முடிவல்ல ஆரம்பம்

#முடிவல்ல ஆரம்பம்..!
முளைத்து இலை விரித்து
மொட்டு மலர் மணந்து
காயும் கனியென முதிர்ந்து
விதையாகி வீழ்ந்திடும் நேரம்
விதை முடிவென்று யார் சொல்லக்கூடும்
விதை விருட்சத்தின் ஆரம்பமாகும்..!
அதிகாலை கதிரவனும்
வெம்மை ஒளியுடனும்
கதிர் பாய்ச்சி அந்தி ஓயும்
அந்தியில் இருள்வந்து சூழும்
இருள் முடிவென்று யார் சொல்லக் கூடும்
இருள் மடிய விடியலின் ஆரம்பமாகும்..!!
கரு வறைஅமர்ந்து
மடி துஞ்சி தரை தவழ்ந்து
வளர்ந்து முதுமை கண்டு
பிறவி முடிகின்ற காலம்
மரணம் முடிவென்று யார் சொல்லக் கூடும்
மரணம் ஜனனத்தின் ஆரம்பமாகும்..!
வஞ்சம் சூழ்ச்சி கொண்டு
நல்லோர் உருக்கொண்டு
அயர்ந்த வேளையதில் வீழ்த்தும்
வீழ்ச்சியில் தோல்வி எட்டி பார்க்கும்
தோல்வி முடிவென்று யார் சொல்லக்கூடும்
தோல்வி வெற்றியின் ஆரம்பமாகும்..!
விதியென்றும் சதியென்றும்
வேதனை நிதம் கொல்லும்
எதிர்கொள்ள நம்பிக்கையில் எதுவும்
கற்றிடலாம் பாடங்கள் யாவும்
இடர் முடிவென்று யார் சொல்லக்கூடும்
இடர் விலக இன்பங்கள் ஆரம்பமாகும்..!
#சொ. சாந்தி-
ஒவ்வொரு மாதமும் "இலக்கியச் சோலை" பத்திரிக்கை திரு வ.உ.சி. அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் கவி அரங்கினை நடத்துவார்கள். அது பாலர் பள்ளிக்கூடமாக இத்தனை ஆண்டுகாலமாக விளங்கியது. அந்த கட்டிடம் பாழடைந்து விட்டதால் அதனை இடித்துவிட்டு புதியதாக கட்டடம் கட்ட இருக்கிறார்கள் என்பதால் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி கடைசி கவியரங்கம் என்று கூறி "முடிவல்ல ஆரம்பம்" என்கிற தலைப்பில் கவிதைகளை பல கவிஞர்கள் வாசித்தார்கள். வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் என்னால் கடைசி என்று கூறப்பட்ட கவி அரங்கில் கலந்து கொள்ள இயலாமல் போனது குறித்து வருத்தமே. இத்தலைப்பினை அளித்து கவிதை எழுத பணித்த திரு சோலைத் தமிழினியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்னைப் பொறுத்தவரை இது கடைசி கவி அரங்கம் இல்லை. இடம் மட்டும் மாறும் என்றே தோன்றுகிறது என்றாலும் மனது சங்கடப் படுகிறது. கவி அரங்கில் கலந்துகொள்ள இயலாது போனாலும் இந்த தலைப்பில் எப்படியும் எழுத வேண்டும் என்று எழுதினேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது போய்விட்டது. கவிஞர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் திரு தமிழினியன் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.