தீராத விளையாட்டு பிள்ளை

#தீராத விளையாட்டு பிள்ளை
மாயக்கண்ணன் ஜாலங்களை
என்ன சொல்வது - முகுந்தனை
என்ன சொல்வது..!
மண்ணில் உதித்த நாள் முதலாய்
சேட்டைகள் பெரிது - கண்ணன்
சேட்டைகள் பெரிது..!
எதனை எடுத்து சொல்வதுவோ
சேட்டையும் அழகு - அவன்
சேட்டையும் அழகு..!
தொட்டிலிட்ட போதுமவன்
உறங்கவுமில்லை - மாலவன்
உறங்கவுமில்லை..!
உதைத்து தொட்டில் கிழிப்பானே
தொல்லையோ தொல்லை - நித்தம்
தொல்லையோ தொல்லை..!
ஆயர்பாடி வீடுகளில்
ஓடியாடுவான் - அஜயன்
ஓடியாடுவான்..!
அயர்ந்திருந்த நேரமதில்
வெண்ணை திருடுவான் - பானை
வெண்ணை திருடுவான்..!
கையும்களவு மாகமாட்டி
கெஞ்சி கொஞ்சுவான் - கள்ளன்
கெஞ்சி கொஞ்சுவான்..!
விரலசைவில் குழலூதி
கானம் பாடுவான் - வேணுகோபன்
கானம் பாடுவான்..!
குழலினிலே வசியம் வைத்து
கட்டியே இழுப்பான் - கோபியரை
கட்டியே இழுப்பான்..!
அன்ன நடை நடந்திடுவார்
பின்னலை இழுப்பான் - கண்ணன்
பின்னலை இழுப்பான்..!
ஆவென்று அவர் அலற
கைகொட்டி சிரிப்பான் - மாதவன்
கைகொட்டி சிரிப்பான்..!
கேணியிலே இறைத்த நீரை
பானையில் சுமப்பார் - கோபியர்
பானையில் சுமப்பார்..!
கல்லெடுத்து வீசி அந்த
பானை உடைப்பான் - கண்ணன்
பானை உடைப்பான்..!
நீரூற்று தலையில் சிதற
கண்டுமே ரசிப்பான் - மயூரன்
கண்டுமே ரசிப்பான் ..!
கோபியர்கள் விரட்டிடவே
ஓடியே மறைவான் - மாயவன்
ஓடியே மறைவான்..!
திண்ணக்கனி தருவானே
அன்பு மிகுந்திட - மதனன்
அன்பு மிகுந்திட..!
எட்டி தட்டி பறிப்பானே
சினமும் கொண்டிட - எவரும்
சினமும் கொண்டிட..!
கோபியரும் குளித்திருக்க
ஆடை திருடுவான் - அவர்
ஆடை திருடுவான்..!
கூப்பாடு போட்டிடவே
ஆனந்தம் கொள்வான் - அனந்தன்
ஆனந்தம் கொள்வான்..!
கண்ணனவன் ஆட்டங்களோ
எண்ணிக்கையில்லை - அதனை
எண்ணுதற்கோ கைவிரல்கள்
போதவுமில்லை..!
என்றுமவன் தீராத
விளை யாட்டுப்பிள்ளை
இதயமெல்லாம் வீற்றிருப்பான் - அவனை
தூற்றுவோர் இல்லை..!
#சொ. சாந்தி