அன்னை

அன்னைக்கு நிகரிங்கு யாரென்று சொல்ல
என்னை உருவாக்க அவள்பட்ட பாடு
உலகத்தில் யார்பட்டார் நீயின்று கூறு
தன்னைத் தந்தெமை யீன்றவர்க்கு நிகரேதுகூறு


குடும்பத்தின் குலக்கொடி குவலயம் போற்றும்
குடும்பத்;தின் அடித்தளம் அவளேயென் அன்னை
குடும்பக் கூட்டுக்கள் கட்டிவைத் தெமைக்காப்பவள்
குடுபப் பிணைப்பின் குறுவடமாய் ஆனவள்


அன்னையின் அணைப்பின் இன்பமே எம்வாழ்வு
அன்னைபோல் பரிந்தளிக்க உலகில் யாருள்ளார்
என்னைப்போல் எத்தனை எத்தனை பிறவிகளை
தன்னைத் தியாகச் சுடராக்கி தருபவள்தாய்!;


தியாகத்தின் ஒளிச்சுடரை நான்கண்டேன் தன்
தியாகத்தால் தந்துவிட்ட தாயிடத்தே நான்
தியாகியாய் வளரவேண்டும் என நெறிதந்தாள்
தியாகமே திருவாக இதயத்தில் இருக்கின்றாள்


உயரத்தில் அம்புலியைக் காட்டி எனை
உயரத்தில் செல்ல வழிகாட்டி நின்றாள்
உயரத்தில் வாழ்வதனைச் செப்பனிடு என
உயரத்நில் எனத்தன் உதிரத்தை ஊட்டினாள்


என்னைக் காண்கையிலே உள்ளம் குளிர்ந்திடுவாள்
அன்னை எனவழைக்க ஆனந்தம் கொண்டிருப்பாள்
முன்னை கருவில் நானிருக்க தன்னை ஒறுத்திருந்தாள்
முன்னே என்னுடல் நலத்தில் முனைப்புக்; காட்டியதாய்!


அன்புக் கரம்நீட்டி அன்னநடை பயிலவைத்தாள்
அன்போடு எனையணைத்து உச்சி மோர்ந்திடுவாள்
இன்போடு நானிருக்க இயைந்தென்னை அணைத்து
இன்ப வாழ்வு காட்டிய என்னிதயக் கோவிலவள்.


பாலூட்டித் பட்சணங்கள் பலதேடி பரிந்தூட்டி
காலாட்டி தூங்கவைத்து கண்ணயரப் பார்த்திருந்து
தாலாட்டி தட்டித்தடுமாறி நடக்கையிலே தரித்திருந்து
ஆலாட்டி அமுதூட்டி வளர்த்தெடுத்த தெய்வமேதாய்


ஈரைந்து திங்களாய் இன்சுவை உணவொறுத்து
ஈர்ந்து பத்தியங்கள் பேணிக் காத்திருந்து
ஈரேழு மாதங்கள் கனகமுலை தந்துபாலூட்டி
ஈர்ப்புறவே அமுதூட்டி அழகேற்றி வைத்ததாய்


தூங்கு கின்றாய் என்றிருக்கத் துயில்கொண்டாய்
தாங்கும் மனதின்றி தவித்தழுதேன் உன்பிரிவால்
தாங்காத தவிப்பெல்லாம் என்செவியில்; தொடர்ந்தும்
தேங்கி ஒலிக்குதம்மா தேற்றந்தான் இல்லை எனக்கு!


கருணையின் கவிதை கற்பனைக்கெட்டா கருத்தோவியம்
அருமையின் அன்புரு அடிமனத்தில் பதிந்துவிட்ட பாசச்சுடர்
உரிமையின் குரல் உண்மையின் உயர்விடம் என்னன்னை
உரிமைக்காய் உண்மைக்காய் வாழ்ந்தவள் நீயன்றோ!


அன்பில் உறைந்து அரவணைப்பில் நெகிழ்ந்து
இன்பில் இயைந்து இங்கிதம் தந்து எனைவளர்த்து
துன்பில் துவண்டு துயரமே காட்டாது என்றென்றும்
துன்பில் தோயாது தூயவளே நீயெங்கே சொல்!

மனிதநேயம் என்னவென்று காட்டிவைத்தாள் என்னன்னை

மனிதரோடு மனிதனாகப் பழகு என்று சொல்லி வைத்தாள்
இனித்தமுடன் இன்முகமாய் பழகவே கற்றுத் தந்தாள்
இன்முகத்தை தாயிடத்தே கண்டேன் நான்.


பக்குவமும் பண்பும் பார்போற்ற வாழவென்று
பக்குவமாய் எடுத்துரைத்து பயனுறவே பலபடிகள்
சிக்கனமாய் சிறுகதைகள் சொல்லி யெனை
சிக்கனமாய் வளர்தவளே சிக்கனமாய்ச் சென்றைனையோ


மாலைப் பொழுதினிலே மணல்மேடு நீகுவித்து
மாலை கட்டியெமை மகிழ்வித்து ஈர்க்கெடுத்த
புழுதி யழைந்து புதினமாம் விளையாட்டால்
புழகாங்கிதம் கொள்ள வைத்திருந்தாள் என்னன்னை


காலை நீட்டிக் கைக்குள் ஈர்க்கெடுத்து
காலைப் பார்த்திருக்க புழுதிவிளையாட்டு
பாலைக் குடிக்க வைக்கும் தந்திரங்கள்
பாலை ஊட்டவல்ல உயரிய மந்திரங்கள்.


உலகைக் காட்டிவைத்து உன்னதம் கொள்ளவைத்து
உலக்கை கையேந்தி உள்ளே எள்ளிட்டு எண்ணை
உலக்கையால் என்நெஞ்சில் உரமேற்றி பலமாக
உலக்கையோல் உறுதிகொள் என்றவள் என்னன்னை


விலையேதும் பேசாமல் விருப்பமுறு இன்சுவையாய்
விலைபோகும் இன்கனிகள் விற்பனையில் வாங்;கி
நிலைபோக எமக்களித்து இன்புற்று இருப்பவளே
நிலைகுலைந் தாயென்றின்றும் எண்ணவைத்த தாய்!


அப்பம் அறுசுவையில் அடுப்பில் ஏற்றிவைத்து
அப்பம் அடுப்பினிலே அடுக்கிவைத்துப் பாலூற்றி
தெப்பம் திரள்வதுபோல் என்வயிறு புடைத்துவர
தெப்பமாய் உன்மடியைத் தந்தவளே என்தாய்!






தங்கர் சிவா

எழுதியவர் : (1-Jan-18, 9:20 am)
பார்வை : 60

மேலே