கடந்த பல நிகழ்வுகள்
உள்ளத்தை உடைத்த சில நினைவுகள்
உறங்காமல் கழித்த தினப் பொழுதுகள்
இருதயத்தைச் தொட்டுச் சென்ற
காலத்தின் வண்ணங்கள் என்று
அதில் சிதறிக் கிடந்த ஒவ்வொரு
துளிகளுக்குள்ளும் அகராதி காணாத
பல வார்த்தைகள் ஒளிந்து கொண்டிருப்பதை
என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது....
புரட்டப்பட்ட பக்கங்களோடு இணைந்து
மனமும் கடந்த காலத்தின் தடயங்களை
ஓர் முறை திரும்பிப் பார்த்தது...
அங்கே நிகழ்வுகள் நினைவுகளாய் மலர
மீண்டும் என் அகப்பக்கங்களை
கடவுச் சொல் கொண்டு மறைத்துக்
கொண்டேன்,
இவை எனக்கு மட்டுமே உரிமையான
நினைவுப் பத்திரங்கள் என்பதால்....!