கண்ட நாள் முதலாய்-பகுதி-35

....கண்ட நாள் முதலாய்...

பகுதி : 35

அவன் அதுவரை நேரமும் எதிர்பார்த்திருந்த இராப்பொழுது வந்தும் துளசி மட்டும் அறைக்குள் வராமல் அவனைச் சோதித்துக் கொண்டிருந்தாள்...இரவு உணவினை உண்ணும் போது கூட அவள் அங்கே இருக்கவில்லை...

மதியமே நன்றாகத் தூங்கி எழுந்திருந்ததால் அவனுக்கு உறக்கமும் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடவில்லை...துளசியுடனாவது வம்பு வளர்க்கலாமென்றால்,அவளும் நேரம் ஒன்பதைத் தொட்டும் வந்திருக்கவில்லை...

அவள் வரும் வரையிலும் மீதமுள்ள நேரத்தை எப்படிக் கடத்தலாமென்று யோசித்துக் கொண்டிருந்தவனின் கண்களில் மேசையின் ஒரு பக்கமாய் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தட்டுப்பட்டது..அவற்றில் எதையாவது வாசிக்கலாமென்று அருகே சென்றவன்,ஒவ்வொரு புத்தகங்களாய் பார்வையிடத் தொடங்கினான்...

ஒவ்வொரு புத்தகங்களாய் ஆராய்ந்து கொண்டு வந்தவன்,இடையில் தடைப்பட்ட டயரினை எடுத்து முன் பக்கத்தினைப் புரட்டினான்...அதில் அழகிய கையெழுத்தில் மிளிர்ந்த "துளசி" எனும் பெயரினைப் பார்த்தவனின் முகமும் சேர்ந்தே ஒளிர்ந்தது...

அதை வாசிக்கவே மனம் விரும்பினாலும்,அவளது அனுமதியின்றி வாசிப்பது தவறென்று மூளை இன்னொரு பக்கமாய் அறிவுறுத்திக் கொண்டது...ஆனாலும் அவளைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்குள் அதிகமாக அதை வாசிப்பதென்றே முடிவு செய்து கொண்டான்...

மனதிற்குள் பூட்டிக் கொள்ளும் இரகசியங்களைக் கூட தினக்குறிப்பின் ஒவ்வொரு பக்கங்களும் அறிந்து வைத்திருக்கும்...அவளின் டயரியோடு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்....ஆனால் அதை வாசிக்கும் யோகம்தான் அவனுக்கு அப்போது அமையவில்லை...அவன் அதன் பக்கங்களை புரட்டத் தயாராகவும் துளசி அறைக்குள் நுழையவுமே சரியாக இருந்தது...

நல்லவேளையாக அவள் வேறேதோ சிந்தனையில் மூழ்கியபடி வந்ததால் அவன் கையிலிருந்த டயரியினை அவள் கண்டிருக்கவில்லை....அவள் கதவைச் சாத்துவதற்காய் திரும்பிய அந்த நேரத்தில் அவனும் மெத்தையின் கீழே அதை மறைத்து வைத்துவிட்டான்...அவள் திரும்பும் போது எதுவுமே நடக்காதது போல் போனைப் பார்ப்பது போல் பாவனை காட்டியவன்,இவ்வளவு நேரமும் எதற்காக காத்துக் கொண்டிருந்தானோ...அதை இனிதே ஆரம்பித்து வைத்தான்...

"என்ன துளசி மேடம்,இப்போதான் உங்களுக்கு இந்த அறைக்கு வாறதுக்கான வழி தெரிஞ்சிச்சா...??.."என்றபடியாக புருவத்தை உயர்த்தியவன்,அவளின் சந்தேகமான பார்வையில் இன்னும் குழப்பமாகினான்...

"என்ன பார்வையெல்லாம் பலமாயிருக்கு...??.."

ஆனால் அவனது கேள்விகளுக்கெல்லாம் அவள் பதில் சொன்னால்தானே...அவள் பதில்களிற்குப் பதிலாய் கேள்விகளையே விடைகளாக்கிக் கொண்டாள்...

"ஆமா...நேத்து நைட் சோபாவில தூங்கின நான்..எப்படி கட்டிலுக்கு வந்தேன்...??.."

"அடியாத்தி...மறுபடியும் முதலிருந்தேவா.....?டேய் அரவிந்தா நீதான் தூக்கிட்டுப் போனன்னு மட்டும் சொன்ன இன்னைக்கு நீ சட்னியாக வேண்டியதுதான்....என்ன சொல்லி சமாளிக்கலாம்....?.."என்று அவன் மனதில் எண்ணமிடும் போதே அவளிடத்திலிருந்து அடுத்த கேள்வி பறந்தது...

"என்ன சேர்....கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சும்மா பட்டாசு மாதிரி வெடிச்சீங்க...இப்போ என்னடான்னா சத்தத்தையே காணோம்...??.."

"அது....அது வந்து...."என்று தட்டுத் தடுமாறியவன்,ஏதோ வாயில் வந்ததைச் சொல்லி சமாளிக்க முயன்றான்..

"இல்லையே துளசி,நான் வரும் போது நீ கட்டிலில தானே தூங்கிட்டு இருந்த..."

"ஓஹோ..."என்றவளின் குரலிலேயே தெரிந்தது அவள் அதை நம்பவில்லையென்பது...

"ஏன் அரவிந்தன்,ஒரு வேளை இப்படி நடந்திருக்குமோ..??.."

எப்படி நடந்திருக்குமோ..??என்று அவன் கேட்கவில்லை... ஏனென்றால் அவளே ஏதோ வில்லங்கமாய்தான் சொல்லி வைக்கப்போகிறாள் என்பது அவள் பார்த்த பார்வையிலேயே நன்றாக விளங்கியது அவனுக்கு...

"இந்த இராத்திரி நேரத்தில பேய்,பிசாசு எல்லாம் அலையும்னு சொல்வாங்காளே...அப்படி வெளியில போயிருந்த பிசாசு ஏதும்,நடு இரவில நம்ம அறைக்குள்ள வந்து என்னை கட்டிலுக்கு தூக்கிட்டு போயிருக்குமோ...??"என்று அவனை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தாள் துளசி...

"அடிப்பாவி...கதையோட கதையா என்ன பிசாசுன்னா சொல்லுற...இரு இரு எனக்கும் ஒரு நேரம் வரும்தானே...அப்போ உன்னை கவனிச்சுக்கிறேன்...."என்று மனதிற்குள் அவளை நன்றாகத் திட்டித் தீர்த்தவன்,வெளியில் அப்போதைக்கு தப்பித்துக் கொண்டால் போதுமென்று ஆமாம் போட்டுக் கொண்டான்...

"எனக்கும் அப்படித்தான் தோனுது துளசி....ஆனால் துளசி நேத்து நடு இராத்திரியில நடந்ததை இன்னைக்கு நடு இராத்திரில வச்சுத்தானா ஆராய்ச்சி பண்ணனும்....எனக்கு தூக்கம் கண்ணைச் சுழட்டுது...இனியாச்சும் தூங்கலாமா...??..."என்று அவன் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும் அவள் சிரித்துவிட்டாள்...

"அப்பாடி இப்போயாச்சும் சிரிச்சாளே.."என்று அப்போதுதான் அவனும் சந்தோசப்பட்டுக் கொண்டான்..

"ஓகே துளசி குட் நைட்..."என்றவன் அவள் உறங்குவதற்காய் இடம் விட்டு தள்ளிப்படுத்துக் கொண்டான்...ஆனால் அப்போதுதான் துளசிக்கும் ஒரு விடயம் உறைத்தது...

அங்கே அவர்களது அறையிலுள்ள கட்டில் மூன்று பேர் உறங்கும் அளவிற்குப் பெரிதானது...ஆனால் இங்கே..,இருவர் அதில் உறங்கலாமென்றாலும் விலகிப் படுப்பது என்பது சிரமமே...அதனால் கீழேயே படுத்துக் கொள்வது மேல் என்று முடிவெடுத்தவள்,கட்டிலின் ஒரு புறமாய் படுக்கையை விரித்தாள்...

