விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் - முத்தொள்ளாயிரம் 86

நேரிசை வெண்பா

புல்லாதார் வல்லே புலர்கென்பார் புல்லினார்
நில்லாய் இரவே நெடிதென்பர் - நல்ல
விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது. முத்தொள்ளாயிரம் 86 பாண்டியன் 34

பொருளுரை:

தழுவிக் கொண்டவர்கள் 'இரவே! நீண்ட நேரம் நின்று நீடித்திருப்பாயாக!' என வேண்டிக் கொள்வார்கள்.

தழுவிக் கொள்ளாத தலைவனும் தலைவியும் 'விரைந்து இரவு நீங்கிப் பொழுது புலர்க!' என்பார்கள்.

நல்ல வாசமிகு பலவித மலர்கள் கலந்து தொடுக்கப் பெற்ற மாலையை அணிந்த பாண்டியனின் வெண்சந்தனம் பூசப்பெற்ற மார்பு இரவு ஊடல் கொண்டு தலைவியைத் தழுவாததனால் தென்றல் காற்று பாண்டியன் மார்பைத் தொட்டது.

விளக்கம்:

புல்லாதார் - தழுவிக் கொள்ளாத தலைவன், தலைவி

வல்லே - விரைந்து, நில்லாய் இரவே - இரவே நிற்பாயாக

விராமலர் - மலர்க் கலவை

வளிப் பட்டது - தலைவியை இறுகத் தழுவிக் கொள்ளாததனால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் இருந்த இடைவெளியில் தென்றல் புகுந்து பாண்டியன் மார்பைத் தொட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-18, 3:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே