குடும்ப குத்துவிளக்குகள்

குடும்பம் விளங்கும் குலமும் விளங்கும்
கொடுமை கொடுமை கொடுமை -அடடா!
கரம்குவிக்க வேண்டாமோ பெண்ணென்று சொன்னால்
சிரம்தாழ்த்து கின்றாளே சீ!

ஆண்குடி யாலே அடியோடு பாழாகி
ஏன்குடி என்றே இரங்குகையில் -தேன்குடி
கொண்ட இதழார் மதுவிலே தள்ளாடக்
கண்டு பதைக்குதே நெஞ்சு!

ஆண்மைக்குப் பெண்மை நிகரென்று காட்டுகின்ற
பாண்மை இதுவோ புகலுவீர்! -நாண்மை
இழந்திட்ட பின்னவளைப் பெண்ணென்று சொன்னால்
அளந்தறுக்க வேண்டாமோ நாவு!

மதுவில் மயங்கிக் கிடப்பவர்க் காங்கே
மதியுமே வேலைசெய் யாதே!- பொதுவில்
சரிந்தாலும் ஆடை சதைப்பசி கொண்டோர்
உரிந்தாலும் இல்லை உணர்வு!

புதுமைப்பெண் பாடிய பாரதி எங்கே
மதுவில்பெண் தள்ளாடும் இந்தப் -புதுமைக்குக்
கும்மிய டித்துக்கை கொட்டிட வேண்டாமோ
இம்மா நிலமே சிரித்து!

மலரான பெண்மை மணம்வீச வில்லை
மலம்நாறு கின்றதே சிச்சீ- குலம்நாறும்
குற்றம் புரிபவளைக் கட்டான காளையரே
சற்றும் நெருங்கா திரும்!

நல்ல விளக்காகி நாளும் ஒளிதந்தே
இல்லம் விளங்கிடச் செய்பவள்பெண்! -கொள்ளியென
கூரைக்கு வாய்த்தவளோ பெண்டாட்டி? சீறுகின்ற
சாரைக்குப் பேரோ சதி?

அச்சம் மடம்நாணம் என்னும் அவையாவும்
மிச்சம் உளதோ மதிமுகத்தீர்? -எச்சில்
உமிழ்ந்தாலும் உம்மை உதைத்தாலும் வந்தே
எமையாளும் பாவங்க ளே!

குடித்தும் புகைத்தும் தொடைதெரிய ஆடை
உடுத்துமே நின்றால் பணத்திற்குப் -படுக்கும்
விலைமகளாம் வேசிக்கும் வேறுபா டென்ன
குலமக ளுக்குமே கூறு!

நாகரிகம் நாளும் வளர வளரத்தான்
போகிற தேஒழுக் கம்கெட்டு!- சாகரம்சூழ்
பூமியில் ஈது கலிகாலம் என்பதற்கு
ஆமிது சாட்சிய மே!

-காகுத்தன்

எழுதியவர் : காகுத்தன் (27-Dec-17, 11:25 pm)
சேர்த்தது : காகுத்தன்
பார்வை : 526

மேலே