கண்ட நாள் முதலாய்-பகுதி-37

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 37

சமையலறையில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு ஓடோடிப் போனவன்,அங்கே விழுந்து கிடந்த வெள்ளிக் கிண்ணங்களையே சோகம் வடித்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டான்...

ஞாயிற்றுக் கிழமையென்றாலே இது அவர்களின் வீட்டில் நடக்கும் வழமையானதொரு சம்பவம்தான்...மேலே உயரமான தட்டில் இருக்கும் வெள்ளிச் சட்டியை அவளும் ஒரே எட்டில் எடுப்பதற்காய் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறாள்...அருகிலிருக்கும் வெள்ளிக் கிண்ணங்கள்தான் தினமும் விழுகிறதே தவிர..அவள் எடுக்க நினைக்கும் அவளது வெள்ளிச் சட்டி கைகளிற்கு எட்டுவதேயில்லை...

அவனது சிரிப்புச் சத்தத்தை கேட்டு திரும்பியவள்,இடுப்பில் ஒரு கையை வைத்து அவனை நன்றாகவே முறைத்தாள்...ஆனால் அவளது கோபத்தின் அளவுதான் அவனுக்கு நன்றாகவே தெரியுமே...

"ஹா...ஹா...என்ன மேடம்...இன்னைக்கும் உங்க உயரத்திற்கு ஒரு சவாலா...??..."

"என்னோட நிலைமையைப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா மிஸ்டர் அரவிந்தன்...??.."கோபத்தில் அவள் மூக்கு வெட வெடுத்துக் கொண்டிருந்தது...

"இதென்ன இன்னைக்கு நேத்தா நடக்குது...நான் இந்த இரண்டு மாசமா இதைத்தானே கண் குளிரப் பார்த்திட்டு இருக்கேன்...உனக்குத்தான் அது எட்டாதின்னு தெரியுதில்ல...ஒரு கதிரையை வைச்சு ஏறி எடுக்க வேண்டியதுதானே...??.."

"நீங்க வேணும்னா பாருங்க...ஒரு நாள் இல்லை ஒரு நாள் நான் அதை எடுக்காம விட மாட்டேன்..."

கீழே கிடந்த வெள்ளிக் கிண்ணங்கள் இரண்டையும் கையிலெத்தவன்,இதற்கு மேலும் நெளிய முடியாது என்ற அளவிற்கு நெளிந்து போய் கிடந்ததை அவளிடம் காட்டி,

"இதுக்கு மேலையும் இந்த கிண்ணங்களிரண்டும் அடி தாங்கும்னு நீ நினைக்கிற...??.."

அவன் கேட்ட விதத்தில் அவளுக்குள் புன்னகை அரும்பினாலும்..அதை கஸ்டப்பட்டு மறைத்துக் கொண்டு,வெளியில் கோபம் போலவே காட்டிக் கொண்டாள்...

"இங்க பாரு துளசி...??..."

"என்கிட்ட யாரும் பேச வேணாம்.."என்று மூக்கை உறிஞ்சியவாறே அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்...

அவளுக்கும் அவனுக்குமிடையே இருந்த இடைவெளியைக் குறைத்துக் கொண்டவன்,அவளின் காதோரமாய்..

"கடவுள் ஏன் உன்னை உயரமாய் படைக்கலைன்னு சொல்லு பார்ப்போம்...??.."

அவனது மீசை அவளது காதோரமாய் குறு குறுப்பூட்டியதில் பேச்சிழந்து நின்று கொண்டிருந்தவளுக்கு,வாயைத் திறந்தாலே வெறும் காத்துதான் வெளி வந்தது..ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டவள்,

"ஏனாம்...??.."என்றவாறே மீண்டும் முறுக்கிக் கொண்டாள்..

"ஏன்னா...ஏன்னா...நான் உன்னை இப்படித் தூக்குறதுக்குத்தான்..."என்று அவன் சொன்னது அவளது மூளையில் பதியும் முன்னே அவளை மேலே தூக்கி விட்டிருந்தான் அரவிந்தன்...

அவன் அப்படிச் செய்வானென்று கொஞ்சமும் எதிர்பார்க்காதவள்,அவனது செய்கையில் திகைத்துத்தான் போனாள்...அவளது வாய் வழியே வார்த்தைகள் தந்தியடிக்கத் தொடங்கின...

