அம்மா வீட்டு சீதனம்

அம்மா வீட்டு சீதனம்...
அப்போதெல்லாம்
எல்லார் வீட்டிலும்
ஒரு டிரங்குப் பெட்டி இருக்கும்!
இப்போதைய அலமாரி போலத்தான்...
என்றாலும்
ஒவ்வொரு அம்மாவிற்கும்
அது ஒரு ரகசிய மகிழ்வின் உச்சம்!
நாலு பக்கமும்
நாலு செங்கல் வைத்து
அதற்குமேல் அழகாகக் கொலு வீற்றிருக்கும்

எங்கள் வீட்டு டிரங்குப் பெட்டி...
அதிலொரு பூட்டு
அதன் சாவியோ
எப்போதும் அம்மாவின் இடுப்பில்...
அதனைத் திறந்துப் பார்ப்பதற்கான
வாய்ப்பு
என்றைக்கும் குழந்தைகளுக்கு
கிடைத்ததேயில்லை!
அம்மா திறக்கும்போது
எட்டி எட்டிப் பார்ப்பதுடன்
ஆசையை
மூட்டைக் கட்டி விடவேண்டும்

அம்மா படிச்சப்போ
வாங்கியப் பேனா...
தாத்தா எழுதியக் கடைசிக் கடிதம்...
பாட்டியோடக் கொண்டையூசி...
பழைய நாலணக்காசுகள்...
கூடவே
வாசனைக்காகவும்
கரப்பானை விரட்டவும்
அந்துருண்டைகள்...
சீதனமாய் வந்தப் புடவைகள்
கரித்துணியாகிவிட்டன...
சேட்டுக் கடைக்குப்
போன நகைகள்
திரும்பும் எண்ணத்தை
மறந்துவிட்டன!

டிங்குப் பெட்டி மட்டும்
எப்போதும் அம்மாவுடனேயே
பாட்டியின் உறவாக...
அம்மாவின் கல்யாணப்புடவை
அப்பாவின் பட்டு வேட்டியுடன்
அவ்வப்போது வாங்கும்
எங்கள் புது உடைகளும்...
அதில் வாசம் கொள்ளும்!
அதிலிருந்து எடுத்துக்
கொடுக்கும்போது
பாட்டியே தருவதுபோல

பாச்ச உருண்டையின்
வாசனை மறந்து
பாட்டியின்
வாசனையுடன்
மனதிற்குள் நிறைவாக...
அதனைத் திறக்கும்போது
அம்மாவின்
முகத்திலே தான்
எத்தனைப் பெருமிதம்?
அவள் அம்மா வீட்டுச்
சீதனமாக...
நிலையாக இருப்பது
அது மட்டும் தானே?

அம்மாவின் நேசத்தை
சுமந்திருந்த
டிரங்குப் பெட்டி
மறைந்து
போய்விட்டதில்
அம்மாவின் வாசமும்
தொலைந்து
போய்விட்டது!

எழுதியவர் : kalavisu (20-Dec-17, 11:22 am)
சேர்த்தது : kalavisu
பார்வை : 367

மேலே