மூடிக்கிடக்கும் நூலகம்

தேடல்கள் மறந்த மனிதர்களின்
அறிவுக் கண்களை
புத்தகங்களில் மூடியபடி
சுகமாக உறங்குகிறது.

பசி பட்டினியின்றி
மகிழ்சிகரமாய் குடும்பம் நடாத்தும்
கறையான்களின் வ(வா)சிப்பிடமாக
புத்தக மாடி வீடுகள்.

வெளிப்பார்வைக்கு மனிதர்களின்
பழைய நூலமாக காட்சியளித்து
ஒவ்வொரு அறையிலும்
சிலந்திகளின் நூல் அகமாக..,

படிக்காதவர்கள்
பாராளுமன்றம் வரையிலும் செல்ல
படித்துப் படித்து வளர்த்த
அறிவிற்கு பதவியற்ற
வாசகர்களின் வயிற்றெரிச்சலை
வாங்கிக் கட்டிக்கொண்டு
நூலிழந்த பட்டமாய் அந்நூலகம்.

“உழைக்காமல் பணம் தேடுவதெப்படி?”
“பிடிபடாமல் களவெடுக்க சிலவழிகள்”
“படிக்காமல் பட்டம் வாங்குவோம்”
“களிப்பூட்டும் கள்ளக்காதல்”
“அரசியல்வாதியாகும் தகுதிகள்”
என்பது போன்ற புத்தகங்களை
அடுக்கிவைத்தால் அடுத்த நிமிடம்
மனிதமற்றவர்களால் நிரம்பிவழியும் நூலகமாகலாம்.

நாளைய உலகத்திற்கு நேற்றுகளின்
பேரறிவை விளைவிக்கும்
பொக்கிசமாய் பழமை படிந்து
அநாதரவாய் கிடக்கும் அந்நூலக
பூட்டுகள் திறவாதவரை
ஞான இருள் சூழ்ந்திருக்கும்
சமூகம் நமதென்பதை அது
பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jan-18, 2:21 am)
பார்வை : 111

மேலே