படியில நிக்காதிங்க மக்கா

என்றைக்கும் போல கிராமத்து தங்க ரதம்(பேருந்து) பள்ளி குழந்தைகளையும், இளைஞர்களையும், பெரியோர்களையும் ஏற்றி கொண்டு வந்து ஐந்தாம் ஊரை(ஒரு மலைக்கிராமம்) அடைந்தது.

அவ்வூர் மக்கள் சலிப்புடன் பேருந்தை பார்த்து விட்டு, எப்போதும் போல் வருத்தத்துடன் ஏறினர்.

காரணம், அவ்வூரோடு சேர்த்து ஐந்து ஊருக்கும்(பக்கத்து கிராமங்கள்) ஒரு பேருந்துதான் அந்த நேரத்தில்(காலை 8 மணி முதல் 10 மணி வரை). பக்கத்தில் உள்ள நகரத்திற்கு படிக்கப் போகும் பள்ளி மாணவர்கள், கல்லுரிக்குச் செல்லும் இளைஞர்கள், வேலைக்கு போகும் பெரியவர்கள் வேறு வழியின்றி அந்த பேருந்தில் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தால், பேருந்து அவ்வளவு கூட்ட நெரிசலாக இருக்கும்.

பாவம் அவ்வூர் பெரியவர்கள் என்ன செய்வார்கள், எத்தனையோ முறை தங்கள் இன்னல்களை எடுத்து கூறி, இன்னொரு பேருந்து கேட்டு மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை அரசாங்கம்.

ஆனால், இளைஞர்களோ எதையும் பொருட்படுத்தாமல், கேலி, கிண்டல், பாடல் என ஜாலியாக படியில் பயணம் செய்து வந்தனர். அதிலும் செல்வா எனும் இளைஞனின் ஆட்டம், பாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும் (ஏழை குடும்பத்தை சேர்ந்த செல்வா, நகரத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான்). அந்த பேருந்தின் நடத்துனர் தான் பாவம், "படியில் நிக்காதிங்க", "படியில் நிக்காதிங்க"-னு சொல்லியே என் வாழ் நாள் கழிந்துவிடும் போல, என அலட்டி கொள்வார், அதே சமயம் தன் சொல் பேச்சை கேட்காது, உயிரோடு விளையாடும் இளைஞர்களை எண்ணி மிகுந்த வருத்தம் கொள்வார்.

ஒரு நாள் வழக்கம் போல பேருந்து வந்ததும், அனைவரும் ஆர்ப்பரித்து கொண்டு பேருந்தில் ஏறினர், பேருந்தும் புறப்பட்டது. இளைஞர்களும் வழக்கம் போல தங்கள் சேட்டையை தொடர்ந்தனர். செல்வா எப்போதும் போல அல்லாமல் சற்று அதிகமாவே சேட்டை செய்து கொண்டிருந்தான். பேருந்து கிராம புறங்களை கடந்து நகரத்திற்கு செல்லும் முதன்மை சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சாலை முதன்மை சாலை என்பதால் போக்குவரத்து நன்றாக இருக்கும்.

செல்வா எப்போதும் போல் அல்லாது பேருந்தின் படியில் நின்று கொண்டு சாகசங்கள் செய்து கொண்டிருந்தான். செல்வாவின் சாகசத்தை கண்டித்து கொண்டிருந்தார் பேருந்து நடத்துனர். ஆனால் செல்வாவோ எதையும் காதில் போட்டு கொள்ளாமல் அதையே செய்தான். ஒரு திருப்பு முனையில் பேருந்து வளையும் போது நிலை தடுமாறி செல்வா விழ பின்னால் வந்த சரக்கு லாரி செல்வாவின் வலது காலில் ஏறி நிலை தடுமாறி சென்றது.

பேருந்தில் உள்ள அனைவரும் "ஐயோ" என இட்ட சத்தம் கேட்டு, ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார் மிகுந்த பதட்டத்தோடு.

செல்வாவின் நண்பர்கள் உதவியால் செல்வா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான், தகவல் செல்வாவின் வீட்டுக்கு சொல்லி அனுப்பப்பட்டது, பெற்றோரும் வந்து சேர்ந்தனர் பேரதிரிச்சியோடு.

மருத்துவரின் பதிலுக்காக செல்வாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் வருத்தத்துடன் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மருத்துவர் அறையில் இருந்து வெளியே வந்தார். செல்வாவின் பெற்றோர் கண்ணீர் நிரம்பிய கண்களோடு மருத்துவரிடம் தன் மகனின் நலம் பற்றி கேட்டனர். மருத்துவர் உயிருக்கு ஒன்றும் இல்லை, ஆனால்..... என்று இழுத்த மருத்துவர், மனதில் தைரியம் வரவழைத்து கொண்டு, உங்கள் மகனின் வலது காலில் அதிக சேதம் ஏற்பட்டதால், வலது காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

அதைக் கேட்டதும், செல்வாவின் பெற்றோரின் மனம் ஒரு நொடி நின்று போனது. சரி, மகன் உயிரோடு இருக்கிறான் என்பதை எண்ணி மனதை தேர்த்தி கொண்டனர் வேறு வழின்றி.

நாட்கள் நகர்ந்தன, செல்வாவும் உடல் நலம் தேறி இருந்தான். தனக்கு ஏற்பட்டது போல இனி யாருக்கும் ஏற்பட கூடாது என எண்ணினான். பெரியோர்கள் பேருந்து கேட்டு கொடுத்த மனுக்கள் பற்றி சற்று சிந்தித்து பார்த்த செல்வா, இளைஞர்களிடம் பேருந்தின் தேவையை தெளிவாய் எடுத்துக் கூறி, MLA -வை நேரடியாக சந்தித்து, பேருந்து பிரச்சனை தீரும் வரை விடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டான்.

இறுதியாக MLA -வின் கட்டைளையாலும், செல்வாவின் விடா முயற்சியாலும் வெற்றிக்கிட்டியது.

இதுவரை செல்வாவை வசை சொல் பாடிய ஊர் பெரியோர்கள், முதல் முறையாக செல்வாவை பாராட்டு மழையில் நனைத்தனர். செல்வாவும் தான் செய்த நற்காரியத்தை எண்ணி மகிழ்ந்தான்.

இப்போதெல்லாம் செல்வா பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது, பேருந்து நடத்துனர் கூறிய, தான் கேட்க மறுத்து அந்த வார்த்தைகளைதான் அறிவுரையாக சொல்கிறான் அனைவருக்கும். இவ்வாறு, "படியில நிக்காதிங்க மக்கா".

----------------------------------------------------------

எழுதியவர் : ஆனந்த கண்ணன் (27-Dec-17, 3:34 pm)
சேர்த்தது : ஆனந்த கண்ணன்
பார்வை : 245

மேலே