"என்ன..என்ன பண்ணுறீங்க அரவிந்தன்..முதல்ல என்னை இறக்கி விடுங்க..."அவளது குரல் மிகவும் கெஞ்சலாக ஒலித்தது...அவள் அவனிடத்திலிருந்து திமிறிக் கொண்டு இறங்க முயன்றும்..அவளது அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது..அவன் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை...அவனது பிடி இரும்புப்பிடியாக இருந்தது...

"எடுக்க நினைச்சதை எடுங்க மேடம்...அப்புறமா இறக்கி விடுறதைப் பத்தி யோசிக்கலாம்..."

இவன் இனி என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்று தோன்றி விடவே..தனக்கு இவ்வளவு நாளும் சவாலாக அமைந்த வெள்ளிச் சட்டியை கையில் எடுத்துக் கொண்டாள்...அதைக் கையில் பிடித்ததுமே ஏதோ பெரிய மலையையே பெயர்த்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்குள்...

அவளது அந்த மகிழ்ச்சிக்கு காரணமான அரவிந்தனுக்கு மனதிற்குள்ளேயே நன்றியும் சொல்லிக் கொண்டாள்...வெளியில் சொன்னால்தான் அவன் ரொம்பவும் பண்ணிக் கொள்வானே...

"எடுத்தாச்சு சேர்...இனியாச்சும் இறக்கி விடுங்க..."

"பொறுமை...பொறுமை...ஏன் இந்த அவசரம் துளசி...??.."

"ஏன்டா சொல்ல மாட்ட...இங்க அவஸ்த்தைப்படுறது நான் தானே..."என்று நன்றாகவே அவனை மனதிற்குள் திட்டிக் தீர்க்கவும் செய்தாள்...ஆனாலும் அந்த அவஸ்த்தை அவளுக்கும் பிடித்துத்தான் இருந்தது...

அவளது இடையின் பக்கமாய் தொட்டுக் கொண்டிருந்த அவனின் விரல்களின் ஸ்பரிசத்தில் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தவள்,இதற்கு மேலும் அவன் இறக்கி விடவில்லையென்றால் அவன் மேலேயேதான் சரிந்து விழுந்து உருள வேண்டுமென்று எண்ணிக் கொண்டாள்...ஒரு வேளை அதற்காகத்தான் காத்திருக்கிறானோ என்ற சந்தேகமும் வந்துவிட்டது அவளுக்குள்...அந்தளவிற்கு அவனது அடாவடித்தனம் அத்துமீறிக் கொண்டிருந்ததில் மிகவும் கடுப்பாகி விட்டாள் அவள்...

எழுந்த கடுப்பில் குரலைக் கொஞ்சமாய் உயர்த்தியவள்,

"இப்போ இறக்கி விடப் போறீங்களா இல்லையா...??.."

அதற்கு மேலும் அவளைச் சோதிக்காமல் மெது மெதுவாய் இறக்கி விட்டான் அவன்...கால் தரையில் பட்டதுமே கோபத்தோடு அவன் பக்கமாய் திரும்பிக் கொண்டவள்...அவன் முகத்தில் தெரிந்த குறும்பான சிரிப்பைக் கண்டதும்,

"உங்களை..."என்றவாறே அவன் மார்பில் கொத்துப் பரோட்டா போடத் தொடங்கி விட்டாள்,அவன் அவளிடமிருந்து தப்பித்து ஓடவும்..இவளும் விடாது அவனைத் துரத்திக் கொண்டே பின்னே சென்றாள்...

"ஹையோ துளசி...ஏற்கனவே உன்னைத் தூக்கினதில என் இடுப்பு உடைஞ்சு போய் கிடக்கு..இப்போ இதில ஓடிப் பிடிச்சு வேற விளையாடனுமா...??.."

அவ்வளவுதான் துளசி பத்ரகாளியாகவே உருமாறிவிட்டாள்...

"என்ன சொன்னீங்க...??நானா உங்களை வெத்திலை பாக்கு வைச்சு அழைச்சன்,என்னை வந்து தூக்குங்கன்னு...சும்மா நின்டவளை வலிய வந்து தூக்கி விட்டிட்டு...இப்போ பேச்சைப் பாரன்..."