அவளது அரவமே இல்லாமலிருக்கவும் திரும்பிப் பார்த்த அரவிந்தன்,அவள் கீழே உறங்குவதற்காய் தயாராகவும்..முதலில் என்னவென்று புரியாமல் குழம்பியவன்...அப்போதுதான் அவனும் கட்டிலை ஒழுங்காக கவனித்துக் கொண்டான்...அவள் கீழே உறங்குவதற்கான காரணம் புரிபட,

"நான் கூட இன்னைக்கு கீழே தூங்கினா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்...ரொம்ப நாள் ஆச்சு தரையில படுத்து...அந்த சுகமே தனி...நான் இன்னைக்கு கிழே படுத்துக்கிறேன் துளசி....நீ கட்டில்ல படுத்துக்கோ..."

அவன் திடீரென்று எழும்பி ஏதோ சொல்லவும்...முதலில் அவளுக்கும் என்னவென்று பிடிபடவில்லைதான்...அதன் பின் அவன் அப்படிச் சொன்னதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டவளுக்கு,மனதின் ஓரமாய் சொல்லாமலே பூப்பூத்தது...

அவள் சரியென்று சொன்னதும் அவன் கீழேயும் அவன் மேலேயுமாகப் படுத்துக் கொண்டார்கள்...

அவன் படுத்ததுமே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டான்...ஆனால் துளசிக்குத்தான் உறக்கம் அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை...கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டத்தில் அவன் மேலேயே விழுந்து விட்டாள்...

பூ போலே அவன் மேலே விழுந்து கிடந்தவளை அப்படியே மென்மையாக கைகளில் ஏந்திக் கொண்டவன்,கட்டிலில் படுக்க வைத்து காதருகே மெல்லப் பாடினான்..

"...கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ..."

ஏற்கனவே அவன் மேல் விழுந்ததில் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள்,அவளின் காதோரமாய் அவன் ரகசியமாய் பாடியதில் அவள் தன் வசத்தினேயே கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் தொடங்கினாள்...இதில் அவன் குரலில் இருந்த மயக்கம் வேறு அவளுள் ஏதேதோ மாற்றங்களை எல்லாம் தோற்றுவித்துக் கொண்டிருந்தது...

அவளின் தவிப்பையும் பதற்றத்தையும் உணர்ந்து கொண்டவன்,நடுங்கிக் கொண்டிருந்த அவளின் விரல்களைப் பற்றியவாறே அவளருகேயே படுத்துக் கொண்டான்...அவளுக்கு மிக நெருக்கமாய் தெரிந்த அவன் முகத்தின் வசீகரித்தில் அவள் மனம் மொத்தமாய்
அவனிடத்தில் சரணடைந்து கொண்டது...

அவனது கரத்தினை அவனை விடவும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டவள்,அவனது அருகாமை தந்த இனிமையில் அப்படியே உறங்கிப் போனாள்...அப்போதுதான் அவளது உள் மனதிற்கும் ஓர் விடயம் தெளிவாகப் புரிந்தது...அவன் அவள் மனதை முழுதாகவே வென்றுவிட்டான் என்பது...

அன்றைய பொழுதைப் போலவே மறுநாளும் அவர்கள் இருவருக்கும் அழகாகவே கழிந்தது...

அரவிந்தனின் இரகசியமான பார்வைகள் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்க,அதற்கு பதில் துளசியின் உதட்டோரப் புன்னகைகள் அவனை வட்டமடித்துக் கொண்டிருந்தன..

அங்கு கழித்த அந்த இரு நாட்களுமே அவர்களிருவருக்குமே மறக்க முடியாத நினைவுகளாய் உள்ளங்களில் பதிந்து கொள்ள புதிதானதொரு வாழ்க்கையை புதிய வீட்டினில் ஆரம்பிப்பதற்காய் தயாராகிக் கொண்டார்கள்..

மொத்தக் குடும்பமும் அவர்களுக்கு ஆசிகளையும் வாழ்த்துக்களையும் மனமார வழங்கி மனம் நிறைந்த மகிழ்வோடு விடை கொடுத்தது...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (23-Dec-17, 9:10 pm)
பார்வை : 609

மேலே