சமூகம் உறக்கம் களைய இளைஞா விழித்துக்கொள்

இந்த மண்ணில்தான் பிறந்தார்கள்..
மன ஊனமுற்ற மனிதா.. நினைவில் நிறுத்திக்கொள்..
உன் பிழையைத் திருத்திக்கொள்...
வீரிய நெருப்பாய்
விழித்தெழும் சூரியனாய் வற்றாத நீரோட்டமாய் பல மாற்றங்கொண்டு உன்னில் குடிகொண்ட அறியாமையும் அடிமைத்தனமும் சட்டென விட்டோட தன்னலமற்று பொதுநலம் பிறக்க மனிதயினம் மாண்புற வேண்டுமடா அதில் இத்தனை வேற்றுமைகள் வேண்டுமாடா? என எத்திசைக்கும் இடித்துரைத்த எழுஞாயிறுகள் யாவரும் இம்மண்ணில்தான் பிறந்தார்கள்....
கணினியுகத்தில் வாழ்கின்ற மனிதனே!.. நீதான் மறந்துபோனாய்..
அவர் பாதைதனை துறந்துபோனாய்....
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என வையகமே வியந்துரைக்க வாய்மொழிசொன்ன முப்பாட்டன் வள்ளுவனும் இங்கேதான் பிறந்தான்...
"யாதும் ஊரே யாவருங்கேளிர்" என இம்மண் உயிர்களை தன் குருதியாய்ப் பார்த்த பல சங்கத்தமிழ்ச் சான்றோனும் இம்மண்ணில்தான் பிறந்தான்..
தன்னை மனநோயாளியென மற்றோர் கேலிசெய்த போதிலும் "சாதி இல்லையடி பாப்பா" என சமத்துவவேர் பற்றிப்படர இளம் வயதிலேயே நெஞ்சைநிமிர்த்தி இன்னுயிர் நீத்த மகாகவியும் இங்கேதான் பிறந்தான்..
தீண்டாமைத்தீ தன்னைச் சுட்டெரித்தபோதும் "நான் யாருக்கும் அடிமையில்லை' எனக்கு யாரும் அடிமையில்லை" என உன்னில் குடிகொண்டிருக்கிற ஆணவத்தை அழித்தொழிக்க தடையை எடையாக்கி சட்டமியற்றிய புரட்சித்தீ அண்ணலும் இங்கேதான் பிறந்தார்...
தள்ளாடும் வயதிலும் தடியூன்றி பகுத்தறிவு சொன்ன தந்தை பெரியாரும் இங்கேதான் பிறந்தார்..
நல்லாட்சிக்கு இலக்கணமாய் காமராசரும் இங்கேதான் பிறந்தார்..
வறுமை வாட்டி வதைத்தபோதும் "மாறாது என் பாதை" என ஊழல்கறைபடியாத உயர்நேர்மைக்குக் களஞ்சியமாய் கக்கனும் இங்கேதான் பிறந்தார்..
"என் பெயரில் ஒற்றை ரூபாயானாலும் ஊழல் நிரூபிக்கப்படுமேயானால் என்னைத் தூக்கிலிடுங்கள்" என சவால் விடுத்து நெஞ்சை நிமிர்த்தி லஞ்சம் ஒழிக்கும் சமூகஆகாயம் சகாயமும் இங்கேதான் பிறந்தார்....
நீயும் இங்கேதான் பிறந்தாய்... ஆனால் பணத்துக்கு அடிமையானாய்.. பதவிக்கு தன்மானமிழந்தாய்.. அள்ளிக்கொடுப்பாராயின் மண்டியிட்டு நக்குகின்ற இழிபிறப்பானாய்.. வந்தப் பாதையை மறந்துபோய் ஓட்டுக்கு உறவாடும் ஈனப்பிறவியானாய்..
நன்றிக்கு வித்தாகும் நாய்க்கு கூட நீ நிகரில்லை..
உன் உடல் என்னவோ வெள்ளாடை உடுத்தியிருக்கிறது.. ஆனால் அதில்தான் அதிகக் கறை படிந்திருக்கிறது...
மனம் வெட்கி காறி உமிழ்கிறேன் சிறு தகுதியுமில்லா நீ என்னை ஆள்வதை எண்ணி.....

சமூகம் உறக்கம் களைய
இளைஞா விழித்துக்கொள்...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (19-Dec-17, 10:42 pm)
பார்வை : 83

மேலே