"டேய் அரவிந்தா...சும்மா இருந்தவளை இப்படியாடா உசுப்பேத்தி விடுவ...??இன்னைக்கு உன்பாடு திண்டாட்டம்தான்..."என்று மனதிற்குள்ளேயே தன் நிலையை நினைத்து நொந்து கொண்டவன்,அவளது கையிற்கு அகப்படாமல் அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தான்...

"அரவிந்தன்...நீங்களா வந்துட்டீங்கன்னா ஓகே..நானா உங்களைப் பிடிச்சன் அவ்வளவுதான் சொல்லிட்டேன்..."என அவள் ஏதோ வில்லி ரேன்ஜிற்கு வில்லத்தனம் காட்ட,அதற்கும் அவளிடம் வம்பு செய்து...இன்னும் அவள் கோபத்தை எகிற வைத்தான்...

இப்படியே இருவருமாக ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததில்,மூச்சிரைக்க ஒருவர் மீது ஒருவர் அறியாமல் மோதிக் கொண்டனர்...மோதியதுமே அவனிடமிருந்து விலக எத்தனித்தவளை லாவகமாய் அவனது பிடிக்குள் கொண்டு வந்தான் அரவிந்தன்...

"இப்போ உனக்கு ஹப்பியா துளசி..??.."என்றவனை அவள் பார்த்த பார்வையே சொல்லியது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று...

"கூல் துளசி...கூல்...நீ தானே நீங்களாவே என்கிட்ட வந்திடுங்கன்னு சொன்னாய்.."என்று சொல்லி நிறுத்தியவன்,இன்னும் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவாறே..

"நீ சொன்ன மாதிரியே நான் வந்திட்டேன் துளசி...உன் பிடிக்குள்ள நான் வந்திட்டேன்...இப்போ என்னை நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாம்.."

"அடப்பாவி..என்னமோ நான் இவனை ரொமான்ஸ் பண்ண கூப்பிட்ட மாதிரி கதை விடுறானே..."என்று எண்ணிக் கொண்டவள்,அவனை விட்டு விலகவும் முடியாமல்..அவனை நெருங்கவும் முடியாமல் தவியாய் தவித்துப் போனாள்..

"துளசி..."தாபத்தோடு ஒலித்தது அவனது குரல்..

அவனது அழைப்பு அவளுக்குள்ளும் மயக்கத்தை ஏற்படுத்த மெல்ல அவனை விழியுயர்த்திப் பார்த்தாள் துளசி..அவனது பார்வை சொன்ன சேதியில் முதன் முறையாக ஆட்டம் காணத் துவங்கியது அவளது உள்ளம்..

"இது என்னடா இது துளசிக்கு வந்த சோதனை...இவன் என்ன இப்படிப் பார்த்துத் தொலைக்கிறான்..."என்று அவள் மனதிற்குள்ளேயே லேசாகப் பயந்து கொண்டவள்,அவன் அவளது இதழ்களை நோக்கி குனியவும்,கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்...அவளது உதடுகள் ஒன்றுடனொன்று தந்தியடிக்கத் தொடங்கியிருந்தன...

அவளருகே குனிந்து வந்தவன்,

"உன்னோட அனுமதி இல்லாம,உன்னோட விருப்பம் இல்லாம இங்க எதுவுமே நடக்காது துளசி..என்கிட்ட உனக்கு பயம் வேண்டாம்..."என்று சொல்லி முடித்தவன் அவளை விட்டு விலகி நின்று கொண்டான்...

அவன் சொல்லி முடித்ததும் விழிகளை மெதுவாகத் திறந்து கொண்டவளின் கண்களோரமாய் கண்ணீர் வழிந்தது...அதைத் துடைக்க வேண்டுமென்று அவளுக்கும் தோன்றவில்லை...அதைத் துடைத்து விட வேண்டுமென்று அவனும் நினைக்கவில்லை...அந்த மாலை நேரத்து மயக்கம் அவர்களைச் சூழ்ந்து கொள்ள,மௌனமாகவே இருவரும் தங்களின் காதல் பாசைகளைப் பரிமாறத் தொடங்கினர்...உள்ளங்கள் அங்கே இடம்மாறிக் கொள்ள..உணர்வுகள் அங்கே சங்கமமாகிக் கொண்டன...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (2-Jan-18, 6:59 pm)
பார்வை : 610

மேலே