தொலைந்த என் கிராமம் தேடி

சேறுகொண்ட கழனியாண்ட சோழமன்னனின் சொர்க்கபூமி
வேரறுந்த கிழமரமாய் வாழமறந்த எங்கள்பூமி...


"குரும்பலூர் கிராமம்"


ஐந்திணை நிலம்கோர்த்த பைந்தமிழ் வளம்சேர்த்த
முந்தையகாலம் உலவிவந்த மாந்தர்கலை தளர்ந்துபோனது...!


வயல்வெளி நீந்தித்தவழும் வறண்டிடா பூமிதனில்
உயர்தொழில் உந்திமகிழ்ந்த அறம்சொல்லும் அந்நாளில்...


கிணறூறும் நிலத்திட்டில் நின்றாடும் சிறுமீன்கள்
காணக்கிட்டா கருநண்டும் வளைந்தாடும் கண்மாய்கரையில்...


பசுந்தளிர் போர்த்திநிற்க பசுநாவில் உமிழ்சுரக்கும்
விசும்பியழும் கார்முகிலில் விசுவாசம் வணங்கிநிற்கும்...

கத்திமுனை துளைத்தெடுக்க உடற்குருதி ஓடுவதுபோல
கலப்பைமுனை வளைத்துழுது அடர்ந்தோடும் உயிர்நீர்...


உடலோடு ஒட்டியமண் திருநாளும் உலர்ந்ததில்லை
திடலோரம் கட்டியகாளை ஒருநாளும் நலிந்ததில்லை...

பசியெனும் பஞ்சவார்த்தை மந்தைமாடும் பழகியதில்லை
மசித்துண்ட கஞ்சிசோறு சந்தைநிற்க புழங்கியதில்லை...

நெருகரையான் பசியாற்ற எருதுழுத ஏர்கலப்பை
கருவிளைத்த விளைமண்ணில் மறுபிறவியா வளர்மனைகள்...?

வற்றியநிலம் பற்றிடாமழை கற்றிடாவறுமை பெற்றிடாதுயரென
தொற்றியபசி சுற்றிடாநகர் முற்றிடாநிலை வெற்றிகாணுமா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Jan-18, 9:05 pm)
பார்வை : 101

மேலே