மெய்நன்றி
வாவென்று நான்ஒன்றும் காத்திருக்கவில்லை
நீவென்று முடிசூட எனை ஈன்று கொண்டாய்.
சாவொன்று வரும்வரையில் உன்னோடே வாழ்க்கை
தூவென்று துப்பிவிட நான்ஒப்ப மாட்டேன்.
‘ஆ’ வென்று வாய்பிளந்து நான்பார்த்த பேர்கள்
யார்வென்று வந்தவனாம்? அடடாவோ என்றார்!
புகழ்வென்று சிறந்திடவே கனவுதாசன் பிறந்தேன்!
போர்வென்று வருவதுபோல் கவியுலகில் புகுந்தேன்
‘ச்சீ’ வென்று விட்டானே சிலபேர்கள் நினைத்தார்!
யார்வென்றால் எனக்கென்ன? அசடுகளும் நினைத்தார்
வாய்மென்று பார்த்திடவா உனைக்கற்றேன் தமிழே!
வாழ்வொன்று பெற்றிடவே வாழ்வொன்று கண்டேன்.
பூவொன்றில் வண்டுறிஞ்சும் போல்உறிஞ்சி வந்தேன்!
தாய்வென்றாய் நான்வென்றேன் தகுதியினால் வென்றோம்!
சேய்வென்று பார்ப்பதிலே தாய்நின்று மகிழ்ந்தாய்
செய்நன்றி நான்மறவேன் மெய்நன்றி தாயே!