சிறகுடை கயலே - வினோதன்
என்னான்மக் குடுவையில்
கோடிகடல் உயிர்கொட்டி
சிறகுடை கயலென
நீந்திக் களிக்கிறாய்
அலைகளை மென்றபடி !
வாழ்க்கை வானவில்லில்
உச்சிக் கிளைக்கண்டு
முகட்டின் மூக்கினை - உயரே
பறக்க விடுகிறாய்
கயிறறு பட்டமாய் !
கனவால மரத்தின்
சிறகிடை பொந்தினுள்
சன்னல்களால் நெய்த
கூடொன்றை பிறப்பித்து
அடையப் பணிக்கிறாய் !
உள்ளங்கை ரேகையெங்கும்
ஜீவ நதியென விரவி
சில்லிட வைக்கிறாய்
ஆயுள் முழுதிற்கும்
அசைபோட்டுச் சிலாகிக்க
நினைவுகள் தந்துவிட்டு !
உன்னுடனான
ஒவ்வோர் நொடியும்
தத்தம் முகத்திலோர்
தந்தமும் துதிக்கையும்
வரைந்து கொண்டு
நீரிரைத்து மகிழ்கின்றன !
துளசிமாடமென - உனை
விழிமத்தியில் நட்டுவிட்டு
வெல்லக் கனவுகளை
தொட்டு தரிசிக்க
கழுகுவாழ் அலகென
தூக்கிப் பறக்க தோன்றுதடி
மரகத மாமயிலே !
செழித்த நாற்றொன்றின்
உமிக்குட்டை வாழிக்கு
தமிழினிப்பை தரத்துடிக்கும்
கழனியின் மனதென
மழையொத்த உன்னை
அடைகாக்க வேண்டுமடி,
ஏவாளின் கருவறையை
என்னுடல் பொருத்தி !
- வினோதன்