அலையும் மனம்
பருவ வாசலில்
புதுக் கோலமுடன்
பள பளக்கும்
பதுமை நான். . . .
பாலை வனத்தினில்
பாதி பயணத்தில்
பருகி இளைப்பாற
படைக்கப்பட்டச் சுனை நான். . . .
மோக வனத்தினில்
மேயும் தீயினுள்
மறைந்து... சிக்காமல்
மலரும் பனி நான். . . . .
நந்த வனத்தினில்
நட்ட செடிகளில்
நல் மனம் விரும்பும்
நாணும் மலர் நான். . . .
இரவுப் பொழுதினில்
இமைகள் நடுவினில்
இன்னிசை நரம்பை உன்
இதயம் அனுப்பும் வஞ்சி நான். . . .
வண்டுகள் உணராத
வாண்டுகள் நட்போடு
வண்ணம் அறியாத
வயது வந்தும் வராத அரும்பு நான். . . .
எகனை முகனைகளில்
ஏற்ற இறக்கங்களில்
என்னவென்று உணராத
ஏகலைவனின் நிழல் நான். . . .
இனிது இருக்கையில்
இல்லாதது தேடும்
இனம் புரியாப் புதிரோடு
இணக்கம் கொள்ளும் பவிசி நான். . . .
அலையும் மனங்களில்
அசைக்க முடியா
ஆணி வேரென உள்
அமர்ந்து ஜொலிக்கும் தேவதை நான். .
உனக்கெனப் பிறந்தும்
உன்னுள் இருந்தும்
உனையே அறியாத
உண்மை நான். . . .
காத்து இருக்கிறேன்
காலம் வரும் வரை. . .
கலங்கித் தவிக்கிறேன்
கண்ணா உன் நினைவலையில். . .
ஏங்கித் தவிக்கிறேன்
என் வரவை உன்னில் தேடி. . .
என்று வருவாயடா நீ
என் இதயம் நாடி. . . .
சத்தியமாகச் சொல்கிறேன்
சாதாரணமாக தெரிவிக்கிறேன்
சாதனைக்காக உன்னைச்
சோதிக்கும் எண்ணம் இல்லை.. .
சனங்களில் நானும்
ஒரு பிறவி. .
சுனங்கி வந்திடில் நீயும்
ஒரு துறவி. . . .