கண்ணாமூச்சி ஆட்டம்

#கண்ணாமூச்சி ஆட்டம்
மேகத்திரை
நிரந்தரமற்றது என்று
அறிந்திருக்கவில்லை
அந்த நிலவு..!
கடந்து செல்லும்
மேகங்களை இழுத்து
மறைந்து கொள்கிறது
பூமிக்கு முகம் காட்டாமல் ..!
உந்தித்தள்ளும் காற்று
அறிவதில்லை
நிலவு ஒளிந்து கொள்வதை..!
மேகத்தை
தர தரவென்று இழுத்துக்கொண்டு
ஓடிவிடுகிறது
தான் செல்லும் திசையில் எல்லாம்
காற்று..!
குப்பல் குப்பலான மேகங்கள்
இப்படித்தான்
நிலவின் கண்ணாமூச்சி
ஆட்டத்திற்கு
கண் கட்டு துணியாகிவிடுகிறது..!
நிமிடங்களில்
நிலா முகத்தின் கட்டவிழ்த்து
மேகமும்தான்
சந்தடி சாக்கில்
கண்ணாமூச்சி ஆடி விடுகிறது..!
வெட்ட வெளிச்சமாக்கிவிட்டு
போகும் மேகத்தை
நிலவு கடிந்து கொண்டதாய்
தெரியவில்லை..!
மழைக் கால
கண்ணா மூச்சி ஆட்டத்தில் மட்டும்
நிலவை கண்டுபிடிக்க முடிவதே இல்லை
பூமியால் மட்டுமில்லை
மேகத்தால் மட்டுமில்லை
எவராலும்தான்..!
#சொ.சாந்